Monday, September 19, 2011

தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வை அரசு முன்வைக்குமென்று எதிர்பார்க்கவில்லை-புளொட் தலைவர் சித்தார்த்தன்!

Monday, September 19, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் சிறீலங்கா மிரர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கட்டாயம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சர்வதேசம் ஒரு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பேச்சுவார்த்தை ஒன்று இல்லாமல் ஒரு பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது. இன்று தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் எல்லாவிதத்திலும் நாங்கள் மிகவும் ஒரு பலவீனமான நிலையிலே இருக்கின்றோம்.

சர்வதேச அழுத்தங்களும் அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கப்படுகின்ற இந்த வேளையிலே பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதன்மூலம் ஒரு தீர்வை நோக்கிய நகர்வைக் கொண்டுபோகலாம் என்று சர்வதேசத்தினால் நம்பப்படுகின்றது. அரசாங்கம் தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நியாயமான தீர்வை முன்வைக்குமென்று எவருமே எதிர்பார்க்கவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் அரசாங்கம் அதை உடனடியாக செய்யுமென்று நிச்சயமாக எந்தவொரு தமிழ்மகனும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இன்று இருக்கின்ற சூழ்நிலையிலே பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பு போவதற்கு மறுப்புக் கூறினால் அரசுக்கு மிகவும் ஒரு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுப்பதாக அமைந்துவிடும். அதாவது தமிழர் தரப்புத்தான் பேசுவதற்கு மறுக்கிறார்கள் ஆகவே நாங்கள் எதுவுமே செய்யமுடியாது, இதனை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எடுத்துச் செல்லுகின்றோம் என்கிற கதைகளை அரசாங்கம் கூறுவதற்கு வாய்ப்பைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.

ஆகவே பேச்சுவார்த்தை நிச்சயமாக முன்னெடுக்கப்படத்தான் வேண்டும். பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம்தான் அரசாங்கத்தின் உள்முகத்தை வெளியிலே காட்டமுடியும், அல்லது காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும். அதாவது அவர்கள் எவ்வாறு தொடர்ந்தும் தமிழ் மக்களுடைய உரிமைகளை மறுத்து வருகிறார்கள் என்பதையும், இத்தகைய அவர்களுடைய நிலைப்பாட்டினையும் வெளிக்கொணர முடியும். ஆகவே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதை என்னைப் பொறுத்தமட்டில் சரியான விடயமாகவே கருதுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment