Tuesday, January 24, 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பா நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் : உச்சநீதிமன்றம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கும் முன்னர், அது குறித்து நாடாளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என்று நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன்விலகும்போது, பிரிட்டிஷ் சட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்படும், பிரிட்டிஷ் மக்கள் சில உரிமைகளை இழப்பார்கள் என்பதால், நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

பதினோரு நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அதில் எட்டு நீதிபதிகள் நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்றும், மூவர் அது தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தனர்.
 
ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்திலோ அல்லது வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து சட்டமன்றங்களிலோ விவாதிக்க தேவையில்லை என்று அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக கூறினர்.

எனினும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது எனும் முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுக்கமாட்டர்கள். இருந்தாலும் சில உறுப்பினர்கள் அந்த நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் எனும் கருத்துக்கு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.

No comments:

Post a Comment