Friday, September 02, 2011
நாகர்கோவில் : இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு இந்திய அரசால்தான் தீர்வு காண முடியும் என்று இலங்கை எம்.பி. சீனிதம்பி யோகேஸ்வரன் கூறினார்.
இலங்கை மட்டக்கிளப்பு எம்.பி. சீனிதம்பி யோகேஸ்வரன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் உள்ள 2 கோடி மக்களில், 29 லட்சம் பேர் இந்துக்கள். இலங்கையின் பூர்வீக மதம் இந்து மதம் தான். பின்னர் தான் பவுத்தர்கள் அங்கு குடியேற தொடங்கினர்.
தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று 1952ல் அகிம்சை வழியில் போராட்டத்தை தொடர்ந்தனர். அதன் பின்னர் போடப்பட்ட ஒப்பந்தங்களை இலங்கை அரசு மதிக்க வில்லை. அதனால் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினர். 31 வருட போராட்டம் கடந்த 2009 மே 18ம்தேதி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் முகாம்களில் அமர்த்தப்பட்டனர். இந்த போரின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போனார்கள். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
யுத்தம் முடிவுற்றதால், இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இலங்கை அரசுடன் 10 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் இலங்கை அரசு நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் பேச்சு வார்த்தை பாதியில் நிற்கிறது.
அங்குள்ள பிரச்சினைக்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தான் தீர்வு காண முடியும். இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடு கட்டி கொடுக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது. ஒன்றரை வருடங்கள் ஆகியும், ஆயிரம் வீடுகள் கூட முழுமையாக கட்டி கொடுக்கப்படவில்லை. இந்திய அரசு வழங்கும் உதவிகள் முழுமையாக தமிழர்களை போய் சேரவில்லை. தற்போது இலங்கையில் அவசர கால தடை சட்டத்தை விலக்கி கொள்வதாக இலங்கை அரசு அறிவித்தாலும் கூட, எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பயங்கரவாத தடை சட்டத்தை பலப்படுத்தும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு வேகப்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இலங்கை தமிழர்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தேர்தலுக்கு பிறகும் கூட இலங்கை தமிழர்களுக்காக சட்டசபையில் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு சீனிதம்பி யோகேஸ்வரன் கூறினார்.
No comments:
Post a Comment