Tuesday, April 29, 2014

இராணுவ டிரக் விபத்தில் 7 சிப்பாய்கள் காயம்!

Tuesday, April 29, 2014
இலங்கை::தம்புள்ளை, புலகல பகுதியில் இன்று அதிகாலை இராணுவ டிரக் ஒன்று பாதையை விட்டு விலகிச் சென்று கித்துள் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தபட்சம் 07 படைச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மரத்துடன் டிரக் மோதியபோது, மரம் முறிந்து டிரக்கின் மீது விழுந்ததாகவும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த டிரக்கே இவ்வாறு விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் காயமடைந்த சிப்பாய்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்!

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், யாழ்ப்பாணத்திலிருந்து, கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்சொன்றுடன், லொறியொன்று இன்று அதிகாலை 3 மணியளவில் மோதியுள்ளது.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனமையால், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி, முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பஸ் பயணிகள் மூவரும், நடத்துனரும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

பிஷ்வாலுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Tuesday, April 29, 2014
US::தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வாலுக்கும், புலம்பெயர் புலிகளுக்கும் இடையில் விசேட விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
 
இன்றைய தினம் அமெரிக்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகைள மீளவும் தூண்டும் முனைப்புக்களில் புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புக்களையும் தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம், நல்லிணக்கம் போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, பிஷ்வால், அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுடனும் பிரிதொரு சந்திப்பினை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வியாபாரியிடம் 26 சவரன் நகை மோசடி!!

Tuesday, April 29, 2014
மதுரை::மதுரையில், இலங்கையை சேர்ந்த வியாபாரியிடம், 26 சவரன் நகை மோசடி செய்த மூவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை, கொழும்புவைச் சேர்ந்தவர் மேசரத்தினம், 44. இவர், மதுரையில் பொருட்களை வாங்கி, இலங்கையில் விற்று வந்தார். நேற்று முன்தினம், மதுரையில், ஏற்கனவே அறிமுகமான, 36 - 40 வயதுடைய மூன்று பேரிடம், 26 சவரன் நகைகளை விற்றுத் தரும்படி கூறியுள்ளார்.
நகைக்கடை பஜாருக்கு அழைத்து சென்று, நகையை வாங்கி, அங்கே காத்திருக்கும்படி கூறி சென்றவர்கள், நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதுகுறித்து, மேசரத்தினம் கொடுத்த புகாரின்படி, மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகோ ஜெயித்தால் பதவி விலகுவேன்!' : தி.மு.க., "மாஜி' மந்திரி பரபரப்பு சவால்!

Tuesday, April 29, 2014
சென்னை::இந்த தேர்தலில் போட்டியிட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களில் யாரெல்லாம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தனித்தனி, "ஹிட் லிஸ்ட்' வைத்துள்ளன. இதில், ஆளும் கட்சியின் பட்டியலில் தான், அதிகம் பேர் இடம் பெற்றுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலுவான பொறுப்பாளர்கள் : ம.தி.மு.க., தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., இளைஞரணி நிர்வாகி சுதீஷ், தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, தயாநிதி, ராஜா ஆகியோர், அ.தி.மு.க.,வின், "ஹிட் லிஸ்ட்'டில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இவர்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு, ஆளும் கட்சியின் சார்பில், வலுவான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், தேர்தல் பணியும் தீவிரமாக பார்க்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கட்டப்பட்டு இருந்த, செங்கோட்டையன், இதில் வெற்றி பெற்று விட்டால், அவரது அரசியல் எதிர்காலம் மீண்டும் பிரகாசம் அடையும் என, ஆளும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இப்படி இந்த பட்டியலில் உள்ளவர்களின் தொகுதிகளில், ஆளும் கட்சியால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி வெற்றி பெற்றால், அந்த தொகுதிகளின் பொறுப்பாளர்கள், நடவடிக்கைக்கு ஆளாகலாம் என, கூறப்படுகிறது.

இதில், தர்மபுரி தொகுதியை பொறுத்த வரையில், அங்கு போட்டியிடும் அன்புமணி மட்டுமல்ல; தி.மு.க., வேட்பாளராக களம் இறங்கியுள்ள தாமரைச்செல்வனும் வீழ்த்தப்பட வேண்டும் என்பது, அ.தி.மு.க.,வின் இலக்கு. அவர், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க., சார்பில் ஆஜராகி வருபவர் என்பதால், அவரது பெயரும், "ஹிட் லிஸ்ட்'டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், தி.மு.க.,விலும், சிலரை, தேர்தல் களத்தில் கட்டம் கட்டியுள்ளனர். வைகோ, தம்பிதுரை, அன்புமணி, சுதீஷ் போன்றவர்கள் தோல்வி அடைய வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது. அவர்களில் முக்கியமானவர், வைகோ. எந்த விதத்திலும் அவர் ஜெயித்து விடக்கூடாது என, விருதுநகர் மாவட்ட தி.மு.க., செயலரான, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டதாக தெரிகிறது. சந்தேகம் எழுந்தது

இதுகுறித்து, அறிவாலய வட்டாரம் கூறியதாவது: விருதுநகர் தொகுதியில், வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், ரத்தினவேலு நிறுத்தப்பட்டார். அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து, கட்சியில் விமர்சனங்கள் எழுந்தன. கட்சிக்கு அப்பாற்பட்டவர் என, அழகிரியும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அவரால் வைகோவை தோற்கடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி பேசுவதற்காக, அந்த மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனை, கருணாநிதி அழைத்திருந்தார். தொகுதி நிலவரம் குறித்து, சாத்தூர் ராமச்சந்திரனிடம், கருணாநிதி விசாரித்தார். அப்போது, "விருதுநகரில் வைகோவை தோற்கடிப்போம்; தி.மு.க., வேட்பாளரை ஜெயிக்க வைப்போம். அதில், எந்த சந்தேகமும் வேண்டாம்; ஒருவேளை அவர் ஜெயித்து விட்டால், நான் மாவட்ட செயலர் பதவியில் நீடிக்க மாட்டேன்; உடனடியாக விலகி விடுவேன்' என, சாத்தூர் ராமச்சந்திரன் சூளுரைத்து உள்ளார். இவ்வாறு, அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்திகளுக்கு 51,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

Tuesday, April 29, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்திகளுக்கு 51,000 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதிக்குரிய ஆவணம் கையளிக்கும் நிகழ்வு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியல்; கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-

'கடந்த 02 வருடங்களினுள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நகரங்களை ஒன்றிணைக்கும் 03 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளன. இதிலொரு பாலமான மண்முனைப்பாலம்; அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது. படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலமாக இம்மண்முனைப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான  அபிவிருத்தி வேலைகளுக்காக 618 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு யு.என்.ஹெபிடட் நிறுவனத்தினால் 1,000; வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் அரசாங்கத்தினால் 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்; அணைக்கட்டுக்கள், நீர்ப்பாசனத்திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற தெயட்ட கிருள (தேசத்திற்கு மகுடம்) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 1,300 மில்லியன் ரூபா நிதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டலில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விடவும் அபிவிருத்திகளைக் கண்டுவருதுடன், இதை மட்டக்களப்புக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பில் சமூகச் சீரழிவுகளும் இடம்பெறுகின்றன.

மது பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு, பாடசாலை செல்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டாமை, சிறுவயது திருமணம், இளவயது கர்ப்பம் இவ்வாறான சமூகச் சீரழிவுகளும் இடம்பெறுகின்றன.

இவைகளை எதிர்காலத்தில் இல்லாமல் செய்து பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
வளமான ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்' என்றார்.

தேர்தல் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை!!

Tuesday, April 29, 2014
இலங்கை::தேர்தல் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1994ம் ஆண்டு குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு  (28) விசாரணைக்கு வந்த போது சந்தேகநபர்கள் மீதான குற்றம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

1994ம் ஆண்டு தேர்தல் காலத்தில் நில்தண்டாஹின்ன பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அதில் இரண்டு சந்தேகநபர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதால் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்தார்.