Monday, August 15, 2016

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்குகின்றது – நாமல் ராஜபக்ஸ!

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஓர் காவல்துறைப் பிரிவு அல்ல எனவும் அது சிறிகொத்தவின் ஓர் கிளை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் செயற்பட்டு வருவதாகவும், தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுவதாகத்தெரிவித்துள்ளார்.

இந்தியா- வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து: மோடி!


டெல்லி: இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு பிரதமர் மோடி  சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
 
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில் பேசிய மோடி, நமக்கு சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை என்றும் இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் லட்சக்கணக்கானோரின் தியாகம் உள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கையர்களின் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இந்த விஜயத்துக்கான, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அனைத்து செலவுகளையும் அந்தந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் பணியகம் மூலம் முன்னாள் புலிகளை கைது செய்ய முடியும் - ஹெல உறுமய!

காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய வரவேற்றுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள திக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, காணாமல்போன ஆயிரக் கணக்கான படைவீரர்கள் மற்றும் காவல்துறையினர் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட வேண்டும்.
 
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட  புலிகளின் முன்னாள் போராளிகளைக் கூட மீளவும் கைது செய்து, காணாமல் போன படையினர் பற்றிய தகவல்களை திரட்ட முடியும். தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டவற்றை மறந்து நல்லிணக்கப் பாதையில் நகர மறுத்தல்,  புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் பற்றியும் விசாரணை செய்யப்பட வேண்டும்.
 
காணாமல் போனோர் பற்றிய அலுவலகமானது நாட்டு மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமே தவிர, ஜெனீவாவிற்கு பொறுப்பு சொல்லும் வகையில் அமையக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Sunday, August 14, 2016

கியூபாவின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்தநாள்!!


கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்நாட்டின் பிரபல சுருட்டு தயாரிப்பாளர் 90 மீட்டர் நீளமுள்ள சுருட்டு ஒன்றை தயாரித்து, அந்த சாதனையை தங்கள் நாட்டின் புரட்சித் தலைவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
 
கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்நாட்டின் பிரபல சுருட்டு தயாரிப்பாளர் 90 மீட்டர் நீளமுள்ள சுருட்டு ஒன்றை தயாரித்து, அந்த சாதனையை தங்கள் நாட்டின் புரட்சித் தலைவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
 
அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.
 
கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் கியூபாவுக்கு சென்றார்.
 
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ - ஒபாமாவை சந்தித்துப் பேச மறுத்து விட்டார்.
 
இந்நிலையில், அமெரிக்காவின் பேராதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்த்துநின்று அமெரிக்காவின் அடிவாசலில் அமைந்துள்ள கரிபியன் நாடான கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்படுத்திய அந்நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்தநாளை அந்நாட்டு மக்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
 
தலைநகர் ஹவானாவில் உள்ள கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலைவரை வண்ணமயமான வாணவேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல், நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் வெகு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

ஹவானா நகரில் உள்ள காரல் மார்க்ஸ் கலையரங்கத்தில் பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பாடல்களுடன் கூடிய நாட்டிய நிகழ்ச்சிகளை சிறுவர்-சிறுமியர் நடத்தினர். முதுமை காரணமாக வெகு அரிதாக மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிடல் கேஸ்ட்ரோ, நட்புநாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவுடன் சேர்ந்து முன்வரிசையில் அமர்ந்து இந்த கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
 
இந்நிலையில், தங்கள் நாட்டு தலைவரின் பிறந்தநாளுக்கு மேலும் கவுரவம் சேர்க்கும் வகையில் இங்குள்ள பிரபல சுருட்டு தயாரிப்பாளரான கியூவெட்டோ என்றழைக்கப்படும் ஜோஸ் கேஸ்ட்டலர் கெய்ரோ என்பவர் 90 மீட்டர் (295 அடி) நீளம் கொண்ட பீமெகா சைஸ்பீ சுருட்டு ஒன்றை தயாரித்து, இதன் மூலம் தான் படைத்த புதிய கின்னஸ் சாதனையை பிடல் காஸ்டிரோவுக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார்.
கியூபாவில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிராக 1959-ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியை அடுத்து ஆட்சியை கைப்பற்றி, 1985-ம் ஆண்டுவரை சுமார் அரை நூற்றாண்டு காலம் அந்நாட்டின் ஆட்சிக்கு தலைமை தாங்கிவந்த பிடல் கேஸ்ட்ரோ பல சந்தர்பங்களில் வாயில் புகையும் மெல்லிய, நீளமான சுருட்டுடன்தான் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கொழும்பு யாழ். செல்லும் ரயில்களுக்கு ஆயுதப் பாதுகாப்பு!

யாழ். - கொழும்பு இடையே பயணிக்கும் ரயில்கள் மீது தொடர்ந்து கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து ரயில்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்றுஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றின் மீது ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தை சேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 
இதனையடுத்து தூரச்செல்லும் ரயைில்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்களின்பாதுகாப்பு நேற்று முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.