Sunday, November 30, 2014

தீவிரவாதத்தை தடுக்க ‘ஸ்மார்ட்’ போலீஸ் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி!


Sunday, November 30, 2014
கவுகாத்தி::நாட்டில் தீவிரவாதத்தை தடுக்க ‘ஸ்மார்ட்Õ போலீஸ் திட்டம் அவசியம் என டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அல்கய்தா தீவிரவாதிகள் அச்சுறுத்தல், ஐஎஸ் அமைப்பில் இந்திய வாலிபர்கள் இணைந்த விவகாரம், மேற்கு வங்க மாநிலம் பர்தவானில் நடந்த குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்த போலீஸ் டிஜிபிகளின் 2 நாள் மாநாடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 மாநாட்டில் நேற்று ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘இந்தியாவில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் அரசுதான் காரணம். இந்தியாவின் ஸ்திரத் தன்மையை குலைப்பதற்காக பாகிஸ்தான் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஈராக், சிரியாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினரால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்படுவது கவலைக்குரிய விஷயமாகும். இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்களை ஈர்த்தால் இஸ்லாமியதேசத்தை உருவாக்க முடியும் என அல்கய்தா, ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் கருதுகின்றன. எனவே சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்திய இளைஞர்களை குறிவைக்கின்றன. ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தேசத்திற்காக தியாகம் செய்ய தயங்காதவர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து தங்களது தேசப்பற்றையும், தியாகத்தையும், நாட்டின் பாதுகாப்புக்காக போராட தயங்காதவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளனர். இந்தியாவுக்குள் எந்தவித தீவிரவாத இயக்கமும் பாதிப்பை ஏற்படுத்த முடியாதுÕ என்றார்.
 
அதே போல் உளவுத்துறை தலைவர் ஆசிப் இப்ராகிம் பேசுகையில், ‘லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, இந்தியன் முஜாகிதீன் போன்றவை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஐஎஸ் அமைப்புகளிடம் இருந்து திரும்பி வரும் இளைஞர்களிடம் அவர்களின் உண்மையான நோக்கம் பற்றி விசாரிக்க வேண்டும்Õ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிஜிபி மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு பாதுகாப்பு குறித்து உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது: இந்த மாநாட்டை டெல்லிக்கு வெளியில் நடத்த வேண்டிய அவசியம் என்ன என சிலர் கேட்கின்றனர். வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் உங்களது முழு கவனமும் மாநாட்டின் மீது குவிய வேண்டும் என்பதற்காகத் தான் இங்கு நடத்தப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய நாளில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களை நான் பாராட்டுகிறேன்.இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை 33 ஆயிரம் போலீசார் பணியில் இருந்த போது உயிரிழந்துள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
 
 தேசத்தின் பாதுகாப்புக்கு புத்திசாலித்தனமான ஒரு நிர்வாகம் தேவையாக உள்ளது. எந்திரத்தனமான வேலையில் இருந்து போலீசார் விடுவிக்கப்பட வேண்டும். தங்களது பணியின் போது காவல் துறையினர் உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் பணியாற்ற வேண்டியது உள்ளது. எனவே காவல் துறையினரின் குடும்பத்தினருக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் தேவையான கல்வி உள்ளிட்ட நலத் திட்டங்களை தர வேண்டியது நமது கடமை. காவல் நிலையங்களுக்கு என தனி வெப்சைட் இருந்தால் அவற்றில் ஒவ்வொரு வாரமும் அங்கு சிறப்பாக நடைபெறும் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க இயலும். காவல் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்கி அதனை மேம்படுத்த வேண்டும். காவல் துறையை, ஸ்மார்ட் போலீசாக மாற்றுவது அவசியம். ஸ்மார்ட் என்பதில் எஸ் என்பது ஸ்டிரிக்ட் (கண்டிப்பு) மற்றும் சென்ஸ்சிடிவ் (கூருணர்வு), எம் என்பது மாடர்ன் (நவீனம்) மற்றும் மொபிலிட்டி (செயல்பாட்டு தன்மை), ஏ என்பது அலர்ட் (உஷார்) மற்றும் அவுக்கவுன்டபிள் (துல்லியம்), ஆர் என்பது ரெஸ்பான்சிவ் (பொறுப்பு) மற்றும் ரிலயபிள் (நம்பக தன்மை), டி என்பது டெக்சவ்வி (தொழில்நுட்ப மேம்பாட்டு திறன்) மற்றும் டிரெய்ன்டு (பயிற்சி) ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தூக்கி எறியப்படுவதற்கு முன் வெளியேறுங்கள் – வைகோவிற்கு சுப்ரமணிய சாமி எச்சரிக்கை!

Sunday, November 30, 2014
சென்னை:கூட்டணியை விட்டு வெளியேறுமாறு வைகோவிற்கு சுப்ரமணிய சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து சுப்ரமணிய சாமி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூட்டணியை விட்டு நீங்கள் தூக்கியெறியப்படுவதற்கு முன் நீங்களாகவே வெளியேறிவிடுங்கள் என்றும், இதற்கு மேல் இதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
வைகோ பல சமயங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வந்தாலும் இன்னும் கூட்டணியை விட்டு வெளியேறாதது, அவரது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் சுப்ரமணிய சாமி வைகோவை இது போன்று பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாய் நாட்டைக் கட்டிக் காத்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், நாட்டையும் கட்சியையும் காட்டிக் கொடுத்தவருக்குமிடையே போட்டி!

Sunday, November 30, 2014
இலங்கைஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாய் நாட்டைக் கட்டிக் காத்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், நாட்டையும் கட்சியையும் காட்டிக் கொடுத்தவருக்குமிடையே போட்டி இடம்பெறவுள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர்.

நாட்டில் நிலவிய கொடிய பயங்கரவாதத்தை இல்லா தொழித்து தமிழ் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களையும் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வைத்து நாட்டை என்றுமில்லாதவாறு அபிவிருத்தி செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தடவையும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

 
இவரை எதிர்த்து ஜனாதிபதியுடன் முதல்நாள் இரவுகூட ஒன்றாக அமர்ந்திருந்து அப்பமும், கட்டுச்சம்பலும் சாப்பிட்டுவிட்டு அடுத்தநாள் அதே ஜனாதிபதியை அவதூறாக விமர்சித்து கட்சிக்கும் நம்பிக்கை வைத்திருந்த கட்சித் தலைவரான ஜனாதிபதிக்கும் துரோகமிழைத்துவிட்டுச் சென்ற மைத்திரிபால சிரிசேன போட்டியிடவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகன இவரை ஜனாதிபதி தனது மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக வைத்திருந்தார். தனது உடன் பிறப்பு போன்ற உயரிய அந்தஸ்தை ஜனாதிபதி வழங்கியும் இருந்தார். ஆனால் இவரோ உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்துவிட்டார்.

உண்மையில் இது பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தது போன்று இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இரவு வரை அவருடன் இருந்து சாப்பிட்டு விட்டு வெறும் முப்பது வெள்ளிக் காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தது போலவும், நபி பெருமானாரைக் காட்டிக்கொடுக்க முயற்சித்த அபு ஜஹீல் போலவுமே உள்ளது.

ஆனால் கூட இருந்தே குழிபறிக்க முனைந்த துரோகிகளான இவர்கள் எல்லாம் இந்த மதத் தலைவர்களைக் காட்டிக்கொடுத்த போதும் அவர்கள் சார்ந்த மார்க்கம் கோடான கோடி மக்களுடன் ஆலவிருட்சமாக வளர்ந்து இன்று உலகம் பூராவும் வியாபித்துள்ளதை நாம் காண்கிறோம். அதேபோன்று ஜனாதிபதி அவர்களும் முன்னரை விடவும் மக்கள் போற்றும் தலைவராக இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நிச்சயம் பெருவெற்றி பெறுவார்.

பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தது போன்று காட்டிக் கொடுத்தவர்கள் அழிந்தமையே வரலாறு. வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கெதிராக சதி செய்தவர்கள் தொடர்பான விபரம் அனைத்தும் அம்பலத்துக்கு விரைவில் வெளிச்சத்திற்கு வரும். பாரிய கற்பாறையை அசைத்தாலும் மெதமுலனவில் வீற்றிருக்கும் ஜனாதிபதியை அசைக்க முடியாது. அவருடன் முழு நாட்டு மக்களும் உள்ளனர் என அஸ்வர் தெரிவித்துள்ள கருத்தானது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதொன்று.

ஏனெனில் நாட்டு மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. அதனால் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதமான சிறு தாக்கம் கூட ஏற்படாது. மக்கள் அவருக்குப் பக்க பலமாக உள்ளனர். சர்வதேச சதிகாரர்களின் பணபலத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள துரோகச் செயலில் ஈடுபட்ட எவரையும் மக்கள் இலகுவில் மன்னிக்கமாட்டார்கள். அவர்களுக்கு உரிய நேரத்தில் மக்கள் தங்கள் வாக்குப்பலத்தின் மூலம் தக்கதண்டனையை பெற்றுக் கொடுப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட்டு இம்முறையும் தோல்வியைத் தழுவினால் தற்போது தான் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோய்விடும் என்பதை நன்கு அறிந்திருந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஒரு பலிக்கடாவை தேடிக் கொண்டி ருந்தார். அவருக்கு அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு தாவிய மைத்திரி பால சிறிசேன ஒரு சிறந்த பலிக்கடாவாக அமைந்திருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேனவினாலும் வேறு எந்த அரசியல் வாதியினாலும் 2005ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டுக்கு சேவை செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்க டிப்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஒரு தேசத்தலைவராக மட்டுமன்றி, மக்களின் ஏகோபித்த தலைவராகவும் இன்று உயர்ந்து, பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஆதரவு வழங்க கட்சிகளும், அரசியல் தலைவர்களும், பொது மக்களும் முண்டியடிக்கின்றனர். பொது வேட்பாளர் மைத்திரிபால தான் முப்பது வருடங்களாக இருந்த கட்சியையே காட்டிக் கொடுத்துள்ளார். ஒரு பதவிக்காக கட்சியைக் காட்டிக் கொடுத்தவர் நாளை நாட்டையே சூறையாட ஒற்றைக் காலில் நிற்கும் வெளிநாட்டுச் சக்திகளிடம் அடிபணிய மாட்டார் என்பது என்ன நிச்சயம்? என்ன உத்தரவாதம்? பதவி கிடைப்பதற்காக தனது தலைவரையும், கட்சியையும் காட்டிக் கொடுத்து கட்சி தாவியவர் நாளை நாட்டை சரியாக நிர்வகிப்பார் என எப்படி கூற முடியும்?

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டுப்பற்று மிக்கவராகக் காணப்படுகிறார். தாய் நாட்டிற்காக சதி முயற்சிகளில் ஈடுபட முயலும் மேற்குலக நாடுகளுடன் போரிட்டு வருகிறார். 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ “ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறாது இருந்திருந்தால், இன்று நாடு வெளிநாட்டு தீய சக்திகளினால் ஆக்கிரமிக் கப்பட்டு புலிகளுக்கு நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்திருக்கக் கூடிய அராஜக நிலை இங்கு தோன்றியிருக்கும். நாட்டு மக்களின் சுதந் திரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகுவதை எவராலும் தடுத்து நிறுத்திருக்க முடியாது இருந்திருக்கும்.

2005இல் ஆரம்பித்த அவரது தேசப்பற்றினால் வெளிநாடுகளில் அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி புலிகளுடனான யுத்தத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் மேற்கொண்டு பயங்கரவாதத்தை 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று அடிபணிய வைத்தார். இதன்மூலம் மக்களை விடுவித்து அவர்களது நல்வாழ்வுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இத்தகைய தாய் நாட்டுப் பற்றுள்ள ஜனாதிபதியை நாட்டு மக்கள் இலகுவில் கைவிட்டுவிட மாட்டார்கள். அதேசமயம் நாட்டைக் காட்டிக் கொடுக்க முயல்வோரையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

நவீன் திஸாநாயக்க அமைச்சுப் பதவியை துறந்துள்ளார்!

Sunday, November 30, 2014
இலங்கை::அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க அமைச்சுப் பதவியை துறந்துள்ளார். அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதா நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு தாம் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜினமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, நீண்டகாலமாக நுவரெலியா மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வந்த நவீன் திஸாநாயக்கவின் பதவி, அமைச்சர் சீ.பி ரட்நாயக்கவிற்கு கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நவீனின் தந்தை காமினி திஸாநாயக்க கடந்த 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது எதிரணியின் ஏமாற்றுவலையில் சிக்கி முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழி தவற மாட்டார்!

 Sunday, November 30, 2014
இலங்கை::பொது எதிரணியின் ஏமாற்றுவலையில் சிக்கி முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழி தவற மாட்டார்களென்று முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் உறுதிபடத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் சமூகம் வழங்கும் ஆதரவில் ஒருபோதும் எந்தக் குறைவும் ஏற்படப் போவ தில்லையெனத் தெரிவித்த அவர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அமோக வெற்றி பெறுவாரென அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.
 
சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர் நிவர்த்தி செய்துள்ளார். உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மிகச் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் சொற்ப பிரச்சினைகளையே எதிர்நோக் குகின்றனர். அவர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் எடுத்துச் சொல்லப்பட்ட போதெல்லாம் அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
 
பொது எதிரணியும் அதனைச் சார்ந்த தலைவர்களும் இன்று தேர்தல் வெற்றிக்காக இனிப்பான வார்த்தைகளைப் பேசுகின்றனர். எனினும் இவர்களின் கடந்த கால வரலாறும் சிறுபான்மை சமூகத்துக்குச் செய்த அநியாயங்களும் நாமறிந்ததே. ஐ. தே. க. முஸ்லிம்களின் காவலன் தானென கூறி அந்த சமூகத்தையே கருவறுத்த சம்பவங்கள் நிறையவே உள்ளன. முஸ்லிம் சமூகம் இதனை ஒருபோதும் மறந்துவிடாது, மறக்கவும் கூடாது.
 
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை சிறுபான்மை சமூகத்துக்கு பல்வேறு நன்மைகளைத் தந்துள்ளது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளனர். பலஸ்தீன மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுத்த ஒரேயொரு தலைவராக ஜனாதிபதி மஹிந்த இனங்காணப்பட்டுள்ளார்.
 
எனவே பொது எதிரணியினரும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஒருபோதுமே முஸ்லிம் மக்களுக்கு நன்மைகள் செய்யப் போவதில்லை. அவ்வாறு நாம் நினைப்பது ஒரு பகற்கனவே. எனவே முஸ்லிம்கள் இந்த விடயத்தில் நிதானமாக சிந்தித்துச் செயலாற்ற வேண்டுமெனவும் வெற்றுக் கோஷங்களும் வெறும் வார்த்தைகளுக்கும் அடிமையாகக் கூடாதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
அமைச்சர்களான பெளஸி, அதாவுல்லாஹ், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர்களான ஹிஸ்புல்லா, ஏ. ஆர். எம். ஏ. காதர், பைசர் முஸ்தபா, முன்னாள் எம்.பி. அஸ்வர், முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஆளுநர் அலவி மெளலானா, அப்துல் காதர் மசூர் மெளலானா, பேருவளை நகரசபை முன்னாள் தலைவர் மர்ஜான் பழல். புத்தளம் நகரபிதா கே. ஏ. பாயிஸ் ஆகியோர் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து செயற்படுவது தெரிந்ததே.  

யாழ் மாவட்ட இராணுவ தளபதியாக பணியாற்றிய உதய பெரேரா கொழும்பிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட விடயம் வழமையான ஒன்று: ருவன் வணிகசூர்ய!

Sunday, November 30, 2014
இலங்கை::யாழ் மாவட்ட இராணுவ தளபதியாக பணியாற்றிய உதய பெரேரா கொழும்பிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட விடயம் வழமையான ஒன்று என இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூர்ய இதனை குறிப்பிட்டுள்ளதுடன்
 
உதய பெரேரா அவரது அனுபவத்தின் அடிப்படையிலேயே கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
 
அவரது அனுபவம் மற்றும் பயிற்சியிலிருந்து நன்மைகளை அனுபவிப்பதே இதன் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் : ஜாதிக ஹெல உறுமய!

Sunday, November 30, 2014
இலங்கை::மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் என்று ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போது இது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபாலவின் வெற்றியில் நிச்சயமாக பங்கேற்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் ஜாதிக ஹெல உறுமயவினால் பொதுக்கொள்கையை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா ஹமில்ரன் பகுதி நெடுஞ்சாலையில் மண்சரிவு. சாலையின் ஒரு பகுதி போக்குவரத்து மூடப்பட்டது!

Sunday, November 30, 2014
வெள்ளிக்கிழமை காலை கனடா - ஹமில்ரன் பகுதியில் நெடுஞ்சாலை 403 கிழக்கு பாதையில் ஏற்ப்பட்ட மண்சரிவினால் அப்பகுதி போக்குவரத்து மூடப்பட்டது. பிரதான நீர் விநியோக குழாய் உடைந்ததே மண்சரிவிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9-மணியளவில் இந்த சம்பவம் மெயின் வீதி மற்றும் யோர்க் புளுவாட் பகுதியில் நடந்தது.
சேறும் சரிந்த மரங்களும் சாலைவழியை தடைசெய்துள்ளதோடு மண்ணிற்கூடாக தண்ணீர் கசிந்த வண்ணம் உள்ளது.
எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க் புளுவாட் மற்றும் மெயின் வீதிக்கிடையில் நெடுஞ்சாலை 403 வெள்ளிக்கிழமை இரவு 9-மணிவரை மூடப்பட்டிருக்குமென ஒன்ராறியோ மாகாண பொலிசார் கூறியுள்ளனர்.வீதி திறக்கப்பட முன்னர் சிதைவுகள் துப்பரவாக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
உடைந்த நில நீர்க்குழாய் மூடப்பட்டு விட்டதாக அறியப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் 7 இலட்சம் வாக்குகள்!

Sunday, November 30, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்தநிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌சவும், எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தீவிரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.
 
2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது  புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடை விதித்தது.அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ச 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளையும் பெற்றனர். அதன்படி ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகள் வித்தியாசத்திலேயே மஹிந்த ராஜபக்‌ச வெற்றி பெற்றார்.
 
இம்முறை வடக்கு மாகாணத்தில் 2013ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 477 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும், மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆகியோரை எதிரணியில் இணைக்கும் முயற்சியில், இரண்டு நாடுகளின் தூதரகங்கள்!

Sunday, November 30, 2014
இலங்கை::ஆளும்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆகியோரை எதிரணியில் இணைக்கும் முயற்சியில், இரண்டு நாடுகளின் தூதரகங்கள் ஈடுபட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம்சுமத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு தூதரகங்கள் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல வைக்க முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆளும் கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்கும் பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் மொத்தப் பணம் அல்ல எனவும் ஒரு பகுதி பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள எவ்வளவு பணம் தேவை என்ற பேரம் பேசுதல் அடிப்படையில் ஆளும் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இரண்டு வெளிநாடுகளின் பிரபலமான உளவுப் பிரிவினரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதல் கட்டமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாளால் வெட்டியும், வெடிபொருட்களை வீசியும் சீனாவில் தீவிரவாதிகள் தாக்குதல் 15 பேர் பலி: 14 பேர் படுகாயம்!

Sunday, November 30, 2014
பீஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பொது இடத்தில் புகுந்த தீவிரவாதிகள் வாளால் வெட்டியும், வெடிபொருட்களை வீசியும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்களில் 4 பேர் பலியாயினர். 14 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் பதில் தாக்குதல் நடத்தி 11 தீவிரவாதிகளையும் கொன்றனர்.
 
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரி, உய்குர் பிரிவினர், கிழக்கு துருக்கிஸ்தான் தீவிரவாத அமைப்பை நடத்தி வருகின்றனர். அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்ட இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சமீபகாலமாக சீனாவில் பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
 
கடந்த ஜூலை மாதம் சாசே நகரில் புகுந்த தீவிரவாதிகள் வாள் மற்றும் கோடாரியால் சரமாரியாக வெட்டியதில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் பிடிபட்ட 27 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு சாசே கவுன்டி நகரத்தின் பரபரப்பான பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், வாள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
 
 இதில் பொதுமக்களில் 4 பேர் பலியாயினர். 14 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விரைந்து வந்து, பதில் தாக்குதல் நடத்தி 11 தீவிரவாதிகளையும் கொன்றதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தகவல் வெளியிட்டுள்ளது.சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான வெடிபொருட்களும், வாள்களும், கோடாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆஸி.யில் தஞ்சம் அடைய படகில் வந்த 37 அகதிகள் இலங்கையிடம் ஒப்படைப்பு!

Sunday, November 30, 2014
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகில் சென்ற 37 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படையினர் பிடித்து, இலங்கையிடம் ஒப்படைத்தனர்.இலங்கையிலிருந்து கடந்த 1ம் தேதி 6 குழந்தைகள் உட்பட 37 பேர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகில் சென்றனர். சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் நுழைய முயன்ற இவர்களை, இந்தோனேஷிய கடல் பகுதியில் வழிமறித்து ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
 
இது குறித்து இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 27ம் தேதி 37 அகதிகளும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
அவர்களை, இலங்கையின் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இதே போல தஞ்சமடைய வந்த 41 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்து இலங்கையிடம் ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேறியதாக அவர்கள் மீது தொடரப்பட்ட அந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Saturday, November 29, 2014

புலிகளின் தீவிரவாத அமைப்பான மாவீரர்களை நினைவு கூர்ந்த ராதிகாவின் உரை: கனடிய அரசியலில் சர்ச்சை!

Rateka-MP

Saturday, November 29, 2014
கனடிய நாடாளுமன்றத்தில், கடந்த 27ம் திகதி மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் நிகழ்த்திய உரை கனடிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
புலிகளின் தீவிரவாத அமைப்பான மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே கூறியுள்ளார். மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூர வேண்டிய நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இந்த மாவீரர் தினம், தீவிரவாத அமைப்பான புலிகள் மறைந்த தினம். கனடிய வீரர்கள் இறந்த நாளை, தீவிரவாதிகள் இறந்த நாளுடன் ஒப்பிட்டு கூறியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Friday, November 28, 2014

சர்வதேச நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பணம் புலிகளின் செயற்பாட்டினை பலப்படுத்தியது: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

     
     
     

Friday, November 28, 2014
இலங்கை::புலிகள் பயங்கரவாதத்தின் ஆயுதக்கொள்கை சர்வதேச அளவில் பலமடையவும் சர்வதேச அளவில்  புலிகள் பலமான இயக்கமாக உருவெடுக்கவும் இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளுக்கிடையேயான அரசியல் பாதுகாப்பு புரிந்துணர்வின்மையே காரணம் என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புலிகளின் தமிழீழ கோட்பாட்டையும் தாண்டிய சர்வதேச குற்றங்களில் விடுதலைப்புலிகள் செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.
 
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு பிரதம அதிதிகளுக்கான மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
நாட்டில் முப்பது வருட கால ஆயுதப்போராட்டத்தினை விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட போது சர்வதேசத்தின் பார்வை மிகவும் குறைவாகவே இருந்தது. நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடுகள் இல்லாமையே இலங்கையில் இருந்து கொண்டு சர்வதேச பலம் பொருந்திய தீவிரவாத இயக்கமொன்று ஆரம்பமாக காரணமாக அமைந்தது. கடந்த மூன்று தசாப்த காலத்தில்   புலிகள் தீவிரவாதம் மிக மோசமானதும் பயங்கரமானதுமான அமைப்பாக தோற்றம் பெற்றிருந்தது.  புலிகளின் சர்வதேசத் தொடர்பு அவர்களின் சர்வதேச வலையமைப்பு என்பன மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்றமடைந்திருந்தது.
 
குறிப்பாக தமிழீழம் என்ற கோட்பாட்டில்  புலிகள் இயக்கம் ஆரம்பமாகியது என்று கூறினாலும் அதையும் தாண்டி சர்வதேச குற்றங்களில் சர்வதேச தீவிரவாதிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக இந்த முப்பது ஆண்டுகளில் ஆட்கடத்தல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு கிழக்கில் இருந்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் இயக்கத்தினரை மேற்கு மத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கு கடத்தியிருந்ததுடன் சட்ட விரோத ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
 
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை செய்து வந்தனர். அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுடனான ஆயுத மாற்றுக் கலாசாரத்தில்  புலிகளின் செயற்பாடுகள் காணப்பட்டது. இவை அனைத்திற்கும் ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளை தமது சந்திப்பு வலயமாக பயன்படுத்திக் கொண்டனர்.
 
அதேபோல் சர்வதேச நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பணம் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டினை பலப்படுத்தியது. சர்வதேச வங்கிகள் பண பரிமாற்று செயற்பாடுகள் அனைத்தும்  புலிகளின் வங்கிக் கணக்குகளை நிரப்பியது. வடக்கில் தமது ஆயுத கலாசாரத்தையும் சட்ட விரோத செயற்பாடுகளையும் தயங்காது செய்வதற்கு பணவுதவியும் சர்வதேச பாதுகாப்பும் கைகொடுத்தது. அதுமட்டுமன்றி  புலிகளின் கடல் மார்க்க செயற்பாடுகள் தென்னிந்திய மற்றும் ஏனைய கடல் மார்க்கமான தாய்லாந்து இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கிடையே பரவியதுடன் 2006இல் தாய்லாந்து இந்தோனேஷியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த இயக்கமாக பிரகடனப்படுத்தவும் இதுவே காரணமாக அமைந்தது.
 
எனவே, இலங்கை கடந்த முப்பது வருட காலமாக தனது எல்லையினை பாதுகாத்துக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டது. எனினும் 2005ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்கள் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவதுடன் சர்வதேச புரிந்துணர்வு செயற்பாடுகள் கைகொடுத்தது. அதன் பின்னரான 4 ஆண்டு காலத்தில் உலகின் பலம்பொருந்திய  புலிகளின் சாம்ராஜ்யம் முற்று முழுதாக அழிக்கப்பட்டது. தற்போது அதன் விளைவுகளையும் நன்மைகளையும் முழு நாட்டு மக்களும் அனுபவிக்க வழிவகுத்துள்ளது. யுத்தம் முடிவடைந்து மிகக்குறுகிய காலத்தினுள் நாட்டில் அபிவிருத்தி பலமடைந்து வருகின்றது.
எனவே, தற்போது ஆசியாவின் சமாதானமிக்க நாடாக இலங்கை மாறியுள்ளது. அதற்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களே முக்கியமானது.
 
எனவே, தற்போது ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு செயற்பாடுகள் மிகவும் முக்கியமானது. அதைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

புலிகளின் மாவீரர் தினத்தையொட்டிய அலைபேசியூடாக மாவீரர் தின செய்தி அனுப்பிய இருவர் கைது!

Friday, November 28, 2014
இலங்கை::புலிகளின் மாவீரர் தினத்தையொட்டிய நிகழ்வுகள் ரகசிமாக நடக்கின்றதா என்பதை அவதானிக்கும் வகையில் கிழக்கில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் உஷார் படுத்தப்பட்டிருந்த நிலையில்  நேற்று வியாழக்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலைபேசியூடாக மாவீரர் தினச் செய்திகளை பரிமாறியதாகக் கூறப்படும்  இருவரை நேற்று வியாழக்கிழமை  கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவீரர்களாகிய நீங்கள் புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள், என்றோ ஒரு நாள் நீங்கள் வீறுகொண்டெழுவீர்கள்' என்ற குறுஞ்செய்தியை பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படும் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சோனியா முன்னிலையில் கட்சியில் இணைந்தார் நடிகை குஷ்பு! ஸ்டாலின் எதிரி அல்ல; கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெறுவேன்!

Friday, November 28, 2014
சென்னை::திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. 
 
இந்தநிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு, இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் நடிகை குஷ்பு கூறியிருந்தார்.
 
இந்நிலையில் அவர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்படி டெல்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் உடனிருந்தார்.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
 
சிறுவயது முதலே காங்கிரஸ் மீது எனக்கு ஈடுபாடு உண்டு என்றும் காங்கிரஸில் இணைந்தது பெருமையாக உள்ளது என்றும் கூறினார். நாட்டின் நலன் மீது என் கவனம் உள்ளது, தமிழ் நாட்டில் மட்டுமின்றி மொத்த நாட்டின் நலனின் மீதும் எனது கவனம் இருக்கும். இந்தியாவை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் மட்டுமே, எனவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன் என்றார்.
 
நான் பதவியை எதிர்பார்க்கக் கூடியவள் இல்லை. திமுகவில் 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். பதவி வேண்டும் என்றால், அந்தக் கட்சியிலேயே கேட்டுப் பெற்றிருக்க முடியும்.
ஆனால் பதவி கேட்டதும் இல்லை. அதை விரும்பியதும் இல்லை. எந்தப் பொறுப்பு கொடுக்க வேண்டும் காங்கிரஸூக்குத் தெரியும். அவர்கள் கொடுப்பார்கள்.
மு.க.ஸ்டாலினை எப்போதுமே என்னுடைய எதிரி என்று கூறியது இல்லை. அவருடன் பிரச்னை என்று கூறியதும் இல்லை. என்னுடைய ராஜினாமா கடிதம் திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலினுக்கும் சென்றிருக்கும்.
 
இப்போதுகூட எங்காவது ஸ்டாலினைப் பார்த்தால், அவருக்கு வணக்கம் சொல்லமாட்டேன் என்பதெல்லாம் இல்லை. அந்தப் பண்பாடு, மரியாதை என்றைக்கும் இருக்கும். சிலர் எல்லா விஷயத்துக்கும் கண், காது வைத்து உருவகப்படுத்துவர்.
அதற்கு நான் பொறுப்பாக முடியாது. என் வீடு மீதான தாக்குதலுக்குப் பிறகும் ஒன்றரை ஆண்டுகள் திமுகவில் இருந்துள்ளேன். அதனால் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அப்போதே திமுகவிலிருந்து வெளிவந்து என் எதிர்ப்பைத் தெரிவிதிருக்க முடியும்.
திமுகவில் அவமானப்படுத்தப்பட்டதால் காங்கிரஸில் சேர்ந்தீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு, ‘இதன் காரணத்தை நான் அப்போதும் கூறவில்லை. அதை இப்போது கூற வேண்டிய அவசியமில்லை’ என பதிலளித்தார்.
 
அவர், பாஜகவில் இணைவதாக எழுந்த பேச்சு குறித்த கேள்விக்கு, ஒரே பக்கமாக அடிக்கும் அலையுடன் போக வேண்டிய அவசியமில்லை. அதன் எதிர்ப்புறம் செல்வதில் தவறில்லை எனவும் குஷ்பு தெரிவித்தார்.
 
மதநல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ். இந்தக் கட்சியால் மட்டும் தான் நம் நாட்டில் ஒற்றுமையை வளர்க்க முடியும் என்பது எனது கருத்து என்று குஷ்பு விளக்கம் அளித்தார்.
 
வரும் சட்டசபை தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் எனக்கு எதிர்ப்பு ஒன்று இல்லை. கூட்டணி தொடர்பாக கட்சியின் பெரியவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது.
தற்போது டெல்லியில் உள்ளேன். சென்னைக்கு வந்தால், கண்டிப்பாக திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவேன்.
 
கருணாநிதி மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக்கு அன்பு, மரியாதை என்றைக்கும் உண்டு. இவ்வாறு நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் குஷ்பு பதிலளித்தார். அவருக்கு 5 மொழிகள் தெரியும்.

ராகுலை சந்தித்த நடிகை குஷ்பு!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
 
திமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய நடிகை குஷ்பு (44) நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் இன்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பூங்கொத்து அளித்தார்.

புலி சீமான் ஆவேசம்: ரஜினிக்கு என்ன தகுதி உள்ளது?; 2016 தேர்தலில் தனித்து போட்டி: தேர்தல் வரட்டும். போட்டு பார்த்து விடலாம், பிரபாகரனின் தம்பிகளா? ரஜினி ரசிகர்களா?

Friday, November 28, 2014
சென்னை::திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ப்போது அவர், ‘’ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நாம் நினைவு கூர்ந்துக் கொண்டிருக்கிறோம்.
 
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூறி தடை செய்துள்ளனர். முடக்கி போடுவதற்கும், மடக்கி வைப்பதற்கும் நாங்கள் குடைகள் அல்ல. புலிப்படையை பார்த்து வளர்ந்தது நாம் தமிழர் படை. ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி இரண்டுமே நம் விடுதலைக்கு எதிராக இருக்கும்போது, இவர்களுக்கு எதிராக மக்களை திரட்டி நாம் வலுவாக வேண்டும். படையை பெருக்கி மக்களை திரட்டி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். பிரபாகரனுக்கு இங்கே ஏன் விழா கொண்டாடுகிறீர்கள், பிரபாகரனை எதற்காக இங்கு தலைவர் என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவராகும் போது, தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரன் தலைவராக கூடாதா?
 
சோனியா அன்னையாகலாம், நேரு மாமாவாகலாம், என் மொழிக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாக கூடாதா? அண்ணன் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.
முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காகவா கட்சி ஆரம்பித்து உள்ளீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். பிறகு முச்சந்தியில கத்தி கிட்டு சாகவா கட்சி ஆரம் பிச்சுருக்கோம். ஆமாம் அதிகாரத்தை கைப்பற்றத்தான் கட்சி ஆரம்பிச்சுருக்கோம். உணர்வுள்ள தமிழர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் ஒரே மாற்று. நாங்கள் ஆட்சியை பிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் கைப்பற்றுவோம். அதுவரை காத்திருக்கிற பொறுமையும், தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடுகிற தைரியமும் எங்களுக்கு உண்டு.
 
சீமான் முதலமைச்சர் ஆகிறானா, இல்லையா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இந்த மண்ணை ஆள்கிற சூழலை உருவாக்காமல் விடமாட்டோம்.
ரஜினி அரசியலுக்கு வரணும் என்று பலரும் அழைக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு உள்ளது?
 
தமிழ் மண்ணிற்காக, மொழிக்காக, இயற்கையை காப்பதற்காக, இந்த மக்களுக்காக தன் ஆயுளையே அற்பணித்த பலர் இந்த மண்ணில் இருக்கும் போது, ரஜினியை முன்னிறுத்துகிறார்கள். அதற்கும் ஆதரவு கொடுக்கவும் சிலர் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்றால், இந்த தமிழ் சமூகம் எதை நோக்கி போகின்றது.
 
மக்களுக்காக எதாவது ஒரு விஷயத்தில் ரஜினி உறுதியாக நின்றிருக்கிறாரா? வரட்டும் பார்க்கலாம். தனியாக வந்தாலும் சரி, யாரோடும் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும். போட்டு பார்த்து விடலாம், பிரபாகரனின் தம்பிகளா? ரஜினி ரசிகர்களா? என்று.
 
2016 தேர்தலில் தனித்து நிற்கபோகிறீர்களா, கூட்டணி வைக்க போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே 2016 தேர்தலில் தனித்து நிற்க போகிறோம் என்றுதான் நாம் சொல்லி வருகிறோம்.
 
அனைத்து தொகுதியிலும் நாம் தனித்துதான் நிற்க போறோம். எல்லா தமிழர்களுக்கான பொதுக் கட்சியாக, நம் கட்சியை எடுத்து செல்ல வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்று கொள்ள தயாராக இருப்போம்.
 
வாழ்வோ, சாவோ நாம் தனித்துதான் நிற்க போகிறோம். எவருக்கு கீழும் நாங்கள் தேர்தலை சந்திக்க மாட்டோம். தேர்தல் அரசியல் என்பது நெடுந்தூர பயணம். நாம் தேர்தலில் நிற்காதவரை அன்றைய சூழலுக்கு ஏற்ப சில கட்சிகளை ஆதரித்திருக்கலாம். ஆனால் நாங்கள் களத்திற்கு வரும்போது தனித்து தான், தேவையென்றால் எங்கள் தலைமையை ஏற்று, எங்கள் பின்னே வரவிரும்புபவர்கள் வரலாம்’’என்று தெரிவித்தார்.

Thursday, November 27, 2014

தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை!

Thursday, November 27, 2014
இலங்கை::
இலங்கை கடற்படையினரால் வெவ்வேறு காலகட்டங்களில் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஆலோசனை நடத்தியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், "கோட்டாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்தேன். அவரிடம் தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மீனவர்கள் படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் மீட்ட மேலும் 2184 நகை பொதிகள் அடையாளம் காணப்பட்டன!

Thursday, November 27, 2014
இலங்கை::புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங் களில் மேலும் 2184 பொதிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
அடையாளங் காணப்பட்ட 1962 உரிமையாளர்களின் தங்க ஆபரணங் களை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரி மாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள பொதிகளின் உரிமையாளர் களை தேடி அடையாளங் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருவதாக தெரிவித்த இராணுவத் தளபதி, அவைகளும் உரிய முறையில் அடையாளங் காணப்பட்டு பின்னர் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க மேலும் விளக்கமளிக்கையில்:
புலிகளின் சட்டவிரோத வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினரால் மீட்டெடுக்கப்பட்டதாக நாங்கள் தொடராக கூறி வந்தோம். தங்க ஆபரணங்கள் மாத்திரமன்றி ஆவணங்கள், ஆயிரக்கணக்கான கால் நடைகள், பூனை மற்றும் நாய்க் குட்டிகளை யும் கூட மீட்டெடுத்து முடியுமான அளவு அடையாளங் கண்டு உரிமையாளர் களிடம் கையளித்தோம்.
தமிழ் மக்கள் மிகவும் பெறுமதியாக கருதும் தங்க ஆபரணங்களும் இவ்வாறு புலிகளின் சட்டவிரோத வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டன. இவற்றில் சில பொதிகளில் உரிமையாளர்களின் விபரங்கள், பற்றுச்சீட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இதன் உரிமையாளர்களை உரிய முறையில் அடையாளங் கண்டு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ச்சியாக ஆலோசனைகளை எமக்கு வழங்கி வந்தார். என்றாலும், உரிமையாளர் களை அடையாளங் காண்பது என்பது மிகவும் இலகுவான ஒன்றல்ல. என்றாலும் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டியும் பொருட்களை காண்பித்தும் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
இதன் முதற் கட்டமாக வட மாகாணத் தைச் சேர்ந்த 25 பேருக்கு தங்களது பெறுமதி வாய்ந்த நகைகளை கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர் வமாக கையளித்தார். இவ்வாறு தற்பொழுது அடையாளங் காணப்பட்ட 1962 உரிமையாளர்களுக்கே அடுத்தமாதம் தங்க நகைகள் கையளிக்கப் படவுள்ளன. இவர்களில் மன்னாரைச் சேர்ந்த 223 பேரும், வவுனியா 319, கிளிநொச்சி 1152, முல்லைத்தீவு 186, யாழ்ப்பாணம் 45 பேரும்அடங்குவர்.
இராணுவத்தினர் தங்க ஆபரணங்களை அடையாளங் காண்பதற்காக தாய் ஒருவரிடம் சென்றிருந்தனர். அந்த தாய் தனது ஏழு பிள்ளைகளின் ஆபரணங் களையும் அடகு வைத்திருந்தார். உங்களது தங்கம் எம்மிடம் உள்ளது என்று கூறியும் அந்த தாய் நம்பவில்லை. இந்நிலையில் அதனை காண்பித்ததும் அந்த தாய் மயக்கம் போட்டு விழுந் துள்ளார்.  ஏனெனில் இந்த தங்கம் என்றாவது திரும்பி கிடைக்கும் என்று தான் நம்பவில்லை என்றார். இந்நிலையில் இவ்வாறு உரிமையாளர்களிடம் வழங்குவது ஒரு சிறப்பான நிகழ்வாகும் என்றார்.

திருகோணமலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கட்சி தாவினார்!

Thursday, November 27, 2014
இலங்கை::திருகோணமலை – சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
 
(25) காலை இடம்பெற்ற சேருவில பிரதேச சபை மாதாந்த அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றியவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் அருகில் அமர்ந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக கே.சிவலோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஹூனைஸ் பாரூக் ‘பெல்டி’!!

Thursday, November 27, 2014
இலங்கை::அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக், ஐக்கிய தேசியக் கட்சியில்  இணைந்து கொண்டார்.

ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு பெல்டி அடித்திருக்கும் மற்றுமொரு அரசியல்வாதியாக ஹூனைஸ் பாரூக் திகழ்கிறார்.

தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, November 27, 2014
மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு நன்றிதெரிவித்துள்ளார்.
 
நேபாளத்தில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளையே மோடி நன்றி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அக்பர்டீன் டுவிட்டர்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய மீனவர்கனை மன்னித்து விடுதலைசெய்து திருப்பியனுப்பியதற்காக மோடி நன்றிதெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமைகள் என்பது ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயம். ஆனால் அது சிலரால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய ராஜபக்ச, "மனித உரிமைகள் என்பது ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயம். ஆனால் அது சிலரால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

பிற நாடுகளின் உள்விவகாரத்தில், சுதந்திரத்தில் தலையிட மனித உரிமை அத்துமீறல் குற்றச்சாட்டு ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாதம் பிராந்தியங்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது" என்றார்.
 
வெளியுலக அச்சுறுத்தல்களுக்கு எதிராக சார்க் நாடுகள் அனைத்தும் கைகோர்த்து செயற்படுவது அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரசியல் சார்ந்த இருதரப்பு பிரச்சினைகளில் தலையிடாமை சார்க் நாடுகளின் கொள்கையாக இருந்தாலும், மேற்குலக வெளி அச்சுறுத்தல்களில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கு நாம் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வெளிப்புற சூழ்ச்சிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டில் சிறப்புரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
சமாதானம் சுபீட்சத்திற்கான பலமான ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் இடம்பெற்று வரும் இம்மாநாட்டில் சார்க் அமைப்பைச் சேர்ந்த 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தெற்காசிய ஒத்துழைப்பு (சார்க்) அமைப்பில் இதுவரை மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையூம் தலைமைப் பதவியை வகித்ததுடன், இம்முறை நேபாள பிரதமர் சுசில் கொய்ராலவுக்கு உத்தியோகபூர்வமாக அப்பதவி வழங்கப்பட்டது.
 
சார்க் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு அரச தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் பயங் கரவாதத்தினால் எதிர்நோக்க வேண்டியுள்ள அச்சுறுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தகைய அச்சுறுத்தலை வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கும் அதிலிருந்து தமது நாடுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அரச தலைவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.
 
அங்கத்துவ நாடுகளுக்கு மேற்குலக நாடுகளில் இருந்து எதிர்கொள்ள நேரும் அச்சுறுத்தல்களின் போது ஒன்றிணைந்து அதற்கு முகம் கொடுப்பதற்கு சார்க் அமைப்புகள் முன்வர வேண்டுமென்று அமைப்பின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்தார். பயங்கரவாதம் நாட்டின் எல்லைக்களைக் கடந்து
 
சர்வதேசமெங்கும் பரவியுள் ளதாகவும் சார்க் பிராந்திய நாடுகள் அந்த அச்சுறுத்தலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அதற்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கும் பயங்கவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் என்றும் இம்மாநாட்டின் போது பூட்டான் பிரதமர் கேட்டுக் கொண்டார். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங் களையும் தடுப்பதும் கட்டுப்படுத் துவதும் ஒழிப்பதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது நாட்டு மண்ணை வேறு நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக பயன்படுத் துவதற்கு இடமளிக்க கூடாது என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் அஷ்ரப்கான் இங்கு குறிப்பிட்டார். பயங்கரவாதம் மற்றும் சர்வதேச குற்றங்களுக்கு எதிராக சார்க் பிராந்திய நாடுகள் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாடுகளின் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.
 
அவுஸ்திரேலியா, சீனா, ஈரான், ஜப்பான், கொரியா, மியன்மார், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடனான தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் டபிள்யூ.எம். செனவிரத்ன ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
 
சார்க் பிராந்திய நாடுகளின் தலைவர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஜீ மொகமட் அஷ்ரப் கனி, பங்கள தேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் லைன் செங் ஷெரிங் தொப்கே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Wednesday, November 26, 2014

புதுக்கோட்டையில் புலிகள் ஆதரவு இலங்கை அகதிகள் மீது தடியடி!

Wednesday, November 26, 2014
புதுக்கோட்டை::புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
 
முகாமில் உள்ளவர்கள் சேர்ந்து அங்கு சக்தி விநாயகர் கோவில் கட்டினர். அதற்கு நாளை 27–ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக வல்லத்திராகோட்டை போலீசில் அனுமதி கேட்டும மனு அளித்திருந்தனர்.
 
இந்நிலையில் இன்று 26–ந் தேதி புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் என்பதாலும், நாளை 27–ந் தேதி புலிகளின் மாவீரர் தினம் என்பதாலும் அகதிகள் முகாமில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என போலீசார் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தனர்.
 
ஆனால் முகாமில் உள்ளவர்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர். நேற்று யாகசாலை பூஜைகள் ஆரம்பித்தன. இதனை அறிந்த புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரெண்டு உமா தோப்புக்கொல்லை அகதிகள் முகாமிற்கு வந்தார். முகாமில் உள்ளவர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். கும்பாபிஷேகத்தை 27–ந் தேதிக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
 
மேலும் யாகசாலை பூஜைக்கு வந்த குருக்கள் மற்றும் முகாம் முக்கியஸ்தர்கள் சிலரிடம் கும்பாபிஷேகம் நடத்த மாட்டோம் என எழுதி வாங்கினர். ஆனால் முகாம் வாசிகள் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இன்று காலை வரை முகாமிலேயே போலீஸ் சூப்பிரெண்டு உமா இருந்தார். காலை 6 மணிக்கு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
 
இதன் பிறகு முகாமில் இருந்தவர்கள் திடீரென புதுக்கோட்டை–ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி டி.எஸ்.பி. பாலகுரு எச்சரித்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் முகாம் வாசிகள் மறியலை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து முகாமிற்குள் ஓடினர். 42 பெண்கள் உள்பட 84 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்பகுதியில் மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
இதன் பிறகு மீண்டும் போலீஸ் சூப்பிரெண்டு உமா முகாமிற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். போலீஸ் தடையை மீறி கும்பாபிஷேம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடியவருக்கு காவல்துறை அடி உதை!

Wednesday, November 26, 2014
சென்னை::மந்தைவெளி அருகில் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடியவரை காவல் துறையினர்  கைது செய்துள்ளனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மந்தவெளி அருகில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை எடுக்க காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர்  அப்பொழுது அதை எடுக்க வேண்டாம் என்று திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த குட்டி  உமாபதி என்பவர் தடுத்துள்ளார்.
 
அப்பொழுது விதிமுறையின் கீழ் பேனர் வைக்க கூடாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது, அதற்கு உமாபதி அருகில் இருந்த டாஸ்மார்க் கடை 24 மணி நேரமும் இயங்குகிறது இதை என்றாவது நீங்கள் தடுத்து நிறுத்தியது உண்டா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
 
இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் குட்டி உமாபதியை கைது செய்து அபிராமிபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர், சுற்றியிருந்த புலிகளின் ஆதரவாளர்களால்  சாலை மறியலில் ஈடுபட்டிருந்த நேரத்தில் காவல்துறையினர் குட்டி உமாபதியை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். காவல்துறை கடுமையாக தாக்கியதில் குட்டி உமாபதியின் கை கால்கள் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது, குட்டி உமாபதி மருத்துவ சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கணக்கான புலிகளின் ஆதரவாளர்களால் தமிழக காவல் துறை  கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் ஐநூறுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை அண்ணாசாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.