Tuesday, November 27, 2012

யுத்தத்தின் பின்னர் இலங்கையானது துரித வளர்ச்சி கண்டுள்ளது – பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் - ரொபி புலோச்!

Tuesday, November 27, 2012
இலங்கை::இலங்கை அரசானது யுத்தத்தின் பின்னரான இக் குறுகிய காலகட்டத்துக்குள் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் புனர்நிர்மானம், மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதைகளை வகுத்தல் என பலதரப்பட்ட வழிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபி புலோச் வடக்கு கிழக்குக்கான தனது முதல் விஜயத்தின் பின்னர் தெரிவித்தார்.

அவரது இவ் விஜயம் தொடர்பாக தொடர்ந்து குறிப்பிடுகையில், தாம்  புலிகளின் கொடூரம் பற்றியும் அவர்களது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பயங்கர படுகொலைகள் பற்றியும் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். இலங்கை அரசானது பல சவால்களுக்கு மத்தியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை புனர்வாழ்வளித்து யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்நது அவர்களை உளவியல் ரீதியாக மீட்க எடுக்கப்பட்ட முயற்சியையும் பாராட்டினார்.

அத்துடன் இலங்கையில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டும் முகமாக பிர்த்தானியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(புலி)வைகோ) ம.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், நாஞ்சில் சம்பத் தி.மு.க.,வில் இணைப்பு!!

Tuesday, November 27, 2012
சென்னை::ம.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், நாஞ்சில் சம்பத், கால் தவறி கீழே விழுந்தார்; அவரது காலில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. "சிகிச்சை முடிந்ததும், தி.மு.க.,வில் இணைகிறார்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ம.தி.மு.க., பொதுச் செயலர் (புலி)வைகோ, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்துக்கு இடையே, திடீரென கருத்து வேறுபாடு உருவானது. கட்சியிலிருந்து, நாஞ்சில் சம்பத் ஓரங்கட்டப்பட்டார். சமீபகாலமாக வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை; இருவரும் சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம், வைகோ அதைத் தவிர்த்தார். "ம.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு, நாஞ்சில் சம்பத்தை அழைக்க வேண்டாம்' என, அக்கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அப்துல்லா என்ற பெரியார் தாசனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாஞ்சில் சம்பத், தன் சொந்த ஊரில் நடந்து செல்லும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார்; அதில் அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் தங்கிய வண்ணம், காலுக்கு சிகிச்சை எடுக்கிறார். கால் எலும்பு முறிவு குணமானதும், தி.மு.க., வில் சேர முடிவெடுத்துள்ளார்.

அவருடன் திருநெல்வேலி மாவட்ட ம.தி.மு.க., நிர்வாகியாக பணியாற்றி, பின் அக்கட்சியலிருந்து வெளியேறி, ஆளுங்கட்சியில் இணைந்த பிரமுகர் ஒருவரும், தென் மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவரும், தி.மு.க.,வில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க., பிரமுகர்களை இழுக்கும் பணியில், ம.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,வுக்குத் தாவிய, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.

தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க., அவைத்தலைவர் மலையாளன், மாவட்ட பிரதிநிதி ஜீவா ஆகிய இருவரும், தி.மு.க., வில் சேருவதற்கு முடிவு செய்து, நேற்று அறிவாலயத்திற்கு பூங்கொத்துகளுடன் வந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், சேருவதற்கு அவர்கள் தயாராக இருந்தனர்.

அப்போது, "அவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் இணையட்டும்' என, கருணாநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றத்துடன் அவர்கள், புறப்பட்டுச் சென்றனர். நாஞ்சில் சம்பத் இணையும் போது, அவர்கள், கருணாநிதி முன் இணைவரா அல்லது ஸ்டாலின் முன்னிலையில் தனியாக இணைவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை கடத்த முயற்சி ஒருவர் கைது!

Tuesday, November 27, 2012
இலங்கை::வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில்   நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றில் வந்த சந்தேகநபர்கள் இருவர், வீட்டிலிருந்த பெண்ணொருவரை பலவந்தமாக கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் குறித்த பெண்ணும் அவரது தாயாரும் கூச்சலிட்டதில் அங்கு கூடிய பிரதேசவாசிகள் சந்தேகநபர்களை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது ஒருவர் மாத்திரம் அகப்பட்டுக்கொண்ட நிலையில் ஏனைய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, November 26, 2012

கடலூர் மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த காதல் ஜோடி போலீசில் தஞ்சம்!

Monday, November 26, 2012
காட்டுமன்னார்கோவில்::கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் 74 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். முகாமை சேர்ந்த சுகில்ராஜ் மகன் சரண்ராஜ் (எ) சுமன் (23) முகாமில் வசிக்கும் சுஜாதா (21) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் சுஜாதாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், சுஜாதாவை சிவகங்கை பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த சுஜாதா ஒரு வாரத்துக்கு முன்பு தப்பிவந்தார்.

தகவல் அறிந்த காதலன் சுமன், காதலியை அழைத்துக்கொண்டு வெளிமாநிலத்துக்கு சென்று விட்டார். சிவகங்கையில் இருந்து சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் முகாம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 குடும்பத்தாரின் பெற்றோர்களை மீறி திருமணம் செய்து கொண்டதால் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி இன்று காட்டுமன்னார்கோவில் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை இறுதிப் போரின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வைக்கோவும் நெடுமாறனும் தவறான நம்பிக்கையை கொடுத்தனர்- புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பளர் கேபி!

Monday, November 26, 2012
இலங்கை::இலங்கை இறுதிப் போரின் போது  புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தவ்றான நம்பிக்கையைக் கொடுத்தனர் என்று புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பளர் கேபி குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ- நெடுமாறன்

டெய்லி மிர்ரரில் வெளியான மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜூக்கு கேபி அளித்த பேட்டியில், பிரபாகரனைப் பொறுத்தவரை சமரசத்துக்கு இடமில்லாமல் போராட வேண்டும் என்ற மனநிலை உடையவர். அவர் எப்போதும் சமரசத்துக்கோ சரணடையவோ விரும்பாத்வர். மேற்குல நாடுகளை சந்தேகக் கண்ணோடு பார்த்தவர். இறுதிப் போரின் போது மேற்குலக நாடுகள் கொடுத்த உறுதி மொழிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என நினைக்கிறேன்... தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் ஆகியோர் தவறான நம்பிக்கையை கொடுத்திருக்கின்றனர்.. அதாவது இந்தியாவின் மத்தியில் பாஜக வெற்று பெற்று ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.. தேர்தலுக்கு பிறகு நிலைமைகள் மாறலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று கேபி தெரிவித்திருக்கிறார்.
பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றும் பிளான்

மேலும், பிரபாகரனின் மகன் சார்ளஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார். அவர் தமது குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டார். பிரபாகரன் குடும்பத்தை சிறிய ரக விமானம் மூலம் கள முனையிலிருந்து காப்பாற்றி அழைத்து செல்லத் திட்டமிட்டேன். இதற்கான செலவுத் தொகை 3.5 மில்லியன் டாலர். என்னிடம் அவளவு பணம் இல்லை.. இது தொடர்பாக புலிகளின் வெளிநாட்டு நிதி விவகாரங்களை கவனித்து வந்த நெடியவனிடம் பல முறை உதவி கேட்டேன். ஆனால் நெடியவனோ பணம் கொடுக்கவில்லை என்றும் அதில் கேபி கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கை மீள இணைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது – விமல் வீரவன்ச!

Monday, November 26, 2012
இலங்கை::வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஈழக் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கும் தரப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரையில் இவ்வாறான சவால்களை முறியடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திவிநெகும சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பானது பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை முறைமையினால் பாராளுமன்றின் நடவடிக்கைகளுக்கு பெரிதும் தடைகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.