Friday, October 31, 2014
இலங்கை::ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருண்ட யுகமொன்றிலிருந்து நாட்டை மீட்டு அமைதியிலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி முன்னேற்றுகையில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படும் வகையில் வழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் எமது அரசாங்கமும் படையினரும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை.
2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது. இப்பகுதியில் புலிபயங்கரவாதிகள் பல முறை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது.
இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ சிலர் குறுகிய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகின்றனர்.
கடந்த கால மோசமான நிலைமையை அறியாதவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர் என எம்மால் கருத முடிகிறது.
புலிகளுக்கான தடை உலக நாடுகள் எங்கும் விதிக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர். எனினும் அண்மையில் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இத்தடையை நீக்கி புலிகள் மீள சுதந்திரமாக அந்நாடுகளில் செயற் வழிவகுத்துள்ளனர்.
இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இச்செயற்பாடுகள் ஏதாவது காரணத்தோடுதான் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் என்ன காரணம் என்று எமக்குப் புரியாமலுள்ளது. நீதிமன்ற விடயம் என்பதால் அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது.
எவ்வாறாயினும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எமது படையினரும் அரசாங்கமும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment