Tuesday, September 20, 2011

எந்தப் பக்கத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் அரசு முன்வைத்த காலைப் பின் வைக்காது:அரசு தீர்வை முன்வைத்தே தீரும்-டியூகுணசேகர!

Tuesday, September 20, 2011
எந்தப் பக்கத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் அரசு முன்வைத்த காலைப் பின் வைக்காது. நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் அரசு முனைப்பாகவே இருக்கிறது.எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை புறக்கணிக்காது அதில் பங்குகொண்டு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார் சிரேஷ்ட அமைச்சர் டியூகுணசேகர.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் உதயனிடம் இதனைத் தெரிவித்தார். அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற 11ஆவது சுற்றுப் பேச்சின் 13ஆவது திருத்தத் துக்கும் அப்பால் சென்று தீர்வு காண இரு தரப்பினரும் இணங்கினர். ஆனால், ஜனாதிபதி நாட்டில் இல்லாத வேளையில் அரசில் இருக்கும் தீவிரவாதப் போக் குடைய அமைச்சர்கள் சிலர் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கடைசி வரை இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் டியூ குணசேகரவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நான் ஆரம்பம் முதலே இனப்பிரச்சினைக்கு பேச்சுகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் அப்போதே 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவன். நான் சிறுபான்மை மக்களுடன் நிற்பவன். அவர்களின் ஆதரவைப் பெற்றவன் என்றார் அமைச்சர். அவர் மேலும் தெரிவித்ததாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு தீர்வை முன்வைத்தால் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சி முன் வைத்தால் ஸ்ரீ.ல.சு. கட்சி எதிர்க்கும். இவை இரண்டும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டால் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்யும். இதுதான் எமது அரசியல் நிலைப்பாடு.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்தார். அதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தனர். நாடாளுமன்றத்தில் வைத்தே எதிர்த்தனர். இதனால் அந்த முன்னெடுப்பு தடைப்பட்டது. அன்று ஐ.தே.க. ஆதரவளித்திருந்தால் அன்றே பிரச்சினை தீர்ந்திருக்கும் என்றார் அமைச்சர்.

முன்பு எதிர்தரப்பினர்களாலே எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. ஆனால் இப்பொழுது அரசுக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இதற்கு என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் எல்லா விடயங்களிலும் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. ஒரு சிலர் சத்தம் போடத்தான் செய்வார்கள். அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது. இன்று அரசுக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இப்படியான சிலரின் கூற்றுக்களைக் காரணம் காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தைரியப்படக்கூடாது. ஜனாதிபதி முன் மொழிந்துள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டணியினர் கட்டாயமாகப் பங்குபற்ற வேண்டும். அங்கே தமது கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டணியின் பங்கு இல்லா விட்டால் அது தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு கூட்டணியினர் காரணமாகிவிடக் கூடாது என்றார் அமைச்சர் டியூகுணசேகர.

No comments:

Post a Comment