Saturday, December 1, 2012

வினையாக முடியும் "விளையாட்டு' : -உலக எய்ட்ஸ் தினம்!

Saturday, December 01, 2012
சென்னை::எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், டிச.,1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2011 - 2015 வரை "கெட்டிங் டூ ஜூரோ' (எய்ட்ஸ் இல்லாத) என்பது மையக்கருத்து. எச்.ஐ.வி., வைரசால் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனித செல்களில் பரவி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, உடலை போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

எப்படி பரவுகிறது:

பாதுகாப்பற்ற உறவு, எச்.ஐ.வி., உள்ள தாய் மூலம் குழந்தைக்கு, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி ஆகிய காரணங்களால் மட்டுமே எச்.ஐ.வி., தாக்குகிறது. இதைத்தவிர அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது, அவர்களை தொடுவது, அவர்களுடன் உணவுகளை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றால் எச்.ஐ.வி., பரவாது.


என்ன சிகிச்சை:

எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தீவிரமாக உள்ளனர். தற்போது, வைரசின் வீரியத்தை குறைக்கும் மருந்து மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்சை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நீண்ட நாட்கள் வாழ சிகிச்சை முறைகள் உள்ளன.


எத்தனை பேர் :

உலகில், 2011ம் ஆண்டு கணக்கின் படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்கின்றனர். 25 லட்சம் பேருக்கு புதிதாக நோய் ஏற்பட்டுள்ளது. 17 லட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. "இந்தியாவில் 1986ம் ஆண்டு, தமிழகத்தில் தான் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 57 லட்சம் பேர் எய்ட்சுடன் வாழ்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீதம் பேர் பெண்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்தியாவில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு பிறக்கின்றன என யூனிசெப் தெரிவிக்கிறது.


எப்படி தடுப்பது:

எய்ட்ஸ் வராமல் தடுப்பது, அவரவர் கையில் உள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த பாடங்கள் மூலம் மாணவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

யுத்தத்தால் வெற்றிக்கொள்ள முடியாததை புதுக்கடைக்குச் சென்று வெற்றிக்கொள்ள முயற்சி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Saturday, December 01, 2012
இலங்கை::சட்டத்தரணி என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாம் நீதிமன்றத்திற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நீதிமன்றமும் தனது கொளரவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற துறைமுகங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை குறிப்பிட்டார்.

வேறு சிலர் பாராளுமன்றத்தில் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பதிலாக வேறொரு நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே உரையாற்றுவதாக  இதன்போது ஜனாதிபதி சுட்டிக்ககாட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த போதிலும் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் இன்னும்  முடிவடையவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்குபவர்களால் அரசியலில்  ஈடுபட முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டை பொறுப்பேற்க வேண்டுமாயின் பிரச்சினைகளை  எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கவேணடும் என இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

30  வருடகால யுத்தத்தினால் வெற்றிக்கொள்ள முடியாமல்போனதை புதுக்கடைக்குச் சென்று வெற்றிக்கொள்வதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஒரு சிலரின் தவறுகள் பகிரங்கப்படுத்தப்படும் போது எதிர்க்கட்சி சென்று அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மக்கள் எந்த சந்தர்பத்திலும் பொய்கூற முடியாது எனவும் நாட்டை உண்மையில் நேசிப்பவர்கள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"மாஜி' பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார்:டில்லி அருகே இன்று உடல் தகனம்!

Saturday, December 01, 2012
புதுடில்லி::உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதமர், இந்தர் குமார் குஜ்ரால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருக்கு வயது, 92. அவரது உடல், இன்று, முழு அரசு மரியாதையுடன், தகனம் செய்யப்படுகிறது.நாட்டின், 12வது பிரதமராக, 12 மாதங்கள் பதவி வகித்த, இந்தர் குமார் குஜ்ரால், கடந்த சில ஆண்டுகளாக, சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். ஓராண்டாக, "டயாலிசிஸ்" சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த, 19ம் தேதி, டில்லி அருகே குர்கானில் உள்ள, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், வயோதிகம் காரணமாக, அவரின் உடல் உறுப்புகள், ஒவ்வொன்றாக செயல் இழந்தன. "வென்டிலேட்டர்' உதவியுடன் சுவாசித்து வந்த அவருக்கு, நுரையீரலில் அதிக சளி சேர்ந்ததால், ஆபத்தான நிலையை அடைந்தார். நேற்று மதியம், 3:31 மணிக்கு, மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது.லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, குஜ்ரால் மறைவை அறிவித்தார்.

இதையடுத்து, இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி சார்பில், ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர், வேணு ராஜாமணி, இரங்கல் தெரிவித்தார்.குஜ்ரால் உடல் நேற்று, டில்லியில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. குஜ்ரால் மறைவை அறிந்த தலைவர்கள், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இன்று, டில்லி புறநகரில், அவர் உடல் தகனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த ஓவியரான குஜ்ராலுக்கு, நரேஷ் மற்றும் விஷால் குஜ்ரால் என, இரண்டு மகன்கள் உள்ளனர். நரேஷ், ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவின் பிரதமர் ஆனவர்

பாகிஸ்தானின், ஜீலம் நகரில், 1919, டிசம்பர், 4ம் தேதி பிறந்த குஜ்ரால், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். சுதந்திரத்திற்குப் பின், இந்தியா வந்த குஜ்ரால், தன் தீர்க்கமான செயல்பாடுகளால், படிப்படியாக உயர்ந்து, நாட்டின் பிரதமர் என்ற உயரிய இடத்தை பிடித்தார்.டில்லி, முனிசிபல் கமிட்டியின் துணை தலைவராக, 1958ல், பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த அவர், ஆறு ஆண்டுகள் கழித்து, காங்கிரசில் சேர்ந்தார். 1964ல், இவரை, இந்திரா, ராஜ்யசபா எம்.பி.,யாக்கினார்.கடந்த, 1966ல், இந்திரா பிரதமராக பதவியேற்க, அவருக்கு துணை நின்றவர்களில், குஜ்ராலும் ஒருவர். இதனால், இந்திராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததால், அப்போதைய சோவியத் ரஷ்யாவிற்கான, இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். அவரின் சிறப்பான செயல்பாட்டால், இந்திராவுக்குப் பிறகு, பிரதமராக வந்த, சரண் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோரும், குஜ்ராலை, ரஷ்ய தூதராக தொடர்ந்து நீடிக்க அனுமதித்தனர்.

இந்திராவுக்கு நெருக்கமானவராக இருந்ததால், மத்திய அரசிலும், அமைச்சரவையிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். தொலை தொடர்பு துறை, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக, அவர் பதவி வகித்துள்ளார்.

காங்கிரசிலிருந்து, 1980ம் ஆண்டுகளில் வெளியேறிய குஜ்ரால், ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 1989ம் ஆண்டு, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தேசிய முன்னணி அரசில், வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய முன்னணி அரசில், தேவ கவுடா பிரதமராக இருந்த போது, 1997ல், இரண்டாவது முறையாக, வெளியுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதமர், தேவ கவுடா அரசுக்கு, அப்போதைய காங்கிரஸ் தலைவர், சீதாராம் கேசரி, ஆதரவை விலக்கிக் கொண்டதால், கவுடா பதவி இழந்தார்.பிரதமர் பதவிக்கு, வேறு தகுதியான நபர் இல்லாததாலும், அதிர்ஷ்டம் காரணமாகவும், 1997, ஏப்ரலில், குஜ்ரால் பிரதமரானார்.

அந்த பொறுப்பில், 1998, மார்ச் வரை தொடர்ந்தார்.ராஜிவ் கொலையில், தி.மு.க.,விற்கு தொடர்பு இருப்பதாக, ஜெயின் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல் கசிந்ததை அடுத்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, தி.மு.க., அமைச்சர்களை நீக்க வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்தியது. அதை, குஜ்ரால் ஏற்றுக் கொள்ளாததால், காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது.இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து, குஜ்ரால் ராஜினாமா செய்தார். தேர்தலுக்கு பிறகு, அடல் பிகாரி வாஜ்பாய், அடுத்த பிரதமரானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இடம் பெறும் பிரதேசத்திற்குள் ஐ.தே.க. எம்.பிக்களின் மெய்ப் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது!

Saturday, December 01, 2012
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இடம் பெறும் பிரதேசத்திற்குள் ஐ.தே.க. எம்.பிக்களின் மெய்ப் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் வேண்டுகோளுக் கிணங்கவே இத் தடை அமைச்சர்க ளின் பாதுகாப்பு பிரிவு பிரதானியால் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   மாநாட்டு பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அவர்கள் துப்பாக்கியுடன் நடமாட முடியும். மாநாடு நடைபெறும் பகுதியில் மட்டும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என பிரதி சபாநாயகர் தெரிவித்தார். நேற்றுக் காலை சபை அமர்வின் போது தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட சில ஐ. தே. க. எம். பிக்கள் தமது மெய்ப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நாளை (இன்று) துப்பாக்கிகளுடன் நடமாடுவது தடுக்கப்பட்டுள்ளது. இது எமது சிறப்புரிமையை மீறும் செயலாகும். இது விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் - சபாநாயகரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருவதாகத் தெரி வித்தார்.
இது தொடர்பில் நேற்றுப் பிற்பகல் பதில் வழங்கிய பிரதி சபாநாயகர், ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரின் வேண்டுகோளு க்கிணங்கவே மேற்படி தடை விதிக்கப்பட்டு ள்ளதாக சபையில் தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர, சஜித் பிரேமதாச, ரோசி சேனாநாயக்க, புத்திக பத்திரன, ஹரின் பெர்னாண்டோ உட்பட 33 ஐ. தே. க. எம். பிக்களின் பாதுகாப்பு உத்தியோக த்தர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிரு ந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பான பிழையான கருத்துக்களை பரப்பும் முயற்சியில் புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்கள்

Saturday, December 01, 2012
இலங்கை::புலம்பெயர் புலி ஆதரவு  தமிழ்மக்கள் இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களை தடுக்க முயற்சிப்பதாகவும், இலங்கை சுற்றுலா பிரயாணத்திற்கு உகந்த நாடு அல்ல என பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாகவும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தவித சேவையையும் முன்னெடுப்பதில்லை என தெரிவித்து, இலங்கை தொடர்பான பிழையான வரைபடத்தை வெளிநாட்டவர்களின் மனதில் விதைக்கும் நோக்குடன் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கென, வடக்கின் வசந்தம் மற்றும் திவிநெகும திட்டங்களுக்கு மேலதிகமாக 2013ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் 8,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மிதிவெடியகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் அதேவேளை, மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் அரசாங்கம் பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதைத்தவிர முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

புகலிடம் கோரிய மேலும்மோர் குழுவினர் பப்புவா நியூக்கினி தீவுக்கு அனுப்பிவைப்பு!

Saturday, December 01, 2012
இலங்கை மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த புகலிடம் கோரி அவுஸ்ரேலியா சென்ற 28 பேரைக் கொண்ட குழுவினரை அவுஸ்ரேலியா அரசாங்கம் பப்புவா நியூக்கினி தீவுக்கு அனுப்பியுள்ளது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கையின் படி இரண்டாவது முறையாக புகலிடம் கோரும் குழுவினர் பப்புவா நியூக்கினி தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பப்புவா நியூக்கினி லொம்பரம் கடற்படைத்தளத்தில் ஏற்கனவே 19 புகலிடம்கோருவோர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீவுகளில் அகதிகள் தங்கவைக்கப்படுவதனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் இச் செற்பாட்டை சர்வதேச பொதுமன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.
இதனை மறுத்து அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன், மனித உரிமை கண்கானிப்பாளர்கள் புகலிடம் கோருவோர் கொள்கை தொடர்பாக முன்கூட்டியே ஆராய்ந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.