Sunday, June 29, 2014
சென்னை::சென்னை போரூர் அருகே 11 மாடி அடுக்குமாடி கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 80 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்த போரூர் குன்றத்தூர் சாலையில் மவுலிவாக்கம் பகுதியில் பாய் கடை பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் மதுரையை சேர்ந்த மனோகரன்(46) என்பவர் ‘டிரஸ்ட் ஹைட்ஸ்’ என்ற பெயரில் 11 மாடிகள் கொண்ட இரு அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருகிறார். இந்த 2 அடுக்குமாடி கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வருகிறது. கட்டிட பணியில் மதுரை மற்றும் ஆந்திரா, பீகார் மாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள், தங்குவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்படாததால், அதே கட்டிடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர். சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று மாலையில் திடீரென்று பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்தது.
சூறைக்காற்றும் வீசியது. போரூர் பகுதியில், பலத்த இடி சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் அப்பகுதியில் பெரிய நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம், தரைத்தளத்தில் கார் பார்க்கிங்குடன் சீட்டு கட்டுகள் போல இரண்டாக பிளந்து, சரிந்து விழுந்தது. இதில், 4 தளங்கள் பூமிக்குள் புதைந்து விட்டது. மழை பெய்தபோது, இடிந்து விழுந்த கட்டிடம் மற்றும் வேறொரு கட்டிடத்தில் வேலைபார்த்த 80 பேர் கீழே இறங்கி, கார் பார்க்கிங்கில் மழைக்கு ஒதுங்கினர். 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த ஒருவரால் கூட இடிபாடுகளில் இருந்து வெளியே தப்பி வர முடியவில்லை. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் அபாய குரல் மற்றும் கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். காவல்துறை, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், 12 ஆம்புலன்ஸ், மெட்ரோ, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள், நர்சுகள் சம்பவ இடத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் என மொத்தம் 1000 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். இதில், மதுரையை சேர்ந்த மருதுபாண்டியன் (32) மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்ற 8 பேரும் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல பிரபல கட்டுமான நிறுவனமான எல்.-.டி.யை சேர்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் 60 ஊழியர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை கமாண்டோ படை டி.எஸ்.பி இளங்கோ மற்றும் ஸ்டீபன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு குழுவினர் மோப்ப நாய் மற்றும் சிறப்பு நவீன கருவிகளுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் என்பதாலும், பலத்த மழை பெய்ததாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், மீட்பு பணியை துரிதப்படுத்த சரியான திட்டமிடுதல் இல்லாததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி மருதுபாண்டி, சுசீலா, சங்கர், சத்தியலெட்சுமி, பாண்டி உள்ளிட்ட 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கருதப்படும் 40க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை. கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய, மாநில பொறியாளர்கள் கூறுகையில், “இந்த அடுக்குமாடி கட்டிட விபத்தில் 4 மாடிகளுக்குமே பூமிக்குள் புதைந்து காணப்படுகிறது. மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் மீட்பு பணி நடைபெற்றால் தான் இடிபாடுகளை அகற்றமுடியும். எனவே, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதுÕÕ என்றனர். அமைச்சர்கள் சின்னையா மற்றும் உதயகுமார் நேற்று முதல் விபத்து நடந்த இடத்தில் தங்கியிருந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். எனினும், அவர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசுவதை தவிர்ப்பதுடன், மீட்பு பணிகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மாநில நிவாரண ஆணை யாளர் ஸ்ரீதரன் கூறுகையில், கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டிருந்தால் அரசு விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் குறித்து அரசுடன் பேசி முடிவு செய்யப்படும்Õ என்றார்.