Friday, June 27, 2014

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தானுக்கு விமான சேவையை நிறுத்திய சர்வதேச நிறுவனங்கள்!

Friday, June 27, 2014
பெஷாவர்::பாகிஸ்தானில் விமான நிலையங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் கடந்த 8ம் தேதி உள்ளே புகுந்த 10 தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். சுமார் 5 மணிநேரம் அந்த விமான நிலையத்தை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர்.
 
தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடியில் 10 பேரும் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெஷாவர் நகரில் தரையிறங்கிய விமானத்தின் மீது விமான நிலையத்திற்கு வெளியே இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
பெஷாவரில் விமான நிலையத்திற்கு வெளியே இருந்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியிருந்ததால், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் கண்காணிக்க முடியாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். இதனால், சர்வதேச விமான நிறுவனங்கள் பெஷாவருக்கு விமான சேவை அளிக்க தயக்கம் காட்டி வருகின்றன. இதனையடுத்து பெஷாவருக்கு இயக்கி வந்த சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
 
அதே போல் ஹாங்காங்கின் கதே பசிபிக் நிறுவனம் பாகிஸ்தானுக்கு இயக்கப்படும் அனைத்து சேவைகளையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் எமிரேட்ஸ், எதிகாட், கத்தார் போன்ற நிறுவனங்களும் பெஷாவருக்கான தங்களது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெஷாவரில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு தவித்து வருகிறது என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment