Sunday, September 20, 2015
இலங்கை அரச படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.நம்பகமான ஆதாரங்கள் திரட்டப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், உண்மையில் அவை நம்பகமான ஆதாரங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவாளர்களிடம் மட்டுமே ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், களத்திலிருந்து ஆதாரங்கள் திரட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தில் ஈடுபட்ட படையினர் மனித உரிமை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டு ஈடுபட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வலயங்களுக்கு மனிதாபிமான உதவிகள் குறிப்பாக உணவு மருந்தப் பொருட்கள் அனுப்பி வைப்பதனை படையினர் தடுத்தனர் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்ததாகவும் அந்தப் பொருட்கள் மக்களுக்கு கிடைத்ததா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் ஏனெனில் அந்தப் பகுதிகளை புலிகள் கட்டுப்படுத்தி வந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதா இல்லையா என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பே கண்காணித்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வலயத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எதன் அடிப்படைகளில் குற்றம் சுமத்துகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புலிகளும் சிவிலியன் ஆடைகளை அணிந்து யுத்தத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை தனித்து அடையாளம் காண்பதில் படையினருக்கு பெரும் சிக்கல் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை பாதுகாப்பதற்கு படையினர் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாகவும், படையினரின் அனைத்து நல்லெண்ண நடவடிக்கைகளும் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment