Friday, November 28, 2014
சென்னை::திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அவர், ‘’ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நாம் நினைவு கூர்ந்துக் கொண்டிருக்கிறோம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூறி தடை செய்துள்ளனர். முடக்கி போடுவதற்கும், மடக்கி வைப்பதற்கும் நாங்கள் குடைகள் அல்ல. புலிப்படையை பார்த்து வளர்ந்தது நாம் தமிழர் படை. ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி இரண்டுமே நம் விடுதலைக்கு எதிராக இருக்கும்போது, இவர்களுக்கு எதிராக மக்களை திரட்டி நாம் வலுவாக வேண்டும். படையை பெருக்கி மக்களை திரட்டி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். பிரபாகரனுக்கு இங்கே ஏன் விழா கொண்டாடுகிறீர்கள், பிரபாகரனை எதற்காக இங்கு தலைவர் என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவராகும் போது, தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரன் தலைவராக கூடாதா?
சோனியா அன்னையாகலாம், நேரு மாமாவாகலாம், என் மொழிக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாக கூடாதா? அண்ணன் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.
முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காகவா கட்சி ஆரம்பித்து உள்ளீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். பிறகு முச்சந்தியில கத்தி கிட்டு சாகவா கட்சி ஆரம் பிச்சுருக்கோம். ஆமாம் அதிகாரத்தை கைப்பற்றத்தான் கட்சி ஆரம்பிச்சுருக்கோம். உணர்வுள்ள தமிழர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் ஒரே மாற்று. நாங்கள் ஆட்சியை பிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் கைப்பற்றுவோம். அதுவரை காத்திருக்கிற பொறுமையும், தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடுகிற தைரியமும் எங்களுக்கு உண்டு.
சீமான் முதலமைச்சர் ஆகிறானா, இல்லையா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இந்த மண்ணை ஆள்கிற சூழலை உருவாக்காமல் விடமாட்டோம்.
ரஜினி அரசியலுக்கு வரணும் என்று பலரும் அழைக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு உள்ளது?
தமிழ் மண்ணிற்காக, மொழிக்காக, இயற்கையை காப்பதற்காக, இந்த மக்களுக்காக தன் ஆயுளையே அற்பணித்த பலர் இந்த மண்ணில் இருக்கும் போது, ரஜினியை முன்னிறுத்துகிறார்கள். அதற்கும் ஆதரவு கொடுக்கவும் சிலர் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்றால், இந்த தமிழ் சமூகம் எதை நோக்கி போகின்றது.
மக்களுக்காக எதாவது ஒரு விஷயத்தில் ரஜினி உறுதியாக நின்றிருக்கிறாரா? வரட்டும் பார்க்கலாம். தனியாக வந்தாலும் சரி, யாரோடும் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும். போட்டு பார்த்து விடலாம், பிரபாகரனின் தம்பிகளா? ரஜினி ரசிகர்களா? என்று.
2016 தேர்தலில் தனித்து நிற்கபோகிறீர்களா, கூட்டணி வைக்க போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே 2016 தேர்தலில் தனித்து நிற்க போகிறோம் என்றுதான் நாம் சொல்லி வருகிறோம்.
அனைத்து தொகுதியிலும் நாம் தனித்துதான் நிற்க போறோம். எல்லா தமிழர்களுக்கான பொதுக் கட்சியாக, நம் கட்சியை எடுத்து செல்ல வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்று கொள்ள தயாராக இருப்போம்.
வாழ்வோ, சாவோ நாம் தனித்துதான் நிற்க போகிறோம். எவருக்கு கீழும் நாங்கள் தேர்தலை சந்திக்க மாட்டோம். தேர்தல் அரசியல் என்பது நெடுந்தூர பயணம். நாம் தேர்தலில் நிற்காதவரை அன்றைய சூழலுக்கு ஏற்ப சில கட்சிகளை ஆதரித்திருக்கலாம். ஆனால் நாங்கள் களத்திற்கு வரும்போது தனித்து தான், தேவையென்றால் எங்கள் தலைமையை ஏற்று, எங்கள் பின்னே வரவிரும்புபவர்கள் வரலாம்’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment