Tuesday, November 27, 2012

(புலி)வைகோ) ம.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், நாஞ்சில் சம்பத் தி.மு.க.,வில் இணைப்பு!!

Tuesday, November 27, 2012
சென்னை::ம.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், நாஞ்சில் சம்பத், கால் தவறி கீழே விழுந்தார்; அவரது காலில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. "சிகிச்சை முடிந்ததும், தி.மு.க.,வில் இணைகிறார்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ம.தி.மு.க., பொதுச் செயலர் (புலி)வைகோ, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்துக்கு இடையே, திடீரென கருத்து வேறுபாடு உருவானது. கட்சியிலிருந்து, நாஞ்சில் சம்பத் ஓரங்கட்டப்பட்டார். சமீபகாலமாக வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை; இருவரும் சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம், வைகோ அதைத் தவிர்த்தார். "ம.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு, நாஞ்சில் சம்பத்தை அழைக்க வேண்டாம்' என, அக்கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அப்துல்லா என்ற பெரியார் தாசனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாஞ்சில் சம்பத், தன் சொந்த ஊரில் நடந்து செல்லும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார்; அதில் அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் தங்கிய வண்ணம், காலுக்கு சிகிச்சை எடுக்கிறார். கால் எலும்பு முறிவு குணமானதும், தி.மு.க., வில் சேர முடிவெடுத்துள்ளார்.

அவருடன் திருநெல்வேலி மாவட்ட ம.தி.மு.க., நிர்வாகியாக பணியாற்றி, பின் அக்கட்சியலிருந்து வெளியேறி, ஆளுங்கட்சியில் இணைந்த பிரமுகர் ஒருவரும், தென் மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவரும், தி.மு.க.,வில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க., பிரமுகர்களை இழுக்கும் பணியில், ம.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,வுக்குத் தாவிய, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.

தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க., அவைத்தலைவர் மலையாளன், மாவட்ட பிரதிநிதி ஜீவா ஆகிய இருவரும், தி.மு.க., வில் சேருவதற்கு முடிவு செய்து, நேற்று அறிவாலயத்திற்கு பூங்கொத்துகளுடன் வந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், சேருவதற்கு அவர்கள் தயாராக இருந்தனர்.

அப்போது, "அவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் இணையட்டும்' என, கருணாநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றத்துடன் அவர்கள், புறப்பட்டுச் சென்றனர். நாஞ்சில் சம்பத் இணையும் போது, அவர்கள், கருணாநிதி முன் இணைவரா அல்லது ஸ்டாலின் முன்னிலையில் தனியாக இணைவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment