Monday, September 26, 2011

தமிழர் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் - ராம்!

Monday, September 26, 2011
இலங்கையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென ஹிந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

புறச்சக்திகளினால் திணிக்கப்படும் தீர்வுத்திட்டமொன்று எமக்கு தேவையில்லை. எனினும் தீர்வுத் திட்டமொன்று அவசியம். அது உள்ளுர் ரீதியான தீர்வாகவோ அல்லது வெளிநாடு ஒன்றின் தலையீட்டுடன் கூடிய தீர்வாகவோ இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

எனினும் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார்.

பூனை கறுப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் எலிகளை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்ற சீனத் தலைவர் டெங் ஸியாம்பொங்கின் கருத்தை ராம் உதாரணம் காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்திய இலங்கை சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான புதிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பகமானதும், முதன்மையானதுமான தமிழ் பிரதிநிதித்துவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டியது முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1983ம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் பாரியளவு விருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment