Wednesday, November 30, 2011

ரணில் அகாசியை சந்தித்துள்ளார்!

Wednesday, November 30, 2011
இலங்கை வருகை தந்துள்ள ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாசிக்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம் பெற்றதாக எதிர்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார இன்னல்களுக்கு முன்னிலையில் இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் முகங் கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுதந்திர வர்த்தக கொள்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையின் தற்போதைய, அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், கரு ஜயசூரிய மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துரையாடினர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்:-தெஹிவளை கல்வல வீதி மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

Wednesday, November 30, 2011
தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவுக்கு ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது .

குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்துள்ளது எனினும் போலீசார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் சிறிய மதரஸாவாக இயங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்ததை தொடந்து அது மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதும் உரிய நேரத்தில் சமூக தலைமைகளும் , அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இன்று பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் முழு அளவில் இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித்திற்கு தேவையான போது போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றது என்று பாத்தியா மாவத்தை மஹல்லா வாசிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சோசலிச மாணவர் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமமைச்சின் செயலகத்திற்கு செல்ல முற்பட்டனர்.

இதனை தடுக்கும் வகையில் காவல் துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பாய்ச்சு தாக்குதல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

இதன்போது அந்த பாதையூடான போக்குவரத்து பலமணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு!

Wednesday, November 30, 2011
இம்பால் : மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இம்பாலில் உள்ள ஹப்தா கங்ஜெய்பங் மைதானத்தில் சங்கய் திருவிழாவுக்காக ஏராளமான வெளிநாட்டினர் கூடியிருந்தனர். மைதானத்தின் வாசலில் பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ரிக்ஷாவில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் ரிக்ஷாகாரர் கோரா படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடிகுண்டை மணிப்பூர் பிரிவினைவாதிகள் வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். குண்டுவெடிப்பு நடந்த இடம், டிசம்பர் 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறக்க உள்ள நகர மாநாட்டு அரங்கில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுதங்கள் இறக்குமதி : இந்தியா முதலிடம்!

Wednesday, November 30, 2011
வாஷிங்டன் : உலகிலேயே இந்தியா தான் மிக அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக Foreign Policy magazine என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இந்தப் பத்திரிக்கை பிரபல வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும். அந்த வகையில் கடந்த ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மாபெரும் விமானம் தாங்கிக் கப்பலை பல்லாயிரம் கோடி செலவில் நவீனப்படுத்தியுள்ள சீனா, அதன் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அதுமட்டுமில்லாமல் புதிதாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டும் வேலைகளையும் சீனா ஆரம்பித்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியா, சீனக் கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா தீவிரமாக
களமிறங்கியுள்ளது. சீனா மட்டுமல்ல, இந்தியாவும் தனது ஆயுத பலத்தை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீன எல்லைப் பகுதியில் இந்தியாவின் படை பலம் இதுவரை இல்லாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையின் சில இடங்களில், சீனாவைவிட இந்தியாவின் படை மற்றும் ஆயுத பலம் சற்று அதிகமாக உள்ளது. 2011ம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடும் இந்தியா தான்.
2006-2010 ஆண்டுகளில் உலகின் மொத்த ஆயுத கொள்முதலில் 9 சதவீதத்தை இந்தியா கொள்முதல் செய்துள்ளாது. இதில் பெரும்பாலான ஆயுதங்கள்
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டுக்குள் தனது படை, ஆயுத பலத்தை நவீனப்படுத்த இந்தியா 4 லட்சம் கோடி ரூபாயை செலவிட உள்ளதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இனவன்முறைகளுக்கான பேரினவாத உணர்வுகள் வலுவடைகின்றனவே தவிர குறைவடையவில்லை-பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன்!

Wednesday, November 30, 2011
வெலிக்கடை சிறைப்படுகொலை அன்றைய தமிழ் இளைய தலைமுறையை வெஞ்சினத்திற்கும் விரக்திக்கும் இட்டுச் சென்றது.இதன் பின்னர் பிந்தனுவவ நலன்புரி நிலையத்தில் தமிழ் கைதிகள் படுகொலை இப்போது அநுராதபுரம் சிறைக்கைதிகள் மீதான தாக்குதல். இலங்கை சிறைகளில் தமிழ் கைதிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற அவப்பெயர் தொடர்கிறது. என பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப், பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இனவன்முறைகளுக்கான பேரினவாத உணர்வுகள் வலுவடைகின்றனவே தவிர குறைவடையவில்லை என்பதனையும் மேற்படி அதிர்ச்சி சம்பவம் உணர்த்தி நிற்கிறது.தமிழ் கைதிகளின் பாதுகாப்பு, நீதி விசாரணை என்பன பிரதானப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் மனித உரிமை தொடர்பான அபகீர்;த்தியான இலங்கையின் பெயரை மாற்றுவது கடினமானதாகும்.மேலாதிக்க வெறிபிடித்த அதிகாரிகளால் இவர்கள் மேற்பார்வை செய்யப்படக்கூடாது. கருணையும் மனித உரிமை பற்றிய அறிவும் கொண்ட அதிகாரிகள் முதலில் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த கைதிகளின் நிலை போன்றதுதான் ஏறத்தாழ தமிழர்களின் நிலையும்.தமிழ் மக்களும் தங்களுக்கு பாதுகாப்பின்மையையே உணர்கிறார்கள்.அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் அங்கீகரிக்கப்படுகையிலேயே இத்தகைய பிரச்சினைகளுக் நிரந்தர தீர்வு காணமுடியும்.

இல்லையேல் இத்தகைய சம்பவங்கள் விஷச்சுழல் போல் தொடரும் சமூகங்கள் ஐக்கியப்படுவதும் அமைதியாக சமாதானமாக இருப்பதும் இந்த விடயங்களில்தான் தங்கியிருக்கிறது.

தி. ஸ்ரீதரன்

பொதுச் செயலாளர்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

யாழ்பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் படைத்தரப்பிற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை!

Wednesday, November 30, 2011
யாழ்பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் படைத்தரப்பிற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் தெரிவித்துள்ளது.குறித்த மாணவன் கடத்தப்பட்டமை தொடர்பினில் சில ஊடகங்கள் தம்மீது தெவையற்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும் இச்செய்திக்குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களுக்கும் படைத்தரப்பிற்குமிடையே நிலவி வரும் உறவினை சீர்குலைக்கும் வகையினிலேயே சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு கவலை வெளியிட்டுள்ளது. ஆயினும் தான் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள மாணவன் வேதாரணியம் லத்தீஸ் ஆனால் படையினரோ பொலிஸாரோ தொடர்பு பட்டிருக்கவில்லையென கூறியுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 91 மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டது!

Wednesday, November 30, 2011
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 91 மேலதிக வாக்குகளினால் சபையில் இன்று மாலை 05.05 மணிக்கு நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியினர் எதிராக வாக்களித்தனர்.

இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு படையினரே பதில் அளிப்பர் - ஜகத் ஜயசூரிய!

Wednesday, November 30, 2011
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சில பக்கங்களில் இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முப்படையினர் இணைந்து, விசேட அறிக்கையொன்றை கையளிக்க உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

முப்படையினரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் இறுதி தொகுப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது, முப்படையில் எப்படி படை நடவடிக்கைகளை மேற்கொண்டனல் என்பது பற்றிய உரிய தகவல்களை இந்த அறிக்கை மூலம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கவிருப்பதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

சபுகஸ்கந்த பாதுகாப்புச் சேவை பாடசாலையில், நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது இதில் பங்கேற்க்கும் இந்தியாவின் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது ஜெயலலிதாவுக்கு-(புலிகளின் சொத்தை தனது சொந்த சொத்தாக்கிய உளவுத்துறை முக்கியஸ்தர்) வைகோ கோரிக்கை!

Wednesday, November 30, 2011
(புலிகளின் முக்கியஸ்தர்) ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

டிசம்பர் 14, 15 தேதிகளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்டிடியூட் ஆப் ஹியூமன் டெவலப்மென்ட் அன்ட்டிரெய்னிங், ஸ்ரீலங்கா என்ற நிறுவனத்தின் சார்பில் மனிதவளக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதே போல கொழும்பு பல்கலைக்கழகம் டிசம்பர் 19, 20, 21 தேதிகளில் கொழும்பில் ஒரு கருத்தரங்கத்தை நடத்துகின்றது.

இதில் பங்கேற்க லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்விதக்கவலையும் கொள்ளாத, இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் செல்கிறார்கள். அதே போல தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். கருத்தரங்கம் நடத்தும் அமைப்பினர் அவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தமிழகப் பல்கலைக்கழகங்களில் இருந்தும், அரசுக்கல்லூரிகளில் இருந்தும் விரிவுரையாளர்கள் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, கோடிக்கணக்கான (புலிகளின்)தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்துவதாக உள்ளது.

லட்சக்கணக்கான தமிழ் மக்களைக்கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலவும் ஆகிறது. எனவே தமிழகத்துப் பேராசிரியர்கள் இலங்கை செல்வதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று (புலிகளின்)ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை போதைப்பொருள் வியாபாரிகள் சிலர் வடபகுதி கடற்பிரதேசத்தில் கடற்படையினரால் கைது

Wednesday, November 30, 2011
இந்திய மற்றும் இலங்கை போதைப்பொருள் வியாபாரிகள் சிலர் வடபகுதி நெடுந்தீவுப் கடற்பிரதேசத்தில்,கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 1.5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைதானவர்களில் ஐந்து பேர் இந்திய மீனவர்கள் ,மூவர் இலங்கை மீனவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களான இந்திய நாட்டவர்கள் ஐவரும் ட்ரோலர் படகுமூலம் நேற்று அதிகாலை இந்தியாவிலிருந்து ஹெரோய்ன் போதைப்பொருளை இலங்கை கடல் எல்லைக்குள் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் இலங்கை சந்தேகநபர்களிடம் போதைப்பொருளை ஒப்படைக்க முயற்சித்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 20 வருடங்களின் பின்னர் வளலாய் மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் நேரில் பார்ப்பதற்கு அனுமதி-மகிந்த ஹத்துருசிங்க!

Wednesday, November 30, 2011
சுமார் 20 வருடங்களின் பின்னர் வளலாய் மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் நேரில் பார்ப்பதற்கு இராணுவத்தினர் நேற்று அனுமதியளித்தனர். அவற்றைப் பார்த்த மக்கள் தமது சொத்துக்களின் நிலை கண்டு கண்ணீர்விட்டனர். தமது வீடுகளைக் காணிகளைப் பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்தும்; சிலர் சென்றிருந்தனர்

வளலாய் சித்தி விநாயகர் கோயிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மற்றும் அரச அதிபர் ஆகியோர் உரையாற்றினர். அத்துடன் வளலாய் மீள்குடியமர்வு ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் தமது இருப்பிடங்களுக்கு நேற்றே திரும்பினர்.

கோயிலில் நடந்த நேற்றைய கூட்டத்தில் மீளக்குடியமரும் மக்கள் மிதிவெடிகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

மக்களின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின்னரே அவர்களின் வீடுகள் காணிகளைப் பார்ப்பதற்குக் படையினர் அனுமதி வழங்கினர். அதுவும் வளலாய் விமான நிலைய வீதியில் வளலாய் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து சென்ற மக்கள் அதன் இரு மருங்கிலும் இருந்த வீடுகள், காணிகளைக் கண்களால் விழுங்கிக் கொண்டனர். அதற்கு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீள்குடியேற இன்னமும் அனுமதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, அவர்கள் வந்திருந்த மினி பஸ் தொண்டமானாறு பலாலி வீதி வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது.

இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது- இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொப்பி புயூலொச்!

Wednesday, November 30, 2011
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொப்பி புயூலொச் தெரிவித்துள்ளார்.

பிரதி உயர்ஸ்தானிகர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யுத்த வலயத்தின் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன், புயூலொச் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல், வடக்கின் அபிவி;ருத்திப் பணிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

நிலக்கண்ணி வெடி அகற்றுதல், முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாக புயூலொச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதி உயர்ஸ்தானிகர் புயூலொச் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பலருடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்தியா அமைத்துக்கொடுக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் பணிகளை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை!

Wednesday, November 30, 2011
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்தியா அமைத்துக்கொடுக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் பணிகளை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இந்திய மத்திய அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்தாலோசனைகள் இடம்பெற்றுள்ளன இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் கீழ் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் 1000 வீடுகள் மட்டுமே வடக்கில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தின் நிர்மாணத்துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பிரபேப், ஹிந்துஸ்தான் ஸ்டீல்வேக்ஸ் மற்றும் தேசிய கட்டிட நிர்மாண கூட்டுத்தாபனம் என்பன இணைந்து இந்த வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமல்லாமல் மத்திய மாகாணத்திலும் இந்திய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

டெல்லி திகார் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு டி.வி. பரிசு கொடுத்த கனிமொழி; இனிப்பு வழங்கி விடை பெற்றார்!

Wednesday, November 30, 2011
புதுடெல்லி :194 நாட்கள் ஜெயிலில் இருந்த கனிமொழி இப்போது தான் அப்பாடா...'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். சுமார் 6 மாதத்துக்குப்பிறகு நேற்றிரவுதான் அவர் நிம்மதியாகத் தூங்கினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கடந்த மே மாதம் 20-ந்தேதி அவர் கைது செய்யப்பட்ட போது தி.மு.க.வினர் மிகவும் வேதனைப்பட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்தவர்கள் அவர் மீது இரக்கப்பட்டனர். உறவினர்கள் மனம் துடிதுடிக்க, கண்ணீர் மல்க திகார் ஜெயிலுக்குள் சென்ற கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என அடுத்தடுத்து நிராகரிக்கப்பட அவர் மனம் உடைந்து போனார்.

பள்ளி செல்லும் வயதில் உள்ள சிறுவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை கோர்ட்டுகள் கண்டு கொள்ளவில்லை. என்றாலும் கனிமொழியிடம் தன்னம்பிக்கை குறையவில்லை. திகார் ஜெயிலில் ஆறாம் எண் அறையில் 15-க்கு 10 அடி ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், தன்னை சந்திக்க வருபவர்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு பக்குவம் பெற்றிருந்தார். மிகக் குறுகிய காலத்தில் சக பெண் கைதிகளுடன் மனம் விட்டுப் பேசி பழகினார்.

சில பெண் கைதிகளின் அவல நிலை கண்டு கண் கலங்கினார். அவர்களுக்கு உதவிகள் செய்வதாக கூட கனிமொழி உறுதி அளித்துள்ளாராம். சிறையில் இருந்த 194 நாட்களையும் கனிமொழி எம்.பி. வெறுமனே கழித்து விடவில்லை. பெண் கைதிகள் கைத் தொழில் கற்றுக் கொள்ளும் பகுதிக்கு சென்று பார்த்தார். பெண் கைதிகள் மறுவாழ்வு பெற அளிக்கப்படும் பயிற்சிகளை அறிந்து கொண்டார்.

சிறைக்குள் அவர் ஏராளமான புத்தகங்களை படித்து முடித்துள்ளார். நிறைய குறிப்புகள் எழுதியுள்ளார். படிக்கும் நேரம் தவிர சில சமயங்களில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்தார். அவர் தொலைக்காட்சி வைத்துக் கொள்ள திகார் ஜெயில் நிர்வாகம் அனுமதி கொடுத்திருந்தது.

கடந்த மாதம் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் விடுதலை ஆவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான 5 தனியார் டெலிகாம் அதிகாரிகளை டெல்லி ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்த போது, கனிமொழிக்கும் ஜாமீன் கிடைப்பது பிரகாசமானது. என்றாலும் பல தடைகளை கடந்துதான் கனிமொழி ஜாமீன் பெற்றுள்ளார். பல தடவை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அவருக்கு நேற்று முன்தினம் தான் நிம்மதி பெருமூச்சு விடும் தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கியது.

அன்று கோர்ட்டு நடை முறைகள் நிறைவு பெற இயலாததால் ஒரு நாள் கழித்து நேற்றிரவு கனிமொழி திகார் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டுக்கு நேற்று வந்த கனிமொழி மிகவும் ரிலாக்ஸ் ஆகக்காணப்பட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் அவர் முகத்தில் மலர்ச்சியைப் பார்க்க முடிந்தது. அவரிடம் நிருபர் ஒருவர், "விடுதலை ஆனதை இன்று கொண்டாடுவீர்களா?'' என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி, ''இல்லை, இல்லை. அப்படி எந்த ஒரு திட்டமும் என்னிடம் இல்லை. விடுதலை ஆனதும் எனது வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பேன். மேலும் எனக்கு இங்கு (டெல்லியில்) நெருங்கிய தோழிகள் யாரும் இல்லை. எல்லாரும் சென்னையில் இருக்கிறார்கள்'' என்றார். உற்சாகமாக அனைவரிடமும் பேசியபடி இருந்த கனிமொழி, அதே உற்சாகத்துடன் நேற்று மாலை பாட்டியாலா கோர்ட்டில் இருந்து திகார் சிறைக்கு சென்றார்.

அங்கு அவரை விடுவிப்பதற்கான நடைமுறைகள் நடந்தன. அந்த நடைமுறைகள் முடிந்ததும் ஜெயிலில் இருந்து வெளியேற கனிமொழி தயாரானார். அப்போது அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தன்னுடன் கடந்த 6 மாதமாக சிறையில் பழகிய சக பெண் கைதிகளுடன் மனம் விட்டுப் பேசினார். அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஜெயில் கேண்டினில் இருந்து இனிப்பு வகைகளை வர வழைத்து பெண் கைதிகளுக்கு வினியோகித்தார்.

அதோடு இதுவரை தன் அறையில் பயன்படுத்தி வந்த டி.வி. பெட்டியையும் அந்த பெண் கைதிகள் பயன்படுத்திக் கொள்ள பரிசாக வழங்கினார். கனிமொழியின் இந்த செய்கையால் மற்ற பெண் கைதிகள் மனம் நெகிழ்ந்தனர். சில பெண் கைதிகள் கனிமொழியை அரவணைத்து நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். அவர்களிடம் கனிமொழி நன்றி தெரிவித்து விடை பெற்றார்.

சிறை கண்காணிப்பாளர் அறைக்கு வந்த கனிமொழி, விடுதலை ஆவதற்கான ஏட்டில், கையெழுத்திட்டார். அப்போது சிறை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 7.35 மணிக்கு அவர் வெளியேற தயாரானார். மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரை வரவேற்க திகார் ஜெயில் வாசலில் நின்றனர். அவர் எந்த வாசல் வழியாக வெளியே வருவார் என்பது அறிவிக்கப்படவில்லை.

இறுதியில் பின்புற வாசல் வழியாக அவர் வெளியேறிச் சென்றார். கார்கள் அணி வகுத்துச் செல்ல அவர் மத்திய டெல்லி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 6 மாத சிறை வாசத்துக்குப் பிறகு வருவதால் கனிமொழி எம்.பி.யின் வீடு நேற்றிரவு குதூகலமாக மாறியது. கனிமொழியை வரவேற்கும் வகையில் அந்த வீட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வீட்டு வாசலில் தமிழர்களின் பாரம்பரிய பண் பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கோலம் போடப்பட்டிருந்தது. கனிமொழி காரில் வந்து இறங்கியதும் டி.ஆர்.பாலு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு இருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

டெல்லி தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த குதூகலமான வரவேற்பு கனிமொழியை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. சென்னை வந்து தன் தந்தையை காண வேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமுடன் உள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் போது அவர் கண்டிப்பாக கோர்ட்டில் இருக்க வேண்டும். எனவே இன்னும் 2 நாள் கழித்து கனிமொழி சென்னை வர உள்ளார். அவரை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கனிமொழி முன்பைவிட இன்னும் அதிக சுறுசுறுப்புடன் கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள் வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும்-ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா!

Wednesday, November 30, 2011
கிளர்ச்சயாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை நடத்துவதற்காக மூவர் அடங்கிய ஒழுக்காற்று குழுவொன்றை ஜே.வி.பி. மத்திய செயற்குழு நியமித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜினதாச கித்துலேகொட மற்றும் லக்ஸ்மன் நிபுணாரச்சி ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் கட்சியையோ அல்லது தலைமைத்துவத்தையோ விமர்சனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் அனுமதியுடன் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்களது கருத்துக்களை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவின் நினைவு தின நிகழ்வுகளை தனியாக நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளர்ச்சியாளாகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளர்ச்சியாளர்கள் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முற்பட்டதாகவும் அதனால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தம்மை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி அவமானப்படுத்தியதாக ஜே.வி.பி கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கைத் தொடர்பில் எந்வொரு சர்வதேச நாடும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கோ, தீர்வுகளைத் திணிப்பதற்கோ, ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது-ஜீ.எல்.பீரிஸ்!

Wednesday, November 30, 2011
இலங்கைத் தொடர்பில் எந்வொரு சர்வதேச நாடும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கோ, தீர்வுகளைத் திணிப்பதற்கோ, ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்தவாரமளவில் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் வெளிவிகார அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 2013 ம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த சர்வதேச ரீதியில் 54 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கூறியுள்ளன.இவ்வாறான நிலையில் பொதுநலவாய நாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி கவலையளிக்கினறது.

அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் முரண்படுவதாகவும், சிறந்த உறவுகளைப் பேணுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்துகின்றார். இந்த குற்றச்சாட்டில் எதவித உண்மையும் இல்லை.

இலங்கைக்கு எதிராக ஒருசில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகளை நாம் சர்வதேச நாடுளின் ஒத்துழைப்புடன் முறியடித்திருக்கின்றோம். உறவுகள் பேணப்படாதிருந்தால் இது சாத்தியமாகி இருக்காது.

சர்வதேச நாடுகளுடனான எமது உறவு சிறப்பாக பேணப்பட்டு வருகின்றது. எனினும் இலங்iகைத் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எந்தவொரு பிறநாட்டிற்கும் உரிமை கிடையாது. அதேபோல் எமது நாடு குறித்து தீர்வுகளைத் திணிக்கவும் முடியாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.

எமது நாட்டு விடயங்களை நாமே கையாள்வோம். ஆனாலும் பகைமை மற்றும் பொறாமைகளை நாம் வளர்க்கவில்லை. அதனால்தான் சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எனவே எமது நாட்டின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசுடன் இணைந்து சேவையாற்ற வருமாறு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் கூறினார்.

கொழும்பு பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த 102 பேர் கைது!

Wednesday, November 30, 2011
கடந்த இரண்டு மாதங்களுக்குள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட 102 பேர் கைது செயய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைதானவர்களில் பெரும்பாலானோர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்ட்டுள்தாக கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிப்பதற்காக 21 பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படுகின்ற போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தனியான பொலிஸ் குழுவொன்றினை நியமித்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி கூறினார்.

எதிர்காலத்தில் கைது செய்யப்படும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களை கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது வழக்கு செலவுகளுக்கு பணம் தேடும் பொருட்டு அவர்கள் மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் சந்தேகநபர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ் உயரதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கொள்ளைச் சம்பவம ஒன்றுடன் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

கொள்ளைச் சம்பவம ஒன்றுடன் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.புத்தளம் - மன்னார் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் 70,000 ரூபா பணம் அண்மையில் கொள்ளையிடப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வழங்கிய தகவலின் பேரிலேயே கந்தளாய் காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் விவசாயக் கிணறு கையளிப்பு!

Wednesday, November 30, 2011
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினது நிதி ஒதுக்கீட்டின் மூலம் திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதிதாக மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வாழைத்தோட்ட விவசாய மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண முதலமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் வருகின்ற கிராமிய அபிவிருத்தி எனும் செயற்றிட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கிணறு மற்றும் நீர் இறைக்கும் பம்புகள் முதலமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்ட்டன.

சுமார் 08 விவசாயக் கிணறுகளும் 22 நீர் இறைக்கும் பம்பிகளும் மற்றும் முட் கம்பி பழக் கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெருகல் பிரதேச சபை உறுப்பினர் திருமதி எஸ் சாந்தமலர் மாகாண விவசாயப்பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், முதலமைச்சர் செயலக திட்டமிடல் பணிப்பாளர், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 விவசாயிகள் மேற்படி விவசாய உபகரணங்களையும் உள்ளீடுகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

தலைமன்னாரில் வெளியேற்றப்பட்ட இடம்பெயர் மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு மீளக் குடியேற்றியுள்ளார்!

Wednesday, November 30, 2011
அண்மையில் பாதுகாப்பு தரப்பினரால் தலைமன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட இடம்பெயர் மக்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு மீளவும் குடியேற்றியுள்ளார்.

அரச காணிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்து குறித்த இடம்பெயர் மக்களை பாதுகாப்புத் தரப்பினர் பலவந்தமாக பிரதேசங்களை விட்டு வெளியேற்றியிருந்தனர். வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் குடியேற்றப்பட்டதாக மன்னார் மாவட்ட செயலாளர் ஸ்டென்லி டி மெல் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் இடம்பெயர் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும், இதனை செவிமடுத்த ஜனாதிபதி குறித்த மக்களை மீளக் குடியேற அனுமதிக்குமாறு மாவட்டச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 550 குடும்பங்கள் இவ்வாறு தலைமன்னாரில் மீளவும் குடியேறியுள்ளனர்.

சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்-ராதகிருஸ்ணன்!

Wednesday, November 30, 2011
சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.எஸ். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் பிரதான யோசனைகளில் ஒன்றாக மும்மொழி சமூகம் என்றத் திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல சிங்கள உறுப்பினர்களும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வசிப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கு சிங்கள மக்கள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் எனவும், இதன் மூலம் இரு சமூகங்களுக்கு இடையிலான பிணைப்பை மேம்படுதத் முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டும் அளவிற்கு சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற விவாதங்களின் போது தாம் சிஙகள மொழியில் கருத்துக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரத்தில் இன்று முதல் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்; இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 5 மீனவர்களை விடுவிக்க வேண்டும்!

Wednesday, November 30, 2011
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்தியா- இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது என கூறி விரட்டினர்.

பின்னர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான படகை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த எமர்சன், அகஸ்டஸ், போல்டட், பிரசாந்த், வில்சன் ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 மீனவர் களையும் இலங்கை நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். தங்கச்சிமடம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த விபரம் ராமேசுவரம் மீனவர்களுக்கு தெரியவந்தது.

உடனே அவர்கள் இது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்துக்கும், இந்திய கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நேற்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து மீனவர் சங்கங் களின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற படகையும், 5 மீனவர்களையும் உடனடி யாக விடுவித்து ராமேசுவரத்தக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இன்று 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 700 விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் போலீஸ் மற்றும் கோர்ட் காவலில் 10 ஆண்டில் 14 ஆயிரம் பேர் இறப்பு!-ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது!

Wednesday, November 30, 2011
புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில், போலீஸ் மற்றும் கோர்ட் காவலில் 14 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என, ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது.

டில்லியில் உள்ள ஆசிய மனித உரிமை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, 1,504 பேர் போலீஸ் காவலிலும், 12 ஆயிரத்து 727 பேர் கோர்ட் காவலிலும் இறந்துள்ளனர். சிறையில் இழைக்கப்பட்ட கொடுமையின் காரணமாகவே, பெரும்பாலான சாவுகள் நடந்துள்ளன. காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில், ஆறு பேர் மட்டுமே போலீஸ் காவலில் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, போலீஸ் காவலில் கடந்த 90ம் ஆண்டு முதல் 341 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். காஷ்மீரில் லாக்-அப் சாவுகள் பெரிய பிரச்னையாக உள்ளன. மகாராஷ்டிராவில் கடந்த 10 ஆண்டுகளில், 250 பேர் போலீஸ் காவலில் பலியாகியுள்ளனர். சிறையில் காணப்படும் கொடுமைகளும், மனித வாழ்வுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததும், மோசமான மருத்துவ வசதியும், போலீஸ் காவல் மற்றும் கோர்ட் காவலில் ஏற்படும் மரணங்களுக்கு காரணமாகின்றன. இவ்வாறு ஆசிய மனித உரிமை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் அனைவரும் சுதந்திரமாக நடமாட வழியேற்படுத்தியவர் ஜனாதிபதி-விநாயகமூர்த்தி முரளிதரன்!

Wednesday, November 30, 2011
ஒரு வரவு - செலவுத் திட்டம் சமர்ப் பிக்கப்படுகின்ற பொழுது, அது எங்களுடைய நாட்டின் இறைமைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களுடைய விஸ்தீரணத்துக்கும் ஏற்ப அமைய வேண்டும் என்பதுதான் நியதி. அதனைவிடுத்து, இது அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்படுகின்ற வரவு-செலவுத் திட்டத் தைப்போல் அல்லது பிரித்தானியாவில் சமர்ப் பிக்கின்ற வரவு - செலவுத் திட்டத்தைப் போல் இருக்க வேண்டும் என்று கூறுவது யதார்த்தத்துக்குப் பொருத்த மற்ற விடயமாகத்தான் இருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இவ்வரவு - செலவுத் திட்டமானது, எங்களுடைய மக்களின் உட்கட்ட மைப்பு வசதிகளையும் பொருளா தாரத்தையும் அபிவிருத்தி செய்கின்ற நோக்கோடு, திட்டமிட்டு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. பல அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கிய ஒரு வரவு - செலவுத் திட்டமாக நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். உதாரணமாகக் கல்வி, முதியோர்களுக்கான நலன்புரி, அரச ஊழியர்களுக்கான 10 சதவீத வேதன அதி கரிப்பு போன்ற பல விடயங்கள் உள்ளடக் கப்பட்டிருக்கின்றன. அது மாத்திரமல்ல, இன்று உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக் கில் பல நன்மையான விடயங்களை உள்ளடக்கியுள்ளதோடு, பல வரி விலக்கு களையும் கொண்டுள்ளது. ஆகவே, நாங்கள் இந்த இடத்தில் ஒன்றைக் கூற வேண்டும். அதாவது, குழந்தைகளின் போசாக்கினை மேம்படுத்துவதற்காக சத்துள்ள உணவுகளின் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில், எங்களுடைய குழந்தைகளின் போசாக்கு மட்டத்தினைக் கருத்தில் கொண்டு மீண்டும் ‘திரிபோஷா’ திட்டத்தினை அமுல் படுத்தியி ருப்பது ஜனாதிபதி அவர்களின் அதிக கரிசனையை எடுத்துக் காட்டுகின்றது. இங்கு எதிர்க் கட்சியினர் உரையாற்றும் பொழுது,

ஜனாதிபதி அவர்களை சில ஆலோசகர்கள் தவறாக வழிநடத்துவதாகக் கூறினார்கள். இதனை ஏற்றக்கொள்ள முடியாது! ஏனென்றால் கிட்டத்தட்ட 42 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவங்களைக்கொண்ட ஒருவர் தான் எங்களுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்!

எனவே அவருக்கு எவரும் ஆலோசனை வழங்க வேண்டிய தேவை இருக்குமென நான் நினைக்கவில்லை.

ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் பொழுது, வடமாகாணத்தில் 23 சதவீதப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். அதனை இன்று எதிர்க் கட்சியினர் ஏளனம் செய்தார்கள்.

இதனை விளக்கமற்ற ஒரு செயலாகத்தான் நான் பார்க்கின்றேன். ஏனென்றால் 30 வருட காலமாக எதுவித உற்பத்தியும் அற்ற நிலை யிலிருந்த பிரதேசம் தற்பொழுது 23 வீத பொரு ளாதார வளர்ச்சியினைக் கண்டிக்கிருகின்றது. இதனைத்தான் அவர் அன்று தெளிவாக எடுத்துக்கூறினாரே ஒழிய, ஒட்டுமொத்த இலங்கையினையினும் உள்ளடக்கிக் கூற வில்லை. ஆகவே, 30 வருடங்களாக எதுவித உற்பத்திகளோ, வளர்ச்சியோ, வருமானமோ அற்றிருந்த வடக்குக், கிழக்கப் பிரதேசம் இன்று யுத்தம் முடிவடைந்து இந்த இரண்டு வருடங்களுக்குள் பாரிய பொருளாதார வளர்ச்சிகளை எடுத்துக்காட்டியிருக்கின்றது.

ஆகவே, அந்த வீதம் இன்று எங்களுடைய நாட்டின் பொருளாதாரத்துடன் இணைக்கின்ற போது நாங்கள் பாரிய வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றோம் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் கடந்த யுத்தம் நடந்த காலங்களில் பெரும்பாலான, மீன்பிடிப் பிரதேசங்களில் மீன்பிடிக்க முடியாமல் இருந் தது. பாலுற்பத்திகள் குறைந்திருந்தன. நெல் லுற்பத்திகள் குறைந்திருந்தன. வடக்கு, கிழக்கிலே பெருமளவு நெற்காணிகள் இருக்கின்றன. இன்று அந்த அனைத்து நிலங் களையும் மக்கள் பயன்படுத்துகின்றவர் களாக அல்லது அந்த அனைத்து நிலங் களிலும் விளைச்சலைப் பெறுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

அதற்குரிய அத்தனை உதவிகளையும் இன்று அரசாங்கம் செய்து வருகின்றது. ஆகவே, இந்த விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது நாங்கள் பொருளா தாரத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றோம் என்பது உண்மையிலே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம். ஆகவே, வெறுமனே பங்குச் சந்தையை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எடைபோட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் அவர்கள் பல இனவாத கருத்துக்களை இந்தச் சபையிலே கூறினார். அதாவது குடியேற்றங்கள் நடப்பதாகவும் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் அவர் எடுத்துக் கூறினார். கொக்கச்சான்குளம் என்கின்ற குடியேற்றம் இன்று பெயர் மாற்றப்பட்டுக் குடியேற்றப்பட்டிருப்பதாக கூறினார். உண்மையிலே 1983 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக் கின்ற பொழுதுதான் அந்தக் குடியேற்றம் இடம்பெற்றது. அவ்வாறான ஒரு கட்சிக்குத்தான் இன்று அவர்கள் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இது எங்களுடைய அரசாங்கத்தினாலோ அல்லது எங்களுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களாலோ மேற்கொள்ளப்பட்ட விடயம் அல்ல.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் என்றுதான் இன்று இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கூறுகின் றார்கள். ஆகவே, அந்தக் கருப்பொருளைக் கொண்டிருக்கின்ற நீங்கள் ஏன் இவ்வாறான இனவாதங்களை பேச வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி என்று பார்க்கின்ற பொழுது அரசாங்கத்தினால் மாத்திரம் அனைத்து விடயங்களையும் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பாப்பது உண்மையிலே ஒரு வேடிக்கையான விடயம். ஏனென்றால் மக்கள் உழைப்பும் முயற்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த உழைப்புக்கும் முயற்சிக்கும் அரசாங்கம் என்ற வகையில் எங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். அதைத்தான் இன்று அரசாங்கம் மேற் கொள்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மேற்கொண்டு வருகின்றார்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சுயகெளரவமிக்க மக்கள். அவர்கள் ஒருபோதும் உணவு கேட்டு கையேந்திய தில்லை. ஏனெனில் அவர்களால் உழைக்க முடியுமாக இருக்கின்றது.

இன்று தங்களுடைய வீடுகளைத் தாமே கட்டக்கூடிய ஆற்றல் உடையவர்களாக அவர்கள் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையாகும். அதேநேரம் பல நிவாரணத் திட்டங்களும் வந்த பொழுது தான் எங்களுடைய மக்கள் சோம்பேறிகளாக மாறினார்கள். அதாவது சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பொழுது பல அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் அந்த மக்க ளுக்கு இலவசமாக வழங்கிய பொழுது அவர்கள் அனைவருமே சோம்பேறிகளாக மாறு கின்ற நிலை ஏற்பட்டது. உண்மையிலே ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தால் அதற்கு ஒரு கழிவறையும் கட்டி த்தர வேண்டும் என்ற வகையில் அவர்கள் கேட்டார்கள். அதைக் கூடக் கட்டுவதற்கு அவர்கள் முயற்சி யெடுக்கவில்லை. ஆகவே, அந்த மக்களை அது போன்ற ஒரு சோம்பேறிச் சமூகமாக மாற்றாமல் தமது உழைப்பையும் வினைத் திறனையும் கூட்டுகின்ற, இவ்வாறான முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்கின்ற மக்களாக மாற்ற வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் அங்கு கடந்த ஆண்டு ‘கம நெகும’ திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1010 மில் லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதே போன்று ‘திவிநெகும’ திட்டத்துக்கு 270 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாண நெல்லுற்பத்தியைப் பார்த்தால் அங்கு 2009 ஆம் ஆண்டு 1146 மில்லியன் மெற்றிக் தொன் விளைச்சல் பெறப்பட்டி ருக்கின்றது. அது தற்பொழுது அதிகரிக்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றது.

இந்த ஆண்டு முடிவடைந்ததும் அந்தக் கணக்குத் தெரியும்.

அதேபோன்றுதான் 2009 ஆம் ஆண்டு பாலுற்பத்தியைப் பார்த்தால் அங்கே 18.6 மில்லியன் லீற்றர் பாலுற்பத்தி பெறப்பட்டி ருக்கின்றது. ஆகவே, அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் கூடி வருவதை நாங்கள் காணக் கூடியதாக இருகின்றது.

ஆகவே, இதனூடாக மக்கள் பொரு ளதாரத்தைப் பெற்றுத் தங்களது வாழ்க்கையை நெறிப் படுத்துவதற்கு ஆரம் பித்தி ருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் அந்த மக்களை நாங்கள் உற்சாகப் படுத்த வேண்டுமே தவிர, மாறாக நாங்கள் அதைக் குற்றஞ் சாட்டிக் கொண்டிருப்பதில் அல்லது அரசாங்கத்தை குறைகூறுவதில் எதுவித அர்த்தமுமில்லை.

மாண்புமிகு தொண்டமான் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இணைந்திருக்கின்றார்.

றிஷாட் பதியுதீன் இணைந்திருக்கின்றார். அதேபோன்று மாண்புமிகு அதாஉல்லா அவர்கள், சிறிய ஒரு கட்சியை வைத்திருந்தாலும் கூட அவரும் இன்று இணைந் திருக்கின்றார். இதெல்லாம் தங்கள் சமூகத்துக்குச் சேவையாற்ற வேண்டுமென்பதற்காகவே!

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டு மென இச்சந்தர் ப்பத்திலே அவர்களிடம் அன்பாக வேண்டு கோள் விடுக்கின்றேன். ஏனென்றால் மாறாக குற்றத்தையும் குறையையும் கூறிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்குக், கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். அவ்வாறு அவர் கூறுவதாக இருந்தால் ஏன் அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித் தார்கள்? அன்று ஓர் இராணுவத் தளபதி ஜனாதிபதியாக வரமுற்பட்ட பொழுது அல்லது ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிட்ட பொழுது அவர்கள் அந்த இராணுவத் தளபதியை ஆதரித் தார்கள். இன்றும் ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆகவே,

வடக்குக் கிழக்கிலே இன்று இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பது உண்மையிலே முற்றுமுழுதாக தவ றான ஒரு விடயம்! ஏனென்றால் கடந்த பிரதேச சபைத் தேர்தல், மாநகர சபைத் தேர்தல் என்பன மிகவும் சுதந் திரமான முறையில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களிலே இடம்பெற்றதாக உலகக் கண்காணிப்பாளர்கள் அறிக்கை சமர்ப்பித்துள் ளார்கள். அத்தேர்தல்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென் றிருக்கின்றது.

அங்கு இராணுவ ஆட்சி நடைபெற்றி ருக்குமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தல்களிலே வெற்றி யடைந்திருக்க முடியாது.

ஆகவே இதுபோன்று பல உதாரணங்களை நாங்கள் கூறிகொண்டே போகலாம். உண்மையிலேயே இன்று இராணுவத்தினர் பல சேவைகளை அங்கு ஆற்றி வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட் டத்திலே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது ஓடோடிவந்து அந்த மக்களைக் காப்பாற்றினார்கள்.

இந்த முறை வெள்ளப்பொருக்கு வந்தாலும் என்ற காரணத்தினால் நாங்கள் இராணுவத் தினரை அங்கே வைத்திருக்கின்றோம். நேற்றும்கூட கிண்ணியா அடியில் முருக்கந்தீவு என்கின்ற கிராமத்து மக்களை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக இராணுவத்தின் உதவியுடன் அவர்களை வெளியேற்றினோம். இதுபோன்ற பல சேவைகளை அங்கு இராணுவத்தினர் ஆற்றிவருகின்றார்கள். ஆகவே, தவறான சில ஊடகங்கள், தவறான சில ‘வெப்’ தளங்கள் போன்றவற்றின் தகவல்களை வைத்துக்கொண்டு நாங்கள் கொலைகள் நடக்கின்றன, கொள்ளைகள் நடக்கின்றன என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இன்று வடக்கு, கிழக்கிலே அனைத்து அரசியல் வாதிகளும் சுதந்திரமாக நடமாடக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதற்குக் காரணம் உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ அல்லது வேறு யாருமோ அல்ல. அன்று விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரால் கூட அங்கு செல்ல முடியாத நிலைமை இருந்தது.

ஆனால் இன்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முயற்சியின் காரணமாக இந்த நாட்டை அமைதிக்குக் கொண்டு வந்ததனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரும் இன்று அங்கே சென்று வருகின்றனர். அதனால் தான் இன்று அவர்கள் வடக்குக், கிழக்கைப் பற்றிப் பேசுகின்றார்கள்.

ஆகவே, இதற்கு வழிசமைத்துக் கொடுத்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை நான் இவ்விடத்தில் அடித்துக் கூறுகின்றேன்.

ஏனெனில், அத னூடாகத்தான் இன்று ஜே.வி.பி. கட்சி யினராவிருந்தாலும் சரி ஐக்கிய தேசியக் கட்சியினராக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியின ராக இருந்தாலும் சரி அனைவரும் இன்று வடக்குக், கிழக்குக்குச் சென்று வரக்கூடிய வகையில் அந்தப் பாதையை அமைத்துக் கொடுத்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்பதை நான் இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மிகவும் துரித கெதியில் நாங்கள் மீள்குடியேற்றத்தைச் செய்து முடித்துள்ளோம்.

இன்று வடபகுதியிலே மாத்திரம் 1,38,482 குடும்பங்களைச் சேர்ந்த 4,55,986 பேர் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் 7546 பேர்தான் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களிலே எஞ்சி நிற்கிறார்கள். அப்பகுதியிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றிய பின்னர் நாங்கள் மிக விரைவில் அவர்களையும் மீளக்குடி யமர்த்தி விடுவோம்.

ஆகவே, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்க ளுக்கு இன்னும் வீடு கொடுக்கவில்லை. அவர்கள் வாழ்வதற்கு அடிப்படை வசதி களில்லை. என்று கூறிக்கொண்டிருக்கின்றமை உங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் அம்மக்கள் தற்காலிகமாக குடியிருப்பதற்கு கிட்டத்தட்ட 75,000 ரூபா பெறுமதியான தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை அமைத்துக் கொடுத்தி ருக்கிறோம். அவர்கள் விவசாயம் செய்வதற்குத் தேவையான விதை நெற்கள், உரங்கள் போன்வற்றை இலவசமாக வழங்குகின்றோம். அவர்களுக்கு கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த நீரிறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று அம் மக்களுக்குப் பல பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு அம்மக்கள் குடியமர்த்தப்பட்டு இன்று அவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே, இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத தீய சக்திகள் தான் இன்று இவ்வாறான கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள் என்பதை இவ்விடத்தில் கூறிகொள்ள விரும்புகின்றேன்.

இன்று வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் எங்களுடைய இளைஞர்களின் வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள். இன்று இங்குள்ளவர்கள் சம்பள உயர்வு காணாது என்றும், பொருளாதார உயர்வு காணாது என்றும் கூறுகின்றார்கள். ஆனால் அங்குள்ள ஒருவர் எட்டு மணித்தியாலம் வேலை செய்து அவரது வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாது. மாறாக அவர் மேலதிகமாக இன்னும் எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்தால் தான் தனது வாழ்க்கையைக் கொண்டு நடத்தக் கூடியதாக இருக்கும். அந்தளவில் தான் மேற்கத்தைய நாடுகளின் சம்பள மட்டம் காணப்படுகின்றது. நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்கின்ற எமது இலங்கையர்களிடம் அங் குள்ள நிலைமையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே, வெளிநாடுகளுடன் ஒப்பிடுகின்ற பொழுது நாங்கள் இன்று சுய உற்பத்தித் திறனுடனும் சுய திருப்தியுடனும் எமது நாட்டிலே வாழக்கூடியதாக இந்த வரவு-செல வுத் திட்டம் அமைந்துள்ளது என்பதைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன்.

இலங்கை பாராளுமன்றத்ல் அணிந்து வந்த பொதுநலவாய பாராளுமன்ற சங்க கழுத்துப் பட்டியினால் தூக்கிக் காட்டிய ரணில் விக்கிரமசிங்க!

Wednesday, November 30, 2011
எதிர் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணிந்து வந்த பொதுநலவாய பாராளுமன்ற சங்க கழுத்துப் பட்டியினால் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டது. சபையில் விசேட அறிக்கையொன்றை முன்வைக்க ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க முயன்ற போது ஆளும் தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

இது தொடர்பில் தனது தீர்ப்பை இன்று அறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கழுத்துப்பட்டியை தூக்கிக் காட்டியவாறு சபையை விட்டும் வெளியேறினார். இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., சபையில் வைத்து கழுத்துப்பட்டியை கழற்றுவது நிலையியற் கட்டளைகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, தினேஷ் குணவர்தன ஆகியோரும் கருத்து தெரிவித்தனர். இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொதுநலவாய சங்க கழுத்துப்பட்டியை கழற்றியதால் அரசாங்கத்திற்கோ பாராளுமன்றத்துக்கோ அன்றி நாட்டு மக்களுக்கு செய்த அவமதிப்பு என அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை தீவில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள்!

Wednesday, November 30, 2011
ராமேஸ்வரம்: புயல் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்ட பின், மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை நெடுந்தீவில் கரை ஒதுங்கினர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 700க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கற்களை வீசி, விரட்டியடித்தனர். வேறு பகுதிக்கு சென்ற மீனவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து, நேற்று ராமேஸ்வரம் திரும்பினர்.

கிளாடுவின், ராமு ஆகியோரின் இரண்டு படகுகள் கரை திரும்பவில்லை. கிளாடுவின் படகு இலங்கை நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கியதாக இலங்கை மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த படகில் சென்ற எமர்சன், அகஸ்டன், பிரசாந்த் உட்பட 5 மீனவர்களை மீட்க, மீன்துறை அதிகாரிகள் நடவடக்கை எடுத்துள்ளனர். ராமுவின் படகு பழுதடைந்து நடுக்கடலில் நிற்கிறது. அவரை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இலங்கை நெடுந்தீவில் கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்கரை படையினர் பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர். "மீனவர்களையும், படகையும் விடுவிக்கும் வரை இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக' ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கேபிள் வயர்கள் சிக்கின: வேலாயுதம் என்பவரின் படகில் சென்ற மீனவர்கள், மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கனமான கேபிள் வயர்கள் வலையில் சிக்கியது. மீன்களுடன் ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள், அந்த கேபிள் வயர்களை கடற்கரையில் வீசி சென்றனர். இரும்பு தகடுகளால் சுற்றப்பட்டுள்ள கேபிள் வயரின் உட்புறம் காப்பர் கம்பிகள் உள்ளன.கடந்த 1964 புயலுக்கு முன்பு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து நடந்தபோது, தகவல் தொடர்புக்காக இரண்டு துறைமுகங்களுக்கும் இடையே கடலில் கேபிள் அமைக்கப்பட்டது.

புயலில் தனுஷ்கோடி சேதமடைந்ததை தொடர்ந்து தகவல்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கேபிள்கள் கடலின் அடியில் புதைந்தன. சில ஆண்டுகளுக்கு முன், மீனவர்கள் சிலர் கடலில் மூழ்கிய கேபிளை வெட்டியெடுத்து வந்து விற்றனர். இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்த பின், கேபிள்களை கொண்டு வருவது தடைப்பட்டது. தற்போது கடற்கரையில் வீசப்பட்ட 150 கிலோ எடையுள்ள கேபிள் வயர்களை, ராமேஸ்வரம் மரைன் போலீசார் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்-மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Wednesday, November 30, 2011
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என இரண்டு மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு நாடோ அல்லது அரசாங்கமோ தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். எம்.மனோகரன் மற்றும் எஸ். ராமகிருஸ்ணன் ஆகிய மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே அந்நாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இனப்பிரச்சினையால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமன்றி யுத்த வலயத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யாது போனால் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்-அமெரிக்கா!

Wednesday, November 30, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யாது போனால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை சுமத்த போவதாக அமெரிக்காவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அலுவலகத்தின் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பொன்றை அடுத்து, தூதுவர் பெட்ரீசிய புட்டினஸை சந்திக்க சென்றிருந்த போது, அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவர் கலந்துக்கொள்ளவில்லை. எனினும் அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 29, 2011

பொன்சேக்காவுக்கு எதிரான ஹைகோப் விவகார வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது!

Tuesday, November 29, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹைகோப் விவகார வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹைகோப் விவகார வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் சாட்சியங்களை, முன்னாள் இராணுவத் தளபதி சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணி ருக்ஷான் நாணயக்கார மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையும், மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையும் ஒரே சம்பவம் தொடர்பானவை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே இந்த சாட்சியங்கள் சமரப்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் ஒரே சம்பவம் தொடர்பில், ஒருவருக்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது என பிரதிவாதி தரப்பில் ஏற்கனவே அடிப்படை ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இராணுவ நீதிமன்றத்திலும், மேல் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் ஒரே மாதிரியானவை எனின் அதனை நிரூபிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அண்ணாமலைக்கு அரோகரா’ கோஷம் முழங்க! தி.மலையில் தீபவிழா கொடியேற்றம்!

Tuesday, November 29, 2011
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபதிருவிழா இன்று காலை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரரை அலங்கரித்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் அருகே கொண்டு வந்தனர். இங்கு மகா தீபாராதனைக்கு பிறகு அதிகாலை 6.25 மணிக்கு வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க, கோயில் பெரிய பட்டம் வெங்கட்ராஜன் குருக்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின. அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 8ம் தேதி மாலை 6 மணிக்கு 2668அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையில் ஏற்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணிதீபம் ஏற்றப்படும். இவ்விழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் தி.மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா கடும் கண்டனம் பாக். இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும்!

Monday, November 28, 2011
பீஜிங் : பாகிஸ்தானில் நேட்டோ படைகள் தாக்குதலில் 24 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது நேட்டோ படைகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் பொறுப்பற்ற செயல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கர், சீன வெளியுறவுத் துறையுடன் விளக்கினார். இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திரம், இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும். நேட்டோ படைகளின் அத்துமீறல் குறித்து உண்மையான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது. பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதற்கிடையில் தவறுதலாக தாக்குதல் நடந்து விட்டது என்று நேட்டோ படைகள் மன்னிப்பு கேட்டது. அதை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் பாகிஸ்தான் & அமெரிக்கா உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐ.தே.க கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Tuesday, November 29, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா உள்ளிட்ட அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சரத்பொன்சேக்கா உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தல், நட்டத்தை எதிர்நோக்கிய நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்றமை மற்றும் அடுத்த ஆண்டுக்கான சில காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொழும்பு நகரின் சில பிரதேசங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.

இதன் ஒருகட்டமாக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஒருபேரணி ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட மற்றுமொரு பேரணி மருதானையில் ஆரம்பமானது.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் வொசேஷால் வீதியில் இருந்து ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.

ஹைய்ட் பார்க்கிற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேரணியில் இணைந்து கொண்டதுடன், பேரணிகளில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜித் மெத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

திருச்சியில் புலிகளின் மாவீரர் தினம் கொண்டாடிய புலி ஆதரவாளர்கள் கைது!

Tuesday, November 29, 2011
திருச்சியில் புலிகளின் மாவீரர் தினம் கொண்டாடிய புலி ஆதரவாளர்கள் கைது!

மாவீரர் தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி மாவட்டத்தில் புலிகளின் ஆதரவு கட்சிகளான புதிய தமிழகம் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் பாசறை, பெரியார் தத்துவ மையம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை இணைந்து, திருச்சி மாநகரில் புலிகளின் மாவீரர் தின அஞ்சலி செலுத்துவதற்காக 5 இடங்களுக்கு மேல் 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர்.

ஆனால், சம்மந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது என்றும், மாவட்ட காவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டனர். மாநகர காவல்துறை ஆணையரோ மேலிடத்தில் இருந்து ஈழ சம்மந்தமான பிரபாகரன் படங்களை வைக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளதால், அனுமதி கொடுக்க முடியாது என மறுத்ததோடு, மாநகர துணை காவல்துறை ஆணையரை பாருங்கள் என்று கூறியதும், அவரை சந்தித்தால், நாட்களை கடத்தி குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாள் அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டார் என்று புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்சி ரயில்வே ஜென்ஷன் அருகே உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தின் உள்ளே புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட பேனர் பெரியதாக இருந்ததால், அலுவலகத்தின் உள்ளே எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகையால் அலுவலகத்தின் வெளியே பேனரை வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது வந்த காவல்துறையினர் அலுவலக வாசலில் பேனர் வைத்திருப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று 30 பேரை கைது செய்தனர்.

அனுராதபுரம் சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்து வெளிநாடுகளுக்கு வெளிநாடுகளுக்குஅனுப்பிய சம்பவம் குறித்து விசாரணை!

Tuesday, November 29, 2011
அனுராதபுரம் சிறைச்சாலையில், அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் குறித்து, உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ. டப்ளியூ. கொடிப்பிலி நேற்று (28) அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை சிறையதிகாரிகள் கட்டி வைத்து தாக்குவது போன்ற காட்சிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேக நபர்களான இந்த அரசியல் கைதிகள், கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 19கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில், 4 தொலைபேசிகள் 3 ஜி தொழிற்நுட்பத்தை கொண்டவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் அதிகாரிகளின் தேடுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தம்மை சிறையதிகாரிகள் சித்தரவதைக்கு உட்படுத்துக்கின்றனர் என வெளிகாட்டும் வகையில், வீடியோ காட்சிகள் அனுப்பபட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு அறிய கிடைத்துள்ளதாக சிறைச்சாரல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் செய்மதி தொழிற்நுட்பத்தின் ஊடாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, இந்த வீடியோ காட்சிகளை அனுப்பியுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த தொலைபேசிகளை கண்டுபிடிக்க விசேட தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

Tuesday, November 29, 2011
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மடு பிரதேசத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பணிடிவிரிச்சான்; பகுதியிலேயே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மெற்கொள்ளப்பட்ட சோதணைகளின் போதே வெடிபொருட்கள் நேற்றைய தினம் (28.11.2011) மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

மன்னார் பொலிஸ் அத்தியேட்சகர் லக்சிறி விஜயசேன மற்றும் உதவி பொலிஸ் அத்தியேட்சகர் உதய கேமந்த ஆகியோரின் ஆலோசணைக்கு அமைவாக மன்னார் பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ. ஜெயவர்த்தனவின் வழிகாட்டலில் செனிவிரத்ன யாப்பா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரினால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி விசேட பொலிஸ் குழுவினரினால் கடந்த வாரமும் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் இருந்து ஒருதொகுதி ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டிருக்கின்றது.

இதனிடையே இம்மாதம் 4ம் திகதி (04.11.2011) விடத்தல் தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள பற்றைக்காட்டுக்குள் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் 48 கண்ணி வெடிகள் விடத்தல் தீவு விஷேட பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தது.

அதேவேளை மாந்தை மேற்கில் உள்ள அடம்பன் வேட்டையார் முறிப்பு பகுதியிலும் மதகு ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 40 மிதிவெடிகளை விடத்தல் தீவு விசேட பொலிஸ் குழுவினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதி எஸ்கேப் நோ சான்ஸ் வருது ரோபோ!

Tuesday, November 29, 2011
சியோல் : கைதிகளை கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோ ஒன்றை தென்கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. அதிநவீன கேமராக்கள், சென்சார்கள், 4 சக்கரங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. கைதிகளின் வழக்கமான நடவடிக்கைகள் சாப்ட்வேர் உதவியுடன் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை மீறி, எந்த செயலிலாவது கைதிகள் ஈடுபட்டால் ரோபோ உடனே அலாரம் அடிக்கும். இதன்மூலம் கைதிகள் தப்பிப்பது, தற்கொலை முயற்சி, கலாட்டா ஆகியவை குறையும் என்கின்றனர் அதிகாரிகள்.

முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்கவிடமாட்டோம் : பா.ஜ.க.!

Tuesday, November 29, 2011
புதுடெல்லி : சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி திட்டவட்டமாக கூறியுள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்கவிடமாட்டோம் என்றும் கூறியுள்ளார். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார். எனவே கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவிப்பதால் மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தியுள்ளார். இதனிடையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் 6 வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணைகளின் முடிவு வெளியிடப்பட்டது!

Tuesday, November 29, 2011
2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று வெளியிட்டார்.

எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் பதாதைகளை காட்சிப்படுத்தியதை அடுத்தே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலைமை பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு சிக்கல்களை தோற்றுவிப்பதாக அமைவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகள் விரும்பத்தகா வகையில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தாமும், பிரதி சபாநாயகரும் மெற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவிற்கு ஒருவார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தினை சபை முதல்வர் பாராளுமன்றத்தில் முன்வைப்பார் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன ஒருவார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கும் பிரேரணை, சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்டது.

இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், எதிர்க்கட்சியின் கொரடா ஜோன் அமரதுங்க அந்த தீர்ப்பை வரவேற்று கருத்து வெளியிட்டார்.

சபாநாயகரின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம கொரடா குறிப்பிட்டார்.

இலங்கையில் பேஸ்புக் குற்றச்செயல்கள் தொடர்பாக 1600 க்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கள்!

Tuesday, November 29, 2011
பேஸ்புக் குற்றச்செயல்கள் தொடர்பாக இதுவரை 1600 க்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

போலியான பேஸ் புக் முகவரி தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு குறிப்பிட்டார்.

தமக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய போலியான பேஸ் புக் முகவரிகளை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான போலி முகவரிகளைக் கொண்ட பேஸ் புக் தொடர்பாக ABUSE@CERT.GOV.LK என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் அறிவிக்க முடியும் என ரோஹன பல்லியகுரு மேலும் கூறினார்.

சில உள்ளூர் ஊடகங்கள் கூட நாட்டில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தவும் பிரிவினையைத் தூண்டவும் மாதிரியே செயற்படுகின்றன-முருகேசு சந்திரகுமார்!

Tuesday, November 29, 2011
சில உள்ளூர் ஊடகங்கள் கூட நாட்டில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தவும் பிரிவினையைத் தூண்டவும் பாதிப்புக்களை அதிகரிக்கவும் கூடிய மாதிரியே செயற்படுகின்றன என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

2012 வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான விவாதத்தில் அவர் மேலும் ஆற்றிய உரை!

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வரவு செலவுத் திட்டம் தொடர்பான இந்த உரையிலே நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

யுத்தத்திற்குப் பின்னர் முன்வைக்கப்படுகின்ற மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும். யுத்தம் முடிந்தபிறகு ஒரு இயல்பு வாழ்வை நோக்கி மக்கள் பயணம் செய்யும் சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் இது. அமைதியும் ஆறுதலும் உருவாகிக்கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுக் கிளர்ச்சியினாலும், யுத்தத்தினாலும் மக்கள் தங்களுடைய வாயையும் வயிற்றையும் கட்டி வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். ஆகவே, அந்தச் சந்தப்பத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் அரசாங்கத்தின் மீதான நெருக்கடியையும் நாட்டின் மீதான அச்சுறுத்தலையும் முறியடிக்கும் விதத்திலேயே அமைந்திருந்தன.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் மக்களின் நலத்திட்டங்களையும் விட பாதுகாப்புக்கான கரிசனையே அதிகமாக இருந்தது. எனவே, வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்பு செலவீனத்திற்கான நிதி ஒருக்கீடு அதிகரித்துக்கொண்டே வந்தது.

இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. ஆகவே, மக்களிடம் முற்றிலும் வேறான எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன. இவ்வளவு காலமும் தமது தேவைகளை மட்டுப்படுத்தி வாழ்ந்த மக்கள், உருவாகியிருக்கும் புதிய சூழலில் தங்கள் எதிர்பார்ப்புக்களையும் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறார்கள். இதில் இன மத பிரதேச வேறுபாடுகள்; இன்றி அனைவரும் ஒருமுகப்படுத்தப்பட்டே இருக்கின்றனர்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

யுத்தம் முடிந்து 2 ½ வருடங்கள் கடந்துவிட்டன. அநியாயச் சாவுகளுக்கும் அகதிப் பெருக்கத்திற்கும் அலைச்சலுக்கும் பெரும்பாலும் முடிவு காணப்பட்டுள்ளது. ஆனால், மழைவிட்டாலும் சாரல் விடவில்லை என்பதைப்போல யுத்தம் ஒழிந்தாலும் அதன் காரணமாக உருவாகிய சில பாதிப்புக்கள் இன்னும் முற்றாக நீங்கிவிடவில்லை.

ஒரு பக்கத்தில் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கும், இயல்பு வாழ்வை நோக்கி நகருவதற்கும் காத்திருக்கும் மக்கள். மறு பக்கத்தில் சில அரசியல் தரப்புக்களும் ஊடகங்களும் யுத்த சூழலை மேலும் தக்கவைத்துக் கொள்ள எத்தனிக்கும் முயற்சிகள். இந்த நிலையில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இயல்பாகவே நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இந்த நெருக்கடிகள் நாட்டை மேலும் பாதிப்புள்ளாக்கும்.

யுத்தம் நடைபெற்ற எல்லாத் தேசங்களிலும் எதிர்கொள்ளப்பட்ட, அல்லது எதிர்கொள்ளப்படுகின்ற ஒரு பிரச்சினை இது. அரசியல் இலாபங்களுக்காக மக்களையும், நாட்டையும் பலியிடும் தரப்பினர் இன்னும் அதே உற்சாகத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் செயற்பாடுகள் உருவாக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தை பாதிக்கின்றன. அல்லது திசைமாற்றுகின்றன. யுத்தம் முடிந்த பின்னர் அரசியல் தீர்வை நோக்கியும் அமைதியை நோக்கியும் சிந்திக்க வேண்டிய பலர் அதற்கு எதிர்விதமாக சிந்திக்கின்றார்கள். செயற்படுகின்றார்கள்.

சில உள்ளூர் ஊடகங்கள் கூட நாட்டில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தவும் பிரிவினையைத் தூண்டவும் பாதிப்புக்களை அதிகரிக்கவும் கூடிய மாதிரியே செயற்படுகின்றன.

மாறி மாறி ஒவ்வொரு தரப்பினரையும் குற்றம் சுமத்துவதாலும் விமர்சிப்பதாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. கடந்த கால அனுபவங்களைப் பெறுமதியான பாடமாகக் கொண்டு எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதே நிகழ்காலத்தின் கடப்பாடாகும். இதில் இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் முழுப்பொறுப்புண்டு. அவ்வாறு இந்தப் பொறுப்பை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயற்படும் போதே மக்கள் எதிர்பாக்கின்ற, மக்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஒரு வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்க முடியும்.

இந்த உண்மையை நான் கடந்த ஆண்டு நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது தெளிவாக வலியுறுத்தியிருந்தேன்.

நாட்டில் யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டாலும் யுத்த அபாயக் கருக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.

இது பகிரங்கமான ஒரு விடயமாகும். இந்த நிலை நீடிக்கும் வரை வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு என்பது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். இது எமது விருப்பத்திற்கு அப்பாலானதாக இருக்கலாம். அல்லது நாட்டினுடைய பொருளாதாரத்தின் பெரும்பகுதியை இத்தகைய ஒதுக்கீட்டுக்கு செலவழிப்பது அதிக சுமையாகக் கருதப்படலாம். ஆனால் இந்த நிலையை மாற்றும்வரை இந்த நிலைக்கு முகம்கொடுப்பதாகவே அமையும்.

இங்கே இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகுறித்த ஆதரவையோ விமர்சனங்களையோ நான் முன்வைக்கவில்லை. வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுபற்றிய காரணத்திற்கான காரணங்களையே நான் தெரிவித்துள்ளேன்.

ஆகவே, நாட்டில் அபிவிருத்தி என்பதும் மக்களின் முன்னேற்றம் என்பதும் நாட்டின் அரசியல் ஸ்திரத்திரத் தன்மையிலும் அமைதியிலுமே தங்கியுள்ளது. எனவேதான் அமைதிச் சூழலை நிலைப்படுத்த வேண்டும் என்று நாம் அழுத்தமாக வலியுறுத்துகிறோம். அத்தகைய சூழலை உருவாக்காமல் அல்லது அதற்காக விசுவாசமாகச் சிந்திக்காமல் ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவதோ விமர்சிப்பதோ பொருத்தமானதாக அமையாது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

நாட்டிலுள்ள சகல மக்களும் ஏராளம் கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருக்கின்றனர். இந்த அரசாங்கம் பாரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில் தான் நாம் இந்த வரவு செலவுத்திட்டத்தையும் எதிர்வரும் ஆண்டையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களைச் சீரமைத்து அந்த மக்களையும், யுத்தப் பிரதேசத்தையும் மீள்நிலைப்படுத்த வேண்டிய அவசியப்பணி இன்றுள்ளது. நாட்டிலுள்ள சகல மக்களையும் சகல பிரதேசங்களையும் சமநிலைப்பட்ட ஒரு பொதுத்தளத்திற்கு முதலில் கொண்டுவரவேண்டும்.

எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் மகிந்த சிந்தனையின் அடிப்படையும் இதையே வலியுறுத்துகின்றது. அத்தகைய ஒரு நிலை எட்டப்பட்டால்தான் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற திட்டங்களும் சட்டங்களும் விதிமுறைகளும் அனைவருக்கும் பொதுவாக ஏற்புடையதாகும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களை அந்தத்திட்டங்கள் சென்றடைவதில் பிரச்சினைகள் உருவாகும். அதேபோல அந்தத் திட்டங்களை எதிர்கொள்வதில் மக்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த வகையில் யுத்தத்திற்குப் பின்னர் மீண்டும் அந்தப் பிரதேசங்களில் மக்கள் மீள் குடியேற்றப்படுவது முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால், இந்த மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே இங்குள்ள பிரதான தேவையாக இருக்கின்றது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் இந்த மக்கள் மீதான கவனம் கூடுதலாகக் கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

குறிப்பாகப் புனர்வாழ்வுக்கும் மீளமைப்புக்கும் கூடுதலான கவனத்தைக் கொள்ளவேண்டும். இந்த மக்கள் மீள்வாழ்வுக்குத் திரும்புவதில் கால நீட்சி ஏற்படுமானால் அது அந்த மக்களின் வாழ்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் அவர்களது சமூக வாழ்விலும் நெருக்கடிகளை உருவாக்கும். அத்துடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் பங்களிப்பதில் தாமதங்களையே ஏற்படுத்தும். அரசாங்கத்தின் உயரிய இலட்சியமாகிய அனைத்துப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்தல், அனைத்து மக்களையும் அபிவிருத்தியில் பங்குபற்ற வைத்தல் என்ற நோக்கத்திற்கு இது நேர்மாறாக அமையலாம். ஆகவேதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட ஒதுக்கீடும் சிறப்புத்திட்டங்களும் அவசியம் என்று கூறுகிறேன்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்குள்ள தேவைகளையும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளையும் மூலதனமாக்கியே சில அரசியல் தரப்புகளும் ஊடகங்களும் தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இந்தத் தரப்புக்களின் செயற்பாடு என்பது சாதாரணமானதல்ல. முழுநாட்டையுமே நெருக்கடிக்குள்ளாக்குவது.

இந்தத் தரப்புக்கள் கண்டுபிடிக்கும் குறைபாடுகளை இல்லாமல் செய்வதன் மூலம் இவர்களைப் பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, முழுநாட்டுக்குமான பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இல்லையெனில், இதனால் நாடு முழுவதுக்குமான தீர்மானங்களும் திட்டமிடல்களும் பாதிப்படையும். இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்கான அதிகரித்த ஒதுக்கீடு என்று ஏனைய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு அடிப்படைக் காரணம் அடிப்படைப் பிரச்சினைகளின் நீட்சியே. ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களை மீள்நிலைக்;கு கொண்டுவருவதும் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதும் முக்கியமானதாகும். எமது அரசாங்கம் இந்த விடயங்களில் கூடுதலான கவனத்தினை எடுக்கும் என்று நம்புகின்றோம்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றம் காண்பதிலும் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். நான் முன்னரே குறிப்பிட்டதைப் போல நாடு முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்பார்க்கும் ஒரே குறிக்கோள் அமைதியும் அபிவிருத்தியுமே. அதை நோக்கிச் சிந்திப்பதே எமது பணியாகும் என நான் நம்புகிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வட பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அங்கே செயலிழந்த நிலையில் இருக்கும் தொழில் மையங்களை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவரவேண்டியுள்ளது. இதன்; மூலம் வேலையற்ற நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். அதே வேளை அங்கே இருக்கும் மூல வழங்களைப் பயன்படுத்தவும் முடியும். நாட்டின் அபிவிருத்திக்கு அந்தப் பிரதேச மக்களின் பங்களிப்பு அவசியமானது.

போரின் காரணமாக சிதைவடைந்த பொருளாதாரமும் சிதைவடைந்த வாழ்வும் சிதைவடைந்த சமூகமாக அங்குள்ள மக்களின் வாழ்க்கை உள்ளது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்ற சிறப்புத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றமை ஒரு முக்கியமான விடயம் என்றபோதிலும் இதையும் விட மேலதிகமான தேவைகளை அந்த மக்கள் கொண்டுள்ளனர்.

குறிப்பாக உட்கட்டுமானங்களை மீளமைக்கவேண்டிய அவசியப்பணி அங்கேயுண்டு. உட்கட்டுமானங்களின் வளர்ச்சியானது அந்த மக்களின் சுயபொருளாதாரத்தில் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கும் என்பதை தாங்கள் அறிவீர்கள். அங்குள்ள பல பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தொடர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலை தொடரும்போது இந்த மக்களையும் அவர்களுடைய நிலையையும் சாட்சியமாக வைத்து சர்வதேச நெருக்கடியை உருவாக்குவதற்கு எதிர்த்தரப்புக்குச் சாத்தியமாகிறது.

எனவேதான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிறப்புத் திட்டங்களை கூடிய கவனமெடுத்துச் செயற்படுத்த வேண்டுமென்று. விவசாயம், கடற்றொழில் போன்ற தொழில் வாய்ப்புக்களுக்கான கூடுதல்; வசதிகளை இந்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கிடைத்துள்ள இயல்புச் சூழலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உழைப்பதற்கு இந்த மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் உதவிகளும்; ஆதரவுமே இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இதற்கான திட்டத்தையும் நிதி ஒதுக்கீட்டையுமே இந்த மக்கள் எதிர்பார்த்துள்ளனர். குறைந்த பட்சம் வட்டியில்லாத கடன் என்ற அளவிலாவது இவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டும். மேலும் கல்வி, மருத்துவம், மின்சாரம், கைத்தொழில், போக்குவரத்து போன்ற அவசிய துறைகளிலும் விரைவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டமும் கூடுதல் ஒதுக்கீடும் தேவைப்படுகிறது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆறுதலை உள்ளடக்கி இருக்குமானால், அது வரவேற்கத் தக்கதாகும். எனவே, இந்த வரவு செலவுத்திட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான அடிப்படைகளை நாம் பொருட்படுத்தி அந்த இலக்கு நோக்கிச் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். யுத்தமற்ற இலங்கையை, அமைதியான நாட்டை அனுபவிக்கக் கூடிய ஒரு சூழல் எமது மக்களுக்கு வேண்டும். பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் சுதந்திரத்திலும் ஜனநாயக அடிப்படைகளிலும் மேம்பட்ட ஒரு வாழ்க்கை எமக்கு வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கி நாம் செயற்படுவோம் என்று கேட்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கின்றேன். என்றார்.