Friday, September 9, 2011

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு யாழ். மாநகரசபைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு!

Friday, September 09, 2011
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு யாழ். மாநகரசபைக் கூட்டத்தில் நேற்றுக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் ஆணையாளரின் இந்த முடிவைத் ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியைக் கோருவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ். மாநகர சபையில் 8 ஆவது கூட்டம் நேற்று முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மேற்படி பிரேரணையை யாழ். மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.விஜயகாந்த் முன்வைத்து உரையாற்றினார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களின் உறுப்பினர்கள் கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காகத் தற்காலிகமாக வெளியூரிலும் மற்றும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்களுடைய விவரங்களை திருத்தப்பட்ட வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்படவில்லை.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கடந்த ஆண்டின் வாக்காளர் இடாப்பு உண்மையில் முழுமையானதல்ல. அந்த இடாப்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஏராளமான குடும்பங்களின் விவரங்களை இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகி கொண்டிருக்கிறது. வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பாக போதிய தகவலோ அறிவூட்டலோ மக்குக்கு கிடைக்கவில்லை.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளம், மன்னார், கொழும்பு மாவட்டங்களில் வாழ்கிறார்கள். அம்மக்களில் புதிய வாக்காளர்களையும் சேர்த்து மதிப்பிட்டால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் தேர்தல் ஆணையாளரின் வாக்காளார் இடாப்பில் இல்லை.எனவே இதில் ஜனாதிபதி தலையிட்டு தேர்தல் ஆணையாளரின் முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். விஜயகாந்தின் இந்தப் பிரேரணை சபை உறுப்பினர்களின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

No comments:

Post a Comment