Wednesday, November 26, 2014
புதுக்கோட்டை::புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
முகாமில் உள்ளவர்கள் சேர்ந்து அங்கு சக்தி விநாயகர் கோவில் கட்டினர். அதற்கு நாளை 27–ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக வல்லத்திராகோட்டை போலீசில் அனுமதி கேட்டும மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று 26–ந் தேதி புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் என்பதாலும், நாளை 27–ந் தேதி புலிகளின் மாவீரர் தினம் என்பதாலும் அகதிகள் முகாமில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என போலீசார் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தனர்.
ஆனால் முகாமில் உள்ளவர்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர். நேற்று யாகசாலை பூஜைகள் ஆரம்பித்தன. இதனை அறிந்த புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரெண்டு உமா தோப்புக்கொல்லை அகதிகள் முகாமிற்கு வந்தார். முகாமில் உள்ளவர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். கும்பாபிஷேகத்தை 27–ந் தேதிக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
மேலும் யாகசாலை பூஜைக்கு வந்த குருக்கள் மற்றும் முகாம் முக்கியஸ்தர்கள் சிலரிடம் கும்பாபிஷேகம் நடத்த மாட்டோம் என எழுதி வாங்கினர். ஆனால் முகாம் வாசிகள் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இன்று காலை வரை முகாமிலேயே போலீஸ் சூப்பிரெண்டு உமா இருந்தார். காலை 6 மணிக்கு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதன் பிறகு முகாமில் இருந்தவர்கள் திடீரென புதுக்கோட்டை–ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி டி.எஸ்.பி. பாலகுரு எச்சரித்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் முகாம் வாசிகள் மறியலை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து முகாமிற்குள் ஓடினர். 42 பெண்கள் உள்பட 84 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்பகுதியில் மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதன் பிறகு மீண்டும் போலீஸ் சூப்பிரெண்டு உமா முகாமிற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். போலீஸ் தடையை மீறி கும்பாபிஷேம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment