Friday, October 31, 2014

போதை பொருள் கடத்திய 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் நடவடிக்கை

Friday, October 31, 2014
சென்னை, போதை பொருள் கடத்தியதாக கூறி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் லாங்லெட், பிரசாத், எமர்சன், வில்சன், அகஸ்டஸ் ஆகிய 5 பேருக்கு இலங்கை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.
 
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி, ராமேஸ்வரத்தில் நேற்று மாலையில் போராட்டம் வெடித்தது.
 
சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ரெயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டு தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் நேற்று இரவு ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
 
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அங்கு அமைதி திரும்பி வருகிறது.
 
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 13 கடலோர மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இது தொடர்பாக கடலோர மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

No comments:

Post a Comment