Tuesday, November 29, 2011

அண்ணாமலைக்கு அரோகரா’ கோஷம் முழங்க! தி.மலையில் தீபவிழா கொடியேற்றம்!

Tuesday, November 29, 2011
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபதிருவிழா இன்று காலை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரரை அலங்கரித்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் அருகே கொண்டு வந்தனர். இங்கு மகா தீபாராதனைக்கு பிறகு அதிகாலை 6.25 மணிக்கு வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க, கோயில் பெரிய பட்டம் வெங்கட்ராஜன் குருக்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின. அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 8ம் தேதி மாலை 6 மணிக்கு 2668அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையில் ஏற்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணிதீபம் ஏற்றப்படும். இவ்விழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் தி.மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment