Wednesday, July 20, 2011எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சுதந்திரமான தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பாரிய பொறுப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு உண்டு. அதற்கேற்ற விதத்திலேயே தாம் செயற்பட்டு வருகின்றோம்.
கட்சி,இன, மதங்களுக்கு அப்பால் வன்முறையில் ஈடுபடும் சகலருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே 106 பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.
தேர்தல் வன்முறை சம்பவங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 25 வாகனங்களையும் நாம் மீட்டுள்ளோம். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அவ்வவ் பொலிஸ் நிலையங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
பிரசார நடவடிக்கைகளின் போதோ அல்லது வேறு சந்தர்ப்பங்களின் போதோ வன்முறைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment