Saturday, June 28, 2014

இலங்கை தமிழர்கள் வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்தோம் போலி பாஸ்போர்ட் கும்பல் பரபரப்பு வாக்குமூலம்!

Saturday, June 28, 2014
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாததால் அவர்களில் பலர் வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு  உதவ நாங்கள் போலி விசா, பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கிறோம் என்று போலி பாஸ்போர்ட் கும்பல் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளது.போலி விசா,  பாஸ்போர்ட் தயாரித்து பலரை தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்பியதாக சென்னை ஆலப்பாக்கம் ராஜன் (42), புரசைவாக்கம் முகமது அபுபக்கர் சித்திக்,  மூர்த்தி, ஆலப்பாக்கம் சிவரங்கன் (55), திருவான்மியூர் தேவ சகாயம் பேட்ரிக் ஸ்ரீதர் (48), மதுரவாயல் ஜெயராஜ சேகரன் என்ற ஜூலி (29) ஆகிய 6 பேரை கடந்த சில  தினங்களுக்கு முன்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
 
இதில், முகமது அபுபக்கர் சித்திக் தவிர மற்ற 5 பேரும் இலங்கை தமிழர்கள். மூர்த்தி  மூளையாக செயல்பட்டுள்ளார். இவர்கள் போலி விசா மற்றும் பாஸ்போர்ட் தயாரித்து சுமார் 400 பேரை கனடா, ஆஸ்திரேலியா உள்பட 53 நாடுகளுக்கு அனுப்பி  வைத்ததை ஒப்புக்கொண்டனர். ஒரு போலி பாஸ்போர்ட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரையும், விசாவுக்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரையும் வசூல் செய்துள்ளனர்.மோசடி கும்பல் பெரும்பாலும் இலங்கை தமிழர்களுக்கே போலி விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளனர். இப்படி போலி விசா மற்றும்  பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர்களின் பட்டியலை தயார் செய்யவும், இதற்கு உடந்தையாக இருந்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளை அடையாளம்  காணவும் போலீசார் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து மோசடிக்கு உடந்தையாக உள்ளவர்களை அடையாளம் காணுவதற்காக, சிறையில் உள்ள 6 பேரையும் போலீசார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.  அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், “இலங்கை தமிழர்களுக்கே அதிகமான போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை தயார் செய்து கனடா, ஆஸ்திரேலியா உள்பட  53 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு போதிய சலுகைகள் இல்லை என்ற காரணத்தால் தமிழகத்தில் அவர்கள் அகதிகளாக  வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். சென்னையை பொருத்தவரை 25  ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் இந்தியாவில் சொந்தமாக நிலம் கூட வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தாலும்  குடியுரிமை கிடைக்காது.
 
ஆனால், ஆஸ்திரேலியா, லண்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முறையான ஆவணம் இல்லாமல் சென்றால் கூட அவர்கள்  எங்களை முதல் இரண்டாண்டுகள் அகதிகள் என்று கூறி கைது செய்து முகாம்களில் அடைக்கின்றனர். பின்னர், விடுதலை செய்து எங்களுக்கு குடியுரிமை  வழங்குகின்றனர். இதனால், தமிழகத்தில் வாழ விருப்பம் இல்லாமல் அது போன்ற நாடுகளுக்கு செல்ல பல இலங்கை தமிழர்கள் விரும்புகின்றனர். சிலர் கள்ள படகு  மூலம் கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்கின்றனர். இதற்கான பயண நாட்கள் 22. உயிரை கையில் பிடித்து பயணம் செய்து சிலர் தப்பி செல்கின்றனர். அதில்,  செல்ல மனம் இல்லாதவர்களுக்கு நாங்கள் போலி விசா, பாஸ்போட் தயாரித்து கொடுக்கிறோம் இதில், என்ன தவறு“ என்று ஆவேசமாக கூறியதாக போலீசார்  தெரிவித்தனர்.

No comments:

Post a Comment