Saturday, June 28, 2014
இலங்கை::அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைக்கும் பணிகள் இன்று (27) முதல் ஆரம்பமானது.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க முழுமையான புனரமைப்பு பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன், இதற்கென இராணுவத்தின் பொறியியல் பிரிவைச்சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற சுமார் 700ற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் புனரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
முழுமையான மற்றும் பகுதியளவில் என இரண்டு வகைகளாக பாதிக்கப்பட்ட 94 வீடுகள், 137 வியாபார நிலையங்கள் அடையாளங்காணப்பட்டு புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தவர்களினதும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுமே இவ்வாறு புனரமைக்கப்படவூள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றில் முழுமையாக பாதிக்கப்பட்ட 27 வீடுகள் மற்றும் 47 வியாபார நிலையங்களும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட 67 வீடுகள் மற்றும் 90 வியாபார நிலையங்களும் அடங்குவதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.
இந்த புனரமைப்பு பணிகளுக்கு அரசாங்கம் திரைசேரி, மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி துரிதமாக இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார்.
இதேவேளை, மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல தலைமையில் நேற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தீவைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று பார்வைட்டதுடன் முதற் கட்டமாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment