Saturday, June 28, 2014

மாலைதீவு நாட்டின் பாதுகாப்புத்துறையை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தின் பயிற்சி!

Saturday, June 28, 2014
இலங்கை::மாலைதீவு நாட்டின் பாதுகாப்புத்துறையை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் இலங்கையின் அனுபவங்கள், பயிற்சி மற்றும் உதவி ஒத்துழைப்புக்களை வழங்கி உதவுமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கேர்ணல் மொஹமட் நந்ம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் குரும்பா தீவிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்குள்ள சுற்றுலா விடுதியில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய போதே மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு முக்கிய தேவையாகவுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் ஜனாதிபதிக்குத் தெளிவு படுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், படையினருக்கான பயிற்சிகள் உட்பட பல பிரிவுகளில் தற்போது இலங்கை வழங்கி வரும் உதவிகளுக்கு மேலதிகமாக மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோள் தொடர்பிலும் ஆராய்ந்து முடியுமான அளவில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் இணக்கம் தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறையில் இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டு தெரிவித்தார். இந்து சமுத்திரத்திலுள்ள நாடுகள் என்றவகையில் அன்னியோன்யம் மற்றும் உதவிகளுக்கப்பால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை சம்பந்தமான ஒத்துழைப்புகள் முக்கியமானதாகும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார்.

கடலில் விபத்துக்களில் அகப்படுவோரை தேடுதல் மற்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கை இடர் முகாமைத்துவம், சமுத்திர மாசடைதலைத் தடுத்தல் தமது படையினருக்கு இலங்கையில் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் கல்வி மற்றும் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்ளுதல், படையினருக்கான மருத்துவ முகாம் அமைப்பது, கடற்பிராந்திய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறையினருக் கிடையிலான ஒத்துழைப்பு போன்றவற்றை மாலைத்தீவு அரசாங்கம் இலங்கையிட மிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வெளிநாட்டு சக்திகள் நாடுகளை வீழ்ச்சியுறச் செய்வதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்தவகையில் மாலைதீவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அதற்குட்பட்ட படைகளுக்கு விமான யுத்த பயிற்சிகளை வழங்குமாறும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமது கடற்படையினருக்கான படகுகளை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் வினவிய மாலைதீவு பாதுகாப்பமைச்சர் அதற்கான உதவிகளை இலங்கை வங்கி மூலம் மேற்கொள்வது தொடர்பிலும் ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளார். 

No comments:

Post a Comment