Sunday, June 2, 2019

தன்னிச்சையாக செயல்பட விட மாட்டோம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: பாஜவுக்கு ராகுல் ஆவேச சவால்!

நாடாளுமன்றத்தில் 52 எம்பி.க்களை மட்டுமே பெற்றுள்ள நிலையிலும், பாஜ.வுடன் கொள்கை ரீதியிலான காங்கிரசின் போராட்டம் தொடரும். மத்திய அரசு எதிர்ப்பின்றி தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க மாட்டோம்,’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜ 303 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால், கடந்த முறையை போன்று இந்த முறையும் அது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்பி.க்கள் கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், அக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் 44 எம்பி.க்களை பெற்று பாஜ.வை எதிர் கொண்டோம். தற்போது, 52 எம்பி.க்கள் உள்ளனர். இதனால், பாஜ.வுடன் கொள்கை ரீதியிலான நமது போராட்டம் தொடரும். நாட்டின் அரசியலமைப்பையும், தன்னாட்சி பெற்ற அரசு அமைப்புகளையும் பாதுகாக்க, நமது எம்பி.க்கள் தைரியமான சிங்கங்களை போன்று பயமின்றி ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டும். பாஜ.வினர் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி செயல்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இதையே கூறிக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இல்லை என்றால் தங்களை எதிர்த்து குரல் கொடுக்க யாருமில்லை என்றாகி விடும் என்பதால்தான், காங்கிரஸ் வேண்டும் என பாஜ கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் உங்களை எதிர்த்து வெறுப்புணர்வையும், கோபத்தையும் தூண்டுபவர்கள் நிற்கிறார்கள். எனவே, கூடுதல் பலத்துடன் நீங்கள் போராட வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும், அவனது மாநிலம், நிறம், மதம், சாதி என அனைத்தையும் கடந்து நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை உணர வேண்டும். தேர்தலில் நீங்கள் கடுமையாக போராடி இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் எதனை எதிர்த்து வெற்றி பெற்றீர்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ளுங்கள். இத்தேர்தலில் நீங்கள் அரசியல் கட்சிகளை மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெறவில்லை. மாறாக நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசு அமைப்புகளையும் எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

நாட்டின் எந்த அரசு அமைப்பும்  உங்களுக்கு ஆதரவளிக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எப்படி எவ்வித  ஆதரவுமின்றி காங்கிரஸ் தனித்து நின்று போராடியதோ அதே போன்று போராட வேண்டும். அன்று வெற்றி பெற்றது போன்று மீண்டும் நாம் வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத்தில், நமது கருத்தை எடுத்துரைக்க சபாநாயகர் முன்பு 5 நிமிடங்கள் அவகாசம் அளித்தார். தற்போது அது 2 நிமிடங்களாக குறையலாம். ஆனால், கிடைக்கும் அந்த 2 நிமிடத்தில், அரசியலமைப்பை பாதுகாக்க செயல்பட வேண்டும்.

நமது கொள்கைகளுக்காக போராடிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள் தலைவர் கூறியது போன்று எங்கு தவறு நடந்தது என்று நம்மை நாமே ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ள வேண்டிய தருணம் இது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்திக்கு வாழ்த்துக்கள். அவரது தலைமையின் கீழ் அரசியலமைப்பை பாதுகாக்க காங்கிரஸ் சிறந்ததொரு வலுவான முக்கிய எதிர்க்கட்சியாக செயல்படும். காங்கிரஸ் கட்சி நிச்சயம் மீண்டும் புதுப்பொலிவுடன் வலம் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

‘அன்பால் அரவணைப்போம்’
ராகுல் மேலும் பேசுகையில், ‘‘வெறுப்புணர்வும், கோழைத்தனமும், கோபமும் காங்கிரசுக்கு எதிராக போரிடுகின்றன. தேர்தல் பிரசாரத்தில் கூறியது போல, அவர்களின் வெறுப்பை அன்பால் அரவணைத்துதான் வெற்றி பெற முடியும். 52 உறுப்பினர்களும் பாஜ.வை  எதிர்த்து ஒவ்வொரு அடியும் போராட வேண்டும்,’’ என்றார்.

No comments:

Post a Comment