Saturday, September 17, 2011

சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுக்கள் பிரச்சினைகளில் இருந்து இலங்கையை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது-ஜாதிக ஹெல உறுமய!

Saturday, September 17, 2011
சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளில் இருந்து இலங்கையை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது. உள் நோக்கங்களுடன் செயற்பட்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு துணை போனால் இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்க நேரிடும் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இலங்கையில் மீண்டும் இனங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தி நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கின்றது. எனவே நாட்டின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும் ஊடக செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில், வடக்கில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாகவும் அங்கு தமிழ் பொலிசாரை ஈடுபடுத்துமாறும் தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார். இதனை ஜாதிக ஹெல உறுமய மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் தவறான தகவல்களினாலேயே மேற்படி பிரச்சினைகளும் குற்றச்சாட்டுக்களும் வெளிப்படுகின்றன.

அமெரிக்காவிற்கு இலங்கை தொடர்பாக ஒன்றுமே தெரியாது. போலிக்குற்றச்சாட்டுக்களை சுமத்தி நாட்டில் பிளவுகளை ஏற்படுத்துவதே நோக்கமாக உள்ளது. எவ்வாறாயினும் வடக்கு உட்பட நாட்டில் எப்பிரதேசத்திலும் இராணுவம் பொலிஸாரைத் தவிர வேறு எந்த ஆயுதக்குழுக்களும் இல்லை.

இன்று சர்வதேசம் இலங்கையை போர்க் குற்றச்சாட்டு பொறிக்குள் சிக்க வைக்க முயற்சிக்கின்றது. போலிக் குற்றச்சாட்டுக்களின் ஊடாக நாட்டை அபகீர்த்திக்குள் உள்ளாக்க முயற்சிக்கின்றது.

இந்த விடயத்தில் இந்தியாக இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அயல் நாடு என்ற வகையிலும் நீண்ட கால உறவு என்ற ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாகவே அமைகின்றது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இந்தியா தனது நோக்கங்களை சாதித்துக் கொள்ள நினைத்தால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment