Thursday, October 30, 2014

நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம், இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் கப்பல்கள் வந்து போவது வழமை: கோசல வணிக சூரிய!

Thursday, October 30, 2014
இலங்கை::நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம், இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் கப்பல்கள் வந்து போவது வழமையெனத் தெரிவித்துள்ள கடற்படைப் பேச்சாளர் 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை 206 கப்பல்கள் இலங்கைக்கு வந்து போயுள்ளதாக தெரிவித்தார். இந்து சமுத்திரத்துக்கு மத்தியில் இலங்கை அமைந்துள்ளதாலும் பூகோள ரீதியில் முக்கியம் பெறுவதாலும் இவ்வாறான கப்பல்களின் வருகை தவிர்க்க முடியாதது என்றும் அவர் விளக்கமளித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது.
 
இதன் போது இலங்கை கடற்படை தளபதியின் இந்திய விஜயம் மற்றும் சீன நீர்மூழ்கி கப்பல் இலங்கை வந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கடற்படைப் போச்சாளர் கொமாண்டர் கோசல வணிக சூரிய இதனை தெரிவித்தார்.
 
தொடர்ந்து விளக்கமளிக்கையில்,
இலங்கை இந்து சமுத்திரத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது. பூகோள ரீதியிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நல்லெண்ண அடிப்படையில் வந்து செல்கின்றன. இது பொதுவான ஒரு விடயமாகும். குறித்த நாடொன்றின் கப்பல்கள் மட்டும் இங்கு வரவில்லை.
 
நாடு எது என்பதை விட நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ண உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும். அந்த அடிப்படையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு அதாவது இதுவரை 206 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இங்கு வந்து சென்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெய்ன், பங்களாதேஷ், இந்தோனேஷியா, தாய்லாந்து, துருக்கி, மலேசியா, தென்கொரியா, புருணை, மாலைதீவு, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், சீஷெல்ஸ் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தே இந்த 206 கப்பல்களும் வந்து சென்றுள்ளன.
 
இதன்படி 2010 ஆம் ஆண்டு 36 கப்பல்களும், 2011 ஆம் ஆண்டு 49, 2012 இல் 34, 2013 இல் 48, 2014 ஆம் ஆண்டு இதுவரை 39 கப்பல்கள் என்ற அடிப்படையிலேயே மேற்படி 206 கப்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து சென்றுள்ளன என்றார்.
 
அதேநேரம், இலங்கை கடற்படைத் தளபதி இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சிகள் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் கடற்படை தளபதியின் விஜயம் முடிவுற்று நாட்டிற்கு மீண்டும் திரும்பிய பின்னரே கூறமுடியும் என்றார்.
 
இதேவேளை, சீன நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. என்று உடகங்கள் தான் கூறுகின்றதே தவிர இந்தியா இதுவரை எதனையும் கூறவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
இலங்கைக்கு வந்து சென்ற கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது நாளொன்றுக்கு நான்கு கப்பல்கள் என்ற அடிப்படையில் வந்து செல்கின்ற அதேபோன்று வர்த்தக நோக்கத்திற்காக ஹம்பாந்தோட்டை பகுதி ஊடாக நாளொன்றுக்கு 275 தொடக்கம் 300 கப்பல்கள் வந்து செல்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment