Sunday, August 28, 2011

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரில் ஒருவருக்கு புழல் சிறையில் தூக்கு?

Sunday, August 28, 2011
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரில் ஒருவரை, புழல் சிறையில் தூக்கி லிடலாம் என்று கூறப்படுகிறது.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும், தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளிடம் சிறைத் துறை டிஐஜி வழங்கியுள்ளார்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் 2 பேரை மட்டுமே தூக்கிலிட வசதி உள்ளது. ஆனால், 3 பேரை தூக்கில் போட வேண்டியதிருப்பதால், அவர்களில் யாராவது ஒருவரை வேறு சிறையில் தூக்கிலிடலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேலம் அல்லது புழல் சிறையில் ஒருவருக்கு தண்டனையை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், புழல் சிறையில் தண்டனையை நிறைவேற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புழல் சிறையில் தூக்கு மேடை நவீன வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அதில் தான் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் சிறைத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தூக்கு தண்டனை குறித்து ஓய்வுபெற்ற சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் செயல். மனப்பதற்றத்துடன் குற்ற உணர்வும் ஏற்படும். தூக்கு தண்டனையை நிறைவேற்றும் எவரும், முழு மனதுடன் அதை செய்வதில்லை’’ என்றார்.
இந்நிலையில், புழல் சிறைற அதிகாரிகளும் தயாராக இருக்குமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. ராஜீவ் காந்தி என்ற ஒரு சாதாரண மனிதனின் மரணத்திற்காக லட்சக் கணக்கான உறவுகளை இழந்த துக்கம் இன்னும் எங்கள் நெஞ்சை அடைத்து நிற்கிறது...! இந்த நேரத்தில், இப்படி ஒரு இடி போன்ற செய்தி எங்களை இன்னும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறது...! ஒரு மனிதனின் உயிருக்கு இத்தனை முக்கியத்துவம் என்றால்.... எங்கள் ஒரு லட்சம் உயிர்களுக்கு எத்தனை ராஜபக்ஷவை, சோனியாவை, சிவசங்கரமேனனை நாங்கள் தூக்கில் இடுவது....? தமிழனின் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது...! அரசுகள் இதை சோதித்து பார்க்க வேண்டாம்....!

    ReplyDelete