Wednesday, January 25, 2017

அரசியல் கட்சிகளின் வருமானம் ரூ.11 ஆயிரம் கோடி!: முதலிடத்தில் காங்., கட்சி!

புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.11,367 கோடி என தெரியவந்துள்ளது. இதில் காங்., கட்சி முதலிடம் பிடித்துள்ளது.

அறிக்கை:

கடந்த 2004-05 நிதி ஆண்டு முதல் 2014-15 நிதி ஆண்டு வரை, தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏ.டி.ஆர்.,) வெளியிட்டது. இதில் நன்கொடை, சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளில் கிடைத்த தொகையும் அடங்கும்.

காங்., முதலிடம்:

இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.11 ஆயிரத்து 367 கோடியே 34 லட்சம். இதில் ரூ.3 ஆயிரத்து 982 கோடியே 9 லட்சம் வருவாய் ஈட்டி, காங்., கட்சி முதலிடம் பிடித்தது. 2வது இடம் பா.ஜ.,க்கு கிடைத்தது. அதன் வருவாய் ரூ.3 ஆயிரத்து 272 கோடியே 63 லட்சம்.

மாநில கட்சிகள்:

மாநில கட்சிகளில் சமாஜ்வாதி, தி.மு.க., முறையே முதல் இரு இடங்களை பிடித்தன. அதன் வருமானங்கள் முறையே ரூ.819.1 கோடி மற்றும் ரூ.203.02 கோடி ஆகும். அ.தி.மு.க., ரூ.165.01 கோடி வருவாய் ஈட்டி 3வது இடம் பிடித்துள்ளது.

அதிக நன்கொடை:

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை அளித்தவர்களிடமிருந்து தேசிய கட்சியில் பா.ஜ.,வும்(ரூ.917 கோடி), மாநில கட்சிகளில் தி.மு.க.,வும்(ரூ.129 கோடி) அதிக நன்கொடை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளன.

69% அறியாதவர்களிடமிருந்து..

கட்சிகளின் 69 சதவீத வருவாய் அறியாத நபர்களிடமிருந்து பெற்ற நன்கொடை மூலம் கிடைத்துள்ளன. அதாவது 20 ஆயிரத்திற்கும் அதிகமான நன்கொடை வழங்கினால் மட்டுமே விவரங்களை அளிக்க வேண்டும். 20 ஆயிரத்துக்கும் கீழ் நன்கொடை அளித்தவர்களிடமிருந்த மட்டுமே கட்சிகள் ரூ.7 ஆயிரத்து 833 கோடி பெற்றுள்ளன. இம்முறையில் பகுஜன் சமாஜ்(100%), சமாஜ்வாதி(94%), காங்.,(83%) மற்றும் பா.ஜ.,(65%) அதிக வருவாயை ஈட்டியுள்ளன.

No comments:

Post a Comment