Saturday, June 1, 2019

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய உளவுத்துறை தகவல்கள் குறித்த இரகசியம் பேணப்பட வேண்டும்: மஹிந்த ராஜபக்ச!

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய உளவுத்துறை தகவல்கள் குறித்த இரகசியம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இலங்கை  எதிர்கட்சித் தலைவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத்திற்குள் அரச உளவாளிகள் ஊடுறுவியிருந்ததாகவும் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை கண்டித்து ஆற்றிய உரையொன்றின் போதே பரஸ்பர முரண்பாடான கருத்துக்களை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அவரது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பிரதேசத்தின் - மெதமுலன கிராமத்திலுள்ள கால்டன் இல்லத்தில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போது ஐ.எஸ் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது தொடர்பில் தனது கடும் ஆத்திரத்தை மஹிந்த வெளியிட்டுள்ளார்.நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இரகசியம் பேணப்பட வேண்டிய தகவல்களை பகிரங்கமாக கதைப்பது முறையமல்ல என்றும் அதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு குறித்த அமைப்புக்குள் உள்நுழைய வேண்டும். இது எந்தவொரு அரசாங்கமும் பொலிஸாரும் முன்னெடுக்கும் விடயம். இந்த அமைப்பு உருவாகும்போதே எமது புலனாய்வு பிரிவினரால் குழுவொன்று உள்ளே அனுப்பப்பட்டிருந்தது. இரகசிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக உளவாளிகளுக்கு பணம் செலுத்த நேரிடும். பணம் வழங்காமல் புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயத்தை பிடித்துக்கொண்டு உளவாளிகளின் தகவல்களை கோருகின்றனர். தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
 
சேறு பூசுவதற்காக உளவாளிகளின் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுகின்றனர். இது முழுமையாக தவறான விடயமாகும். புலனாய்வு சேவை அல்லது வேறு ரகசியத்தன்மை பேணப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் முழு நாட்டுடனும் கதைக்க வேண்டிய தேவை இல்லை. பொறுப்புடன் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். சேறு பூசுவதற்காகவும் யாரையாவது இலக்கு வைத்து அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு செல்வதால் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும். இந்த விடயமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒட்டுமொத்த நாடு அவதானம் செலுத்த வேண்டும்
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பின் 99 வீதமான கட்டமைப்பை அழித்துவிட்டதாக  ஜனாதிபதியும் – பிரதமரும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.எனினும் எஞ்சியுள்ள 1 சதவீதத்தினரால் நாட்டிற்குபிரச்சினைகள் ஏற்படலாம் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கின்றார்.
குண்டு வெடிப்பதற்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட நிலை மற்றும் குண்டு வெடிப்பின் பின்னர் காணப்படும் நிலையானது சோகத்துக்குரியது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துக்கு தகவல் முன்னதாக கிடைத்துள்ளது. 4 ஆம் திகதியே இந்த தகவல் கிடைத்துள்ளதாக எமக்கு அறியமுடிந்துள்ளது. 9 ஆம் திகதியே கிடைத்தாக சாட்சியமளிப்பின்போது தெரிவிக்கின்றனர்.
 
அவ்வாறு 9 ஆம் திகதி கிடைத்திருந்தாலும் 12 நாட்கள் அது குறித்து கலந்துரரையாடப்படாமல் இருந்தமை சாட்சியங்களில் உறுதியாகியுள்ளது. அமைப்புக்கு பணம் வழங்கினார்களா? அந்த அமைப்பில் உள்ள சிலருக்கு பணம் வழங்கினார்களா என்று பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதற்கு அந்த அதிகாரி ஆம் இவ்வாறான விடயம் நடக்கின்றது என்று கூறுகின்றார். எனினும் இவ்வாறான விடயங்களை பகிரங்கமாக கதைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. தனிப்பட்ட முறையில் கதைப்பது சிறந்தது. இவர்கள் என்ன செய்ய பார்க்கின்றனர்.
 
மிலேனியம் சிட்டி பிரச்சினை எழுந்த நேரத்தில் உளவாளிகளின் பெயர்களை வெளிப்படுத்திய பின்னர்  புலிகள் ஒவ்வொருவராக கொலை செய்தனர். அந்த அமைப்பு எமது படையினர் பலரை கொலை செய்தனர். சிலர் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள இலங்கைலிருந்து வெளியேறினர். தற்போது மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நாங்கள் அனைத்தும் சரியாகிவிட்டது என்றும் 99 சதவீதம் சரியாகிவிட்டது என்றும் கூறுகின்றோம். எனினும் 1 சதவீதத்தினர் இன்னும் எஞ்சியுள்ளனர். எமக்கும் அந்த ஒரு சதவீதத்தினர் தொடர்பில்தான் பிரச்சினை உள்ளது”.

No comments:

Post a Comment