Saturday, December 1, 2012

"மாஜி' பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார்:டில்லி அருகே இன்று உடல் தகனம்!

Saturday, December 01, 2012
புதுடில்லி::உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதமர், இந்தர் குமார் குஜ்ரால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருக்கு வயது, 92. அவரது உடல், இன்று, முழு அரசு மரியாதையுடன், தகனம் செய்யப்படுகிறது.நாட்டின், 12வது பிரதமராக, 12 மாதங்கள் பதவி வகித்த, இந்தர் குமார் குஜ்ரால், கடந்த சில ஆண்டுகளாக, சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். ஓராண்டாக, "டயாலிசிஸ்" சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த, 19ம் தேதி, டில்லி அருகே குர்கானில் உள்ள, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், வயோதிகம் காரணமாக, அவரின் உடல் உறுப்புகள், ஒவ்வொன்றாக செயல் இழந்தன. "வென்டிலேட்டர்' உதவியுடன் சுவாசித்து வந்த அவருக்கு, நுரையீரலில் அதிக சளி சேர்ந்ததால், ஆபத்தான நிலையை அடைந்தார். நேற்று மதியம், 3:31 மணிக்கு, மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது.லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, குஜ்ரால் மறைவை அறிவித்தார்.

இதையடுத்து, இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி சார்பில், ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர், வேணு ராஜாமணி, இரங்கல் தெரிவித்தார்.குஜ்ரால் உடல் நேற்று, டில்லியில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. குஜ்ரால் மறைவை அறிந்த தலைவர்கள், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இன்று, டில்லி புறநகரில், அவர் உடல் தகனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த ஓவியரான குஜ்ராலுக்கு, நரேஷ் மற்றும் விஷால் குஜ்ரால் என, இரண்டு மகன்கள் உள்ளனர். நரேஷ், ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவின் பிரதமர் ஆனவர்

பாகிஸ்தானின், ஜீலம் நகரில், 1919, டிசம்பர், 4ம் தேதி பிறந்த குஜ்ரால், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். சுதந்திரத்திற்குப் பின், இந்தியா வந்த குஜ்ரால், தன் தீர்க்கமான செயல்பாடுகளால், படிப்படியாக உயர்ந்து, நாட்டின் பிரதமர் என்ற உயரிய இடத்தை பிடித்தார்.டில்லி, முனிசிபல் கமிட்டியின் துணை தலைவராக, 1958ல், பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த அவர், ஆறு ஆண்டுகள் கழித்து, காங்கிரசில் சேர்ந்தார். 1964ல், இவரை, இந்திரா, ராஜ்யசபா எம்.பி.,யாக்கினார்.கடந்த, 1966ல், இந்திரா பிரதமராக பதவியேற்க, அவருக்கு துணை நின்றவர்களில், குஜ்ராலும் ஒருவர். இதனால், இந்திராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததால், அப்போதைய சோவியத் ரஷ்யாவிற்கான, இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். அவரின் சிறப்பான செயல்பாட்டால், இந்திராவுக்குப் பிறகு, பிரதமராக வந்த, சரண் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோரும், குஜ்ராலை, ரஷ்ய தூதராக தொடர்ந்து நீடிக்க அனுமதித்தனர்.

இந்திராவுக்கு நெருக்கமானவராக இருந்ததால், மத்திய அரசிலும், அமைச்சரவையிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். தொலை தொடர்பு துறை, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக, அவர் பதவி வகித்துள்ளார்.

காங்கிரசிலிருந்து, 1980ம் ஆண்டுகளில் வெளியேறிய குஜ்ரால், ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 1989ம் ஆண்டு, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தேசிய முன்னணி அரசில், வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய முன்னணி அரசில், தேவ கவுடா பிரதமராக இருந்த போது, 1997ல், இரண்டாவது முறையாக, வெளியுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதமர், தேவ கவுடா அரசுக்கு, அப்போதைய காங்கிரஸ் தலைவர், சீதாராம் கேசரி, ஆதரவை விலக்கிக் கொண்டதால், கவுடா பதவி இழந்தார்.பிரதமர் பதவிக்கு, வேறு தகுதியான நபர் இல்லாததாலும், அதிர்ஷ்டம் காரணமாகவும், 1997, ஏப்ரலில், குஜ்ரால் பிரதமரானார்.

அந்த பொறுப்பில், 1998, மார்ச் வரை தொடர்ந்தார்.ராஜிவ் கொலையில், தி.மு.க.,விற்கு தொடர்பு இருப்பதாக, ஜெயின் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல் கசிந்ததை அடுத்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, தி.மு.க., அமைச்சர்களை நீக்க வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்தியது. அதை, குஜ்ரால் ஏற்றுக் கொள்ளாததால், காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது.இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து, குஜ்ரால் ராஜினாமா செய்தார். தேர்தலுக்கு பிறகு, அடல் பிகாரி வாஜ்பாய், அடுத்த பிரதமரானார்

No comments:

Post a Comment