Friday, September 11, 2015
2005 முதல் 2015ஆம் ஆண்டுகளில் தாம் பொலிஸ் ஆட்சியை நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளியிட்டுள்ள கருத்தை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
அண்மையில் ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் சந்திரிகா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்காளர்களின் கவனத்துக்கு என்ற தலைப்பிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ,சந்திரிகா தம்மை குறை கூறியுள்ள அதேநேரம் தமது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களையும் பரிகாசம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் போஷகராக உள்ள சந்திரிகா தமது கட்சியில் உள்ளவர்களையே கொலைகாரர்கள் என்று ஹிந்து செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இது கட்சிக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்கு செல்வாக்கை குறையச் செய்துள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
சந்திரிகாவுக்கு ஏற்கனவே காணி முறைகேடு தொடர்பில் நீதிமன்ற வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டமையையும் மஹிந்த தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு இந்தியாவின் பின்புலம் இல்லை என்று ஹிந்து செவ்வியில் குறிப்பிட்டிருந்த சந்திரிகா அதன்போது வைபர் தொழில்நுட்பம் மூலமே தகவல்களை பரிமாறிக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துரைத்துள்ள மஹிந்த ராஜபக் ஷ, தமது ஆட்சியின்போது தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமது கட்சிக்காரர்களையே தூஷிக்கும் ஒருவர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்காளர்கள் மனதில் கொள்ளவேண்டும். இது கட்சியை மேலும் பலவீனமாக்கும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும் என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment