Friday, October 31, 2014

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை திஹார் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு சுப்பிரமணியம் சாமி வேண்டுகோள்!

Friday, October 31, 2014
சென்னை::போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்தியாவின் திஹார் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாரதீய ஜனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீதான மரண தண்டனை குறித்து தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்திர் கருத்து தெரிவித்துள்ள சாமி, '2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்களை திஹார் சிறைக்கு மாற்றி, அங்கு கொண்டு சென்ற பின்னர் இந்திய உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இதுதொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்' என்று கூறியுள்ளார் சுப்பிரமணியம் சாமி.

போதை பொருள் கடத்திய 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் நடவடிக்கை

Friday, October 31, 2014
சென்னை, போதை பொருள் கடத்தியதாக கூறி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் லாங்லெட், பிரசாத், எமர்சன், வில்சன், அகஸ்டஸ் ஆகிய 5 பேருக்கு இலங்கை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.
 
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி, ராமேஸ்வரத்தில் நேற்று மாலையில் போராட்டம் வெடித்தது.
 
சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ரெயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டு தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் நேற்று இரவு ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
 
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அங்கு அமைதி திரும்பி வருகிறது.
 
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 13 கடலோர மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இது தொடர்பாக கடலோர மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட முல்லைத்தீவு தமிழ் இளைஞர்கள் பயிற்சிகளை முடித்துக் வெளியேறினர்}

 Friday, October 31, 2014
இலங்கை:முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 46 தமிழ் இளைஞர் தமது மூன்று மாதகால பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் வெளியேறினர். பயிற்சிகளை முடித்துக் கொண்ட இவர்களுக்கான பிரியாவிடை வைபவம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் நான்காவது காலாற்படை பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஜனத் பிரேமதிலக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறந்த திறமைகளை வெளிக்காண்பித்த வீரர்களுக்கான கேடயங்களையும் வழங்கி வைத்தார். பிரியாவிடை மரியாதை அணிவகுப்புடன் பயிற்சிகளை முடித்து வெளியேறும் தமிழ் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றன இவை பார்பவர்களுக்கு கண்கவரும் வகையில் அமைந்திருந்தது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் பூரண வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய இவர்களுக்கு மூன்று மாதகால வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் இராணுவ படைப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள், பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறிய தமிழ் இளைஞர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பலந்து கொண்டனர்.

5 பேருக்கு தூக்கு தண்டனை: 10 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்}

Friday, October 31, 2014
ராமேசுவரம்}ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்ட்ஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களை நடுக்கடலில் கைது செய்த இலங்கை கடற்படையினர் ஹெராயின் போதை பொருளை கடத்தி வந்ததாக வழக்கு தொடர்ந்தனர்.

இவர்களோடு இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பு உயர்நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேர் உள்பட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

இந்த தகவல் நேற்று மாலை 3.30 மணிக்கு தங்கச்சிமடம் மீனவர்களுக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், ராமேசுவரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மீனவப் பெண்கள், குழந்தைகள் என மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்ததால் போராட்டம் வலுப்பெற்றது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் வன்முறையில் இறங்கினர். சாலையோரம் இருந்த டிரான்ஸ் பார்மர்களுக்கு தீ வைத்த அவர்கள் குடிநீருக்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்களை உருட்டி ரோட்டில் தடை ஏற்படுத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

இதற்கிடையில் அக்காள் மடத்தில் இருந்து வேர்க்கோடு நோக்கி அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை மறித்த மீனவர்கள் பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பின்னர் அந்த பஸ்சுக்கு தீ வைத்துவிட்டனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த போக்குவரத்து அறிவிப்பு பலகைகளை பிடுங்கி சாலையின் நடுவே போட்டனர். அதன்மீது பழைய டயர்களை போட்டு தீயும் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாகவும், நெருப்பு மயமாகவும் காட்சியளித்தது.

ஒரு பிரிவினர், ரெயில் தண்டவாளங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம் வரவேண்டிய ரெயில்கள் மண்டபம், ராமநாதபுரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டன. ராமேசுவரத்தில் இருந்து செல்ல வேண்டிய ரெயில்களும் நிறுத்தப்பட்டன. தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதால் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உருவானதை தொடர்ந்து பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இரவு 10.30 மணிக்கு மேல் அன்வர் ராஜா எம்.பி., மாவட்ட கலெக்டர் நந்தகுமார், காவல் கண்காணிப்பாளர் மயில் வாகணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாத்தை நடத்தினர்.

அப்போது மீனவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு எழுதிய அவசர கடிதத்தை மீனவர்களிடம் அன்வர் ராஜா எம்.பி. காண்பித்தார். 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து அரசு சார்பில் உடனடியாக அப்பீல் செய்யப்படும் மத்திய அரசு மூலம் இலங்கை அரசுடன் பேசி துரித நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் மீனவர்கள் குழுவை டெல்லிக்கு அழைத்து செல்கிறேன் என அவர் உறுதி அளித்தார். இதனை ஏற்று இரவு 11.45 மணியளவில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன்பிறகு மெல்ல.. மெல்ல... இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதன் காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இருப்பினும் பதற்ற நிலையை கண்காணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ரெயில் தண்டவாளமும் சீரமைக்கப்பட்டதால் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு செல்லும் 1500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தப்பட்டன. சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்களையும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும்.

மீனவர்களுக்கு தூக்கு: இலங்கை தூதரகம் முற்றுகை- 300 பேர் கைது!

 Friday, October 31, 2014
சென்னை,இலங்கை கோர்ட்டு 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பொதுச் செயலாளர் எம்.எஸ். சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால், பொருளாளர் அக்ரம்கான், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் மணியரசன், தியாகு உள்பட சுமார் 300 பேர் இலங்கை தூதரகத்தை நோக்கி ஆவேசம் முழங்க முற்றுகையிட சென்றனர்.
போலீசார் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது திடீரென சத்ரியன் வேணுகோபால், சைதை சிவராமன், கோயம்பேடு முத்துராஜ், வீரராகவன், வசந்த் நந்தகுமார், செந்தில்குமார், வெள்ளையம்மாள் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இலங்கை நாட்டு கொடியையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
 
இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 300–க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். அனைவரையும் நுங்கம்பாக்கம் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இன்று மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

வட மாகாணத்திற்க்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு!

Friday, October 31, 2014
இலங்கை:வட மாகாணத்திற்க்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு!
 
வட மாகாணத்தில் கீழ் காணப்படும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். அனுமதிக்கான விண்ணப்ப பத்திரங்களை பெக்ஸ் அல்லது மின்னஞ்சலூடாக அனுப்ப முடியும்
 
  • யாழ் மாவட்டம்
  • கிளிநொச்சி மாவட்டம்
  • முல்லைத்தீவு மாவட்டம்
  • மன்னார் மாவட்டம் (விடத்தல்தீவுக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள்)
  • வவுனியா மாவட்டம் (ஓமந்தைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள்)
கீழ் காணப்படும் பெக்ஸ் இலக்கம் அல்லது மின்னஞ்சலூடாக விண்ணப்பங்களை சமரப்பிக்க முடியும்
    Fax- +94112328109
    E-mail- modclearance@yahoo.com
சமர்பிக்கப்பட வேண்டிய தவல்கள் வருமாறு
  1. பெயர்
  2. கடவுச்சீட்டு இலக்கம்
  3. பயனிக்க உத்தேசித்த திகதி
  4. திரும்பி வர உத்தேசித்த திகதி
  5. நோக்கம்
  6. பயணம் செய்யும் முறை (விமானம், புகையிரதம், பொது போக்குவரத்து, தனியார் வாகனம்)
  7. வாகனப் பதிவு (தனியார் வாகனமாக இருந்தால் மாத்திரம்)
  8. சாரதியின் பெயர் (தனியார் வாகனமாக இருந்தால் மாத்திரம்)
  9. நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேசங்களுக்கு செல்ல வேண்டுமாயின் அது தொடர்பான விபரம்
  10.  
    குறிப்பு: குறித்த பிரதேசங்களில் தற்பொழுது நடைமுறையிலுள்ள அபிவிருத்தி திட்டங்கள், அல்லது முதலீட்டு நோக்கங்களுக்காக பயணம் செய்பவர்கள் தங்களது விண்ணப்பங்களை தேவையேற்படின் அந்தந்த நிறுவனங்களினூடாக
 
அதாவது பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, நல்லிணக்க ஆணையாளர் நாயகத்தின் காரியாலயம், முதலீட்டு சபை (etc) போன்றவற்றினூடாக அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கியநாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவினர் யாழ் கட்டளைத்தளபதி சந்திப்பு!

 Friday, October 31, 2014
இலங்கை:யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கியநாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு  குழுவினர்  யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேராவை நேற்றுமுன்தினம் (29) சந்தித்தனர்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கலந்துரையாடிய அக்குழுவினர் யாழ் பலாலியிலுள்ள இராணுவ பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
 
இதன்போது யுத்தத்திற்குப்பின்னர் இராணுவத்தினரால் வடபகுதியில் மேற்கோள்ளப்பட்ட சமூக  நலன்புரித் திட்டங்கள்,மக்களுக்கான கல்வி, பொருளாதாரம்,கலாசாரம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற உதவிகள் புரிவதற்காக இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பு மையம் குறித்து நான்கு பேர் அடங்கிய ஐ.நா குழுவினருக்கு யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி விவரித்தார்.
 
மேலும், வேலையற்ற மற்றும் குடும்பத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தினை உறுதிப்படுத்தும்  நோக்கில் இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும்  மகளிர் மேம்பாட்டு திட்டம் குறித்தும் ஐ.நா குழுவினருக்கு, இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணி  7ம் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி மேஜர் சந்திரிகா ராஜகுரு இதன்போது விளக்கமளித்தார்.
 
யாழ்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இராணுவத்தினர் எடுத்துவரும்  முயற்சிகளுக்கு ஐ.நா குழுவினர் இதன்போது பாராட்டு தெரிவித்தனர்.
 
ஜீன் போல் தலைமையிலான நான்கு பேர் அடங்கிய  இக்குழுவினர் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை முகாம்!

 Friday, October 31, 2014
இலங்கை::கொஸ்லந்தை, மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 300க்கும் அதிகமானவர்கள் பதுளை, கொஸ்லந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். 
இவர்களுக்கான மருத்துவ உதவிகளில் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனம் (SFRD) ஈடுபட்டு வருகின்றது.
 
கொஸ்லந்தை மிரியபெத்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள், மீட்புப் பணிகளில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி வித்தது. சீரற்ற காலநிலைக்கு மத்தியி லும் நேற்று முன்தினம் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் சடலங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
 
எனினும் பெண்கள் அணியக் கூடிய பலவகையான ஆபரணங்கள் மீட்கப் பட்டிரு ப்பதாகவும் தெரியவந்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை தொடருவதனால் மீட்புப் பணிகளை முழுமையாக முன்னெடுப்பதில் பாரிய சிரமங் கள் ஏற்பட்டிருந்தன. அப்பகுதியில் தொடர்ந்தும் மண்மேடுகள் சரிந்த வண்ணம் காணப்படுகின்றன. அபாயகரமான சூழ் நிலைக்கு மத்தியிலேயே முப்படையின ரும் பொலிஸாரும் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சம்வம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட வருகை தருவது மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கு பாரிய நெருக்கடியை தோற்றுவித்தது. சுமார் 40, 50 அடி உயரங்களுக்கு மண்மேடுகள் வீடுகளை மூடிக் காணப்படுவதனால் மீட்பு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான பாதையை உருவாக்குவதே சிக்கலாக அமைந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
 
எனவே பாதையை சீர்செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதுடன், சடலங்களை இனங்கண்டு கொள்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மண்சரிவு தொடர்ந்தும் சிறியளவில் அப்பிரதேசத்தில் இடம்பெற்று வருவதனால் மண்ணை அகழ்ந்து இன்னுமொரு இடத்தில் போட முடியாத இக்கட்டான சூழ்நிலையொன்று அங்கு உருவாகியுள்ளது. அப்பிரதேசம் முழுவதும் சேறு நிறைந்துக் காணப்படுவதனால் மீட்பில் பாரிய மந்தகதி ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் பணிப்புரைக்கமை இராணுவ கமாண்டோ மற்றும் விசேட படைப் பிரிவினர், மணல் மேட்டில் பணியாற்றக் கூடிய நிபுணத்துவம் பெற்றோர் நேற்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
மண் அகழ்விற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து பாரிய ரக இயந்திரங்களும் கொஸ்லந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தெனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் மீளக்குடியமர்த் துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து, மீரியபெத்த தோட்டத்தைச் சுற்றி ஏனைய தோட்டங் களைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பின் நிமித்தம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு ள்ளனர்.சுமார் 243 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் இரண்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனவென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது. இடப்பெயர்ந்தவர்களுள் சுமார் 580 பேர் கொஸ்லந்த கணேச மஹா வித்தியாலயத் திலும் 315 பேர் பூனாகல மஹா வித்தியா லயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்!

Friday, October 31, 2014
இலங்கை::சுவிட்சர்லாந்து, போலந்து, பங்களாதேஷ், பெல்ஜியம், கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்ன ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

புதிதாக நியமனம் பெற்ற தூதவர்கள்pன் பெயர் விபரம் வருமாறு-
சுவிட்சர்லாந்து    –  Mr. Heinz Walker-Nederkoorn 
போலந்து             - Mr. Tomasz Lukaszuk 
பங்களாதேஷ்      - Mr. Tarik Ahsan 
பெல்ஜியம்           - Mr. Jan Luykx 
கியூபா                 - Mr. Florentino Batista Gonzalez 
HE-New Ambasidor-2
HE-New Ambasidor
HE-New Ambasidor-3
HE-New Ambasidor-5
HE-New Ambasidor-Group

வோர்சோ நகரில் இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்டங்கள்!

 Friday, October 31, 2014
இலங்கை::சமய நிகழ்வான தீபாவளி நிகழ்வு  அண்மையில் போலந்து நகரின் வோர்சோ நகரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போலந்தில் அமைந்துள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் போலந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிங்கள மக்கள் என அனைவரும் எவ்வித பேதமுமின்றி கலந்து சிறப்பித்துள்ளனர்.
போலந்துக்கான இலங்கைத்தூதுவர் டி.எஸ்.டி.சில்வா வரவேற்புரையை நிகழ்த்தி அதன் பின்னர் வந்த பார்வையாளர்கள் மத்தியில் தீபாவளியின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறியதுடன், சமூக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது உறவினை பலப்படுத்துவதற்கு இந்நிகழ்வு பெரிதும் வழிவகுத்துள்ளது என்றார்.

வெவ்வேறு நம்பிக்கைகள், பாரம்பரியங்களை கொண்ட அனைத்து இந்து மதத்தினரும் இங்கு ஒன்றுகூடி தமது கருத்துக்களை பரிமாறினர். நடைபெற்ற தீபாவளி நிகழ்வின் மையக்கருத்தாக "ஒற்றுமை" எனும் கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் தீபங்களின் விழாவான இந்நிகழ்வினை கொண்டாட அனைத்து மக்களும் இன, மத, சமய பேதமின்றி சகோதர, சகோதரிகளாக கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். தூதுவரின் உரையின் பின்னர், இந்து சமய முறைமையிலான சமயச்சடங்குகள் இடம்பெற்றன. அதன்போது விநாயகர் திருவுருவத்துக்கு மலர் தூவி, தீபம் காட்டி மந்திர உற்சானங்களுடன் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அனைவரும் தீபத்திருநாள் முக்கியத்துவத்தினை வெளிக்காட்டும் வகையில் அனைத்து மக்களதும் வாழ்வில் இருள் அகன்று ஒளி பிரகாசிக்க வேண்டுமென வழிபாடுகள் நடத்தினர். நிகழ்வின் இறுதியில் இந்து பாரம்பரிய இரவு உணவுவகைகள் தூதரக ஏற்பாட்டில் வழங்கப்பட்டதுடன், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் சிறுமியொருவர் நடனம் நிகழ்த்தினார். கலந்து கொண்ட அனைவரும் தூதரகத்தினரையும் தூதுவரையும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
 

வைகோ-ஸ்டாலின் சந்திப்பு: எனக்கு அழகிரியும், ஸ்டாலினும் ஒன்று தான்: வைகோ!

31st of October 2014
சென்னை:மதிமுக உடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.  
 
தன் மூலம் தமிழக அரசியலில் புதிய கூட்டணி உருவாகும் சூழல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் மு.க.ஸ்டாலின் வைகோவும் சந்தித்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். 2004-ஆம் ஆண்டு பொடா வழக்கில் இருந்து வைகோ விடுதலையானபோது அவர் இல்லத்துக்குச் சென்று மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்து வந்தார்.  
 
அதன் பிறகு இருவரும் சந்திக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், இருவரும் சந்தித்துக்குக் கொண்டது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திருமண நிகழ்ச்சிக்கு வந்தேன். வைகோ இருப்பது தெரிந்ததும், அவரைச் சந்தித்துப் பேசினேன். வைகோவைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது ,அரசியல் எதுவும் பேசவில்லை என்றார்.  அப்போது செய்தியாளர்கள், புதிய கூட்டணி உருவாகுமா என்று கேள்வி எழுப்பினர். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? என்று பதிலுக்கு கேட்டதோடு, உங்கள் விருப்பம் அதுவானால் அது நிச்சயம் நிறைவேறும் என்று என்று சூசகமாக விளக்கமளித்தார். திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அரசியல் எதுவும் பேசவில்லை. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் மதிமுக உள்ளது என்றார்.   
 
தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டார். எனினும், இந்தச் சந்திப்பின் போது சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசவில்லை என்றும் வைகோ விளக்கினார்.  தேவர் ஜெயந்தி விழாவுக்காக வைகோவும் ஸ்டாலினும் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் மதுரைக்குச் சென்றனர். அதில் புதிய அணி அமைப்பது தொடர்பாகப் பேசப்படும் என இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.  2016 சட்டசபை தேர்தலில் ‘மெகா' கூட்டணி அமைக்கும் முயற்சியில் தி.மு.க. இறங்கியுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி பூந்தமல்லியில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. ஆட்சியை பாராட்டினார்.   அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர் பொது எதிரியை வீழ்த்துவதற்காக நண்பர்கள் யாருடனும் கூட்டணி சேர தயார் என்று அறிவித்தார்.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் வைகோவின் பேச்சை சுட்டிக் காட்டினார்.  சமீபத்தில் ஒரு தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொடா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த வைகோவை தி.மு.க. தலைவர் கருணாநிதி சிறைக்கு சென்று சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார். தமிழக சட்டசபையில் தே.மு.தி.க. வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததாகவும் கூறினார்.  சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக ‘மெகா' கூட்டணி அமைவதற்கான அச்சாரமாக மு.க.ஸ்டாலின்-வைகோ சந்திப்பு அச்சாரமாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர். 
இதனிடையே, தி.மு.க. - மதிமுக இடையே கூட்டணி மலர வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இது யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தி என்றார்.

மேலும், கூட்டணி குறித்து கலைஞர் அன்பாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. அழகிரியும், ஸ்டாலினும் எனக்கு ஒன்று தான். லோக்சபா பொதுத்தேர்தலுக்கு முன் மதுரையில் அழகிரியை சந்தித்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி தான், நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்தபோதும் ஏற்பட்டது. இருவருமே எனக்கு ஒன்று தான். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே பேச முடியும்’’ என்றார்.

புலிகள் மீள ஒருங்கிணைந்தால் அதற்கான பொறுப்பினை இந்த அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

Friday, October 31, 2014
இலங்கை::புலிகள் மீள ஒருங்கிணைந்தால் அதற்கான பொறுப்பினை இந்த அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் நாடு முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் மீள ஒருங்கிணைந்தால் அந்தப் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தை விக்னேஸ்வரன், ஆனந்தி போன்ற நாசிகளிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே  புலிகள் மீள ஒருங்கிணைந்து வருவதாகவும் இது தெளிவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பொருளாதார மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும், தெற்கில் சீனாவின் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல மாணவ மாணவியர் 22 மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் இது சிறந்த ஓர் விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சிங்கள மாணவ மாணவியர் நான்கு மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனவும் இதனை ஆரோக்கியமான நிiமையாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நாடு முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றே அர்த்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
6000 சிங்கள குடும்பங்களுக்கு சொந்தமான 21000 ஏக்கர் காணிகள்,  புலிப் போராளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் சிங்களவர்களுக்கு காணி உரிமைகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரபாகரன் கொல்லப்பட்ட போதிலும் நாடு விடுவிக்கப்படவில்லை என தாம் குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு காரணிகளுக்காக காணிகள் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 

இலங்கையிடமிருந்து வேண்டுகோள் கிடைத்துள்ளதை தொடர்ந்து உடனடி உதவிகளை வழங்க தயார்: அமெரிக்கா!

Friday, October 31, 2014
இலங்கை::இலங்கையிடமிருந்து வேண்டுகோள் கிடைத்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டிற்க்கு உடனடி உதவிகளை வழங்க தயாராவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம்  அழைப்பை விடுத்துள்ளாதாக அமெரிக்க வெளிவிவகார பேச்சாளர்-ஜென் சகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சு யுஎஸ்எயிட் ஊடாக உதவிகளை வழங்குவதற்க்கு தயாராவாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்க்கும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமெரிக்க தூதரகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களும், தங்களுடைய குடும்பத்தவர்களுக்கா துயருறும், காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும். இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தையும், அதன் இராணுவத்தையும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தூதரகம் பாராட்டியுள்ளது.
 

(புலிகூட்டமைப்பின்) தமிழ் அரசியல்வாதிகள், கமலேஷ் சர்மாவிடம் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்ற முன்வைத்த யோசனையை: இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு!

Friday, October 31, 2014
இலங்கை::பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
வட பகுதியிலிருந்து இராணுவத்தினரை நீக்குமாறு கமலேஷ் சர்மா கோரியிருந்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
 
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்ற யோசனையை தமிழ் அரசியல்வாதிகள், கமலேஷ் சர்மாவிடம் முன்வைத்துள்ளனர்.
 
வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வட மாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் குருகுலராசா ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
 
ஐரோப்பாவில்  புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளை வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக் கொள்வது ஆபத்தானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித நெகிழ்வுப் போக்கையும் காட்டாது என குறிப்பிட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாணசபையும் முயற்சித்து வருகின்றமை குறித்த தகவல்கள், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலி உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கனடா ஆதரவளிக்கவில்லை: ஸெல்லி வைட்டிங்!

Friday, October 31, 2014
இலங்கை::புலி உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கனடா ஆதரவளித்து வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகர் ஸெல்லி வைட்டிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில்  புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் தாயார் கனடா செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் தகவல்வெளியிடப்பட்டிருந்தது.

புலிகளை மீளவும் ஒருங்கிணைக்க முயற்சித்த கஜீபனின் தாயாரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் தடுத்திருந்தனர்.

புலிகளின் உறவினர்களை இலங்கையிலிருந்து வெளியேற்று வேறும் நாடுகளில் தங்க வைக்க ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்து அடிப்படையற்றது என வைட்டிங் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

குறிப்பாக கனேடிய அதிகாரிகள் இவ்வாறு புலிகளின் உறவினர்களை பாதுகாப்பதில் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தங்களுக்கு  புலிகளே பொறுப்பு எனவும், மக்களின் அரசியல் அபிலாஸைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் தாமும் கனேடிய அரசாங்கமும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு முதல் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், 2009ம் ஆண்டு யுத்த வெற்றியை கனடா சர்வதேச நாடுகளுடன் இணைந்து வரவேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீசா விண்ணப்பக் கோரிக்கைகள் மிகவும் நிதானமான முறையில் துல்லியமாக ஆராயப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் பாதுகாப்பு சட்டங்களின் அடிப்படையிலேயே வீசா வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். போலியான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் அவ்வாறானவர்களுக்கு வழங்கப்பட்ட வீசா ரத்து செய்யப்படும் என வைட்டிங் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, October 31, 2014
இலங்கை::ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இருண்ட யுகமொன்றிலிருந்து நாட்டை மீட்டு அமைதியிலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி முன்னேற்றுகையில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கின்றன.
 
ஐரோப்பிய நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படும் வகையில் வழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் எமது அரசாங்கமும் படையினரும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை.
 
2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது. இப்பகுதியில் புலிபயங்கரவாதிகள் பல முறை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
 
தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது.
 
இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ சிலர் குறுகிய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகின்றனர்.
கடந்த கால மோசமான நிலைமையை அறியாதவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர் என எம்மால் கருத முடிகிறது.
 
புலிகளுக்கான தடை உலக நாடுகள் எங்கும் விதிக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர். எனினும் அண்மையில் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இத்தடையை நீக்கி புலிகள் மீள சுதந்திரமாக அந்நாடுகளில் செயற் வழிவகுத்துள்ளனர்.
 
இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இச்செயற்பாடுகள் ஏதாவது காரணத்தோடுதான் மேற்கொள்ளப்பட்டது.
 
எனினும் என்ன காரணம் என்று எமக்குப் புரியாமலுள்ளது. நீதிமன்ற விடயம் என்பதால் அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது.
 
எவ்வாறாயினும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எமது படையினரும் அரசாங்கமும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயமாக முயலும்: தமிழிசை சவுந்தரராஜன்!

Friday, October 31, 2014
சென்னை::தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயமாக முயலும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்கட் மற்றும் பிரசாந்த் ஆகிய தமிழக மீனவர்கள் 5 பேர், போதை வஸ்துக்களை கடத்தியதாக இலங்கை அரசால் 2011-ல் கைது செய்யப்பட்டு நடந்து கொண்டிருந்த வழக்கில், இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்.

நவம்பர் 14-ந் தேதிக்குள் அவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்¢டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். எனினும் இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு, நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் இது பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்றே தமிழக மீனவர்கள் உணர்வு பூர்வமாக கொந்தளித்துப் போய் உள்ளனர்.

தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்வதும் அவர்களது படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதுமான இலங்கை அரசின் செயல்பாடுகள் பலமுறை கண்டிக்கப்பட்டும் இதுவரை ஒரு நிரந்தர தீர்வு எட்ட முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கையில், எரிகிற கொள்ளியில் எண்ணைய் ஊற்றுவது போல இலங்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தமிழக மீனவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமருக்கும், வெளியுறவுத்துறை மந்திரிக்கும், தொலைநகல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு, உடனடியாக இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் உடனடி நடவடிக்கைக்கான வழிமுறைகள் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயம் முயலும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
 

ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவுக்கே சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்க வேண்டும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்!

Friday, October 31, 2014
இலங்கை::இலங்கையில் தமிழரோ முஸ்லிமோ ஜனாதிபதியாக வரமுயாது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையப் போகும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவுக்கே சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
 
ஜனாதிபதித் தேர்தல் வேலைகளை கவனிப்பதற்கான மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் தாண்டவன்வெளியில் புதன்கிழமை  திறந்துவைக்கப்பட்ட வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட அலுவலகச் செயலாளருமான திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன இலங்கையில் 18 சதவீதமாக வாழ்கின்ற தமிழ் மக்களில் எவரும் ஜனாதிபதியாக வரமுடியாது. அவ்வாறே, ஒரு முஸ்லிமினால் கூட ஜனாதிபதியாக வரமுடியாது. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போகும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதால் கூடிய நன்மைகளை பெறலாம்.
 
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் வெற்றிக்காக வேலை செய்வதற்கு நகரில் அரசியல் அனுபவமுள்ள காலஞ்சென்ற இராஜன் சத்தியமூர்த்தியின் மகள் சிவகீதா பிரபாகரனையும் இணைத்து வேலைசெய்யும் நோக்கோடு இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
 
நடந்து முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் அங்குள்ள தமிழர்கள் எல்லாம் சிந்தித்து வாக்களித்தால், ஒரு அமைச்சர் உட்பட 3 மாகாணசபை உறுப்பினர்களை அவர்கள் பெற்றுள்ளனர். இது எமக்கு ஒரு உதாரணமாகும். இதன்படி, செயல்பட்டு எமது எதிர்காலச் சிறுவர்களின் வளங்களை பெருக்க எமக்கு அரசியலில் விழிப்பு ஏற்படவேண்டும்.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களிக்குமாறு கூறினர். சுரத் பொன்சேக்காவே உங்கள் பிள்ளைகளை கொன்றுகுவித்தவர். அது ஏன் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரியவில்லை என்பதைச் சிந்தியுங்கள். கோமாளி அரசியல் நடத்த இடமளிக்கவேண்டாம்.
மட்டக்களப்பில் எவ்வளவோ அறிவாளிகள் உள்ளனர். நாடாளுமன்றம் சென்றுள்ளவர்களை பாருங்கள். அவர்களிடம் மொழியறிவு இல்லை. எவரிடம் எதைப் பேசுவது என்று தெரியாமல் உள்ளார்கள். நகரில் 40,000 தமிழர்கள் வாழ்கின்றனர். அவ்வளவு பேரும் ஜனாதிபதி மஹிதந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தால், மட்டக்களப்பின் அபிவிருத்தி எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.
 
எமது உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காக எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டு உரிமை, உரிமை என கோஷம் எழுப்புவதால் எந்த நன்மையும் இல்லை. ஆளும் தரப்பில் அமைச்சர்களாக இருந்து அபிவிருத்தியையும் உரிமையையும் பெற்றுக்கொள்ளமுடியும். எமது சகோதர முஸ்லிம் மக்களின் அரசியல் சாணக்கியத்தை பாருங்கள். இனியும் ஏமாறாமல் எமது மக்களின் எழுச்சியை பற்றிச் சிந்தியுங்கள் என்றார்.
   

மீனவர்கள் பிரச்சினை பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்!

Friday, October 31, 2014
ராமநாதபுரம்::மீனவர்கள் பிரச்சினை பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை தமிழக மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜும்தான் காரணம். மீனவர்களின் படகை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்ட போது, தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அந்த 5 பேரையும் சேர்த்துதான் கேட்டு இருந்தோம். அப்போது ராஜபக்சேவும், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை மீறிவிட்டார்.

தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும். இதுகுறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இலங்கையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அனுதாபம்!

Friday, October 31, 2014
புதுடெல்லி::இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள படுல்லா மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. இங்கு இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வரிசையில் அமைக்கப்பட்டு இருந்த பல வீடுகள் தரைமட்டமாகின. நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை காணவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. மீட்புப்பணியில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மீட்புப்பணியில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்து உள்ளது. இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா, இலங்கை உள்துறை மந்திரி ஜி.எல்.பெய்ரீசை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து உள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறார்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் உதவி வழங்க நடவடிக்கை!

Friday, October 31, 2014
இலங்கை::பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி நிவாரணப் பொருள்கள் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவில் சேகரிக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் பொருள்களை வழங்க விரும்புபவர்கள் இன்று   காலை 10 மணி முதல் முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை கையளிக்கலாம்.

முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்களை பதுளை மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது சம்பந்தமான கூட்டம் இன்றைய தினம் மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் தலைமையல் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு, வாசல்களையும், உடமைகளையுமு; உயிர்களையும் இழந்து நிர்க்கதியாகி இடைத்தகங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு எமது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பொது மக்களும் நலன் விரும்பிகளும், வர்த்தகர்களும் தங்களால் இயன்ற பணம், உடுதுணிகள், உலர் உணவுப் பொருள்கள், பாடசாலை உபகரணங்கள், பாடசாலை சீருடைகள் உள்ளிட்ட பொருள்களையும் கையளிக்கலாம்.

கடந்த 2004ஆம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெற்றிருந்தன. அந்தவகையில் ஏனைய பிரதேச மக்களுக்கு உதவிகளை நல்குவது நமது கடமையாகும்.

Thursday, October 30, 2014

இலங்கை - இந்தியாவிற்கு இடையில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் உட்பட எட்டுபேரிற்க்கு இன்று கொழும்பு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது!

Thursday, October 30, 2014
இலங்கை::மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை - இந்தியாவிற்கு இடையில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 8 பேருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன இந்த தீர்ப்பினை இன்று வழங்கினார்.  
 
மரண தண்டனை பெற்ற எண்மரில் ஐவர் இந்திய பிரஜைகள் என்றும் மூவர் இலங்கை பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது


நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம், இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் கப்பல்கள் வந்து போவது வழமை: கோசல வணிக சூரிய!

Thursday, October 30, 2014
இலங்கை::நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம், இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் கப்பல்கள் வந்து போவது வழமையெனத் தெரிவித்துள்ள கடற்படைப் பேச்சாளர் 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை 206 கப்பல்கள் இலங்கைக்கு வந்து போயுள்ளதாக தெரிவித்தார். இந்து சமுத்திரத்துக்கு மத்தியில் இலங்கை அமைந்துள்ளதாலும் பூகோள ரீதியில் முக்கியம் பெறுவதாலும் இவ்வாறான கப்பல்களின் வருகை தவிர்க்க முடியாதது என்றும் அவர் விளக்கமளித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது.
 
இதன் போது இலங்கை கடற்படை தளபதியின் இந்திய விஜயம் மற்றும் சீன நீர்மூழ்கி கப்பல் இலங்கை வந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கடற்படைப் போச்சாளர் கொமாண்டர் கோசல வணிக சூரிய இதனை தெரிவித்தார்.
 
தொடர்ந்து விளக்கமளிக்கையில்,
இலங்கை இந்து சமுத்திரத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது. பூகோள ரீதியிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நல்லெண்ண அடிப்படையில் வந்து செல்கின்றன. இது பொதுவான ஒரு விடயமாகும். குறித்த நாடொன்றின் கப்பல்கள் மட்டும் இங்கு வரவில்லை.
 
நாடு எது என்பதை விட நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ண உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும். அந்த அடிப்படையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு அதாவது இதுவரை 206 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இங்கு வந்து சென்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெய்ன், பங்களாதேஷ், இந்தோனேஷியா, தாய்லாந்து, துருக்கி, மலேசியா, தென்கொரியா, புருணை, மாலைதீவு, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், சீஷெல்ஸ் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தே இந்த 206 கப்பல்களும் வந்து சென்றுள்ளன.
 
இதன்படி 2010 ஆம் ஆண்டு 36 கப்பல்களும், 2011 ஆம் ஆண்டு 49, 2012 இல் 34, 2013 இல் 48, 2014 ஆம் ஆண்டு இதுவரை 39 கப்பல்கள் என்ற அடிப்படையிலேயே மேற்படி 206 கப்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து சென்றுள்ளன என்றார்.
 
அதேநேரம், இலங்கை கடற்படைத் தளபதி இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சிகள் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் கடற்படை தளபதியின் விஜயம் முடிவுற்று நாட்டிற்கு மீண்டும் திரும்பிய பின்னரே கூறமுடியும் என்றார்.
 
இதேவேளை, சீன நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. என்று உடகங்கள் தான் கூறுகின்றதே தவிர இந்தியா இதுவரை எதனையும் கூறவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
இலங்கைக்கு வந்து சென்ற கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது நாளொன்றுக்கு நான்கு கப்பல்கள் என்ற அடிப்படையில் வந்து செல்கின்ற அதேபோன்று வர்த்தக நோக்கத்திற்காக ஹம்பாந்தோட்டை பகுதி ஊடாக நாளொன்றுக்கு 275 தொடக்கம் 300 கப்பல்கள் வந்து செல்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.