Friday, September 25, 2015
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஹஜ்
புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு உலகின் பல பகுதிகளில்
இருந்தும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மெக்கா சென்றனர்.
இந்தியாவில் இருந்து 1½ லட்சம் பேர் சென்றனர்.
இவர்கள் மெக்காவில்
தொழுகை நடத்தி விட்டு மினா சென்று சாத்தான் மீது கல்லெறிதல் நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளச் சென்றனர். அப்போது இந்திய நேரப்படி நேற்று காலை 11.30
மணிக்கு திடீர் என்று நெரிசல் ஏற்பட்டது. கல்லெறிதல் நிகழ்ச்சி நடைபெறும்
இடத்துக்குச் செல்லும் ஜமராத் பாலத்தின் முகப்பு பகுதியில் இந்த நெரிசல்
ஏற்பட்டது.
இதில் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் அதே
இடத்தில் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். 717 பேர் இறந்ததாக சவுதி அரசு
அறிவித்துள்ளது. 860 பேர் காயம் அடைந்தனர்.
உடனே தயார் நிலையில்
இருந்த மீட்பு குழுவினர் அந்தப் பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் முழு
வீச்சில் ஈடுபட்டனர். ராணுவமும் வர வழைக்கப்பட்டது. மீட்புப் பணியில் 4,000
பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 220 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயம்
அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள்
மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மெக்காவில் நடந்த இந்த துயரச்
சம்பவத்தால் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களின் உறவினர்கள்
கவலை அடைந்தனர். சவுதியில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்கள் நிலைபற்றி
டெல்லியில் உள்ள ஹஜ் கமிட்டிக்கு தகவல் தெரிவித்தது.
அதன்படி 14
இந்தியர்கள் இந்த நெரிசலில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3
பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் ஆந்திரா, ஒருவர் கேரளாவைச்
சேர்ந்தவர்.
மெக்கா நெரிசலில் பலியான 3 தமிழர்கள் விவரம் வருமாறு:–
1மொய்தீன் பிச்சை (வயது65). நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர்.
2. ரெமிஜன் (52), திருச்சி, தென்னூர்.
3. சம்சுதீன் முகமது இப்ராகிம் (65) மயிலாடுதுறை.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 2,873 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நெரிசலில் ஐதராபாத்தைச் சேர்ந்த பீபீஜான் (65), சபா தஸ்லின் (52) ஆகிய 2 பெண்கள் பலியானார்கள்.
ஐதராபாத்
எல்.பி. நகரைச் சேர்ந்த பீபீஜான் தனது கணவர் சேக் அப்துல்மஜித், சகோதரர்
ரவூப், அவரது மனைவி சகனாஜ் ஆகியோருடன் கடந்த 2–ந்தேதி மெக்காவுக்கு ஹஜ்
பயணம் மேற்கொண்டனர்.
பலியான சபா தஸ்லின் ஐதராபாத் நாராயண குட்டா
காஜிமில்லத் காலனியைச் சேர்ந்தவர். இவர் கணவர் முகமது கவுஸ் உடன் தனியார்
டிராவல்ஸ் மூலம் மெக்கா சென்றனர்.
ஆந்திரா தெலுங்கானாவில் இருந்து இந்த ஆண்டு 5451 பேர் ஹஜ் யாத்திரை சென்றனர்.
மெக்கா
நெரிசலில் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்
(வயது51) என்பவர் பலியானார். இவரது மனைவி சுலேகா படுகாயங்களுடன்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த 10–க்கும்
மேற்பட்டோர் மாயமாகி விட்டனர். அவர்களும் விபத்தில் சிக்கி இருக்கலாம்
என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் யார்– யார்? என்பதை கண்டறியும் பணி
நடந்து வருகிறது.
பலியான அப்துல் ரகுமான் கடந்த 25 ஆண்டுகளாக ரியாத்
நகரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊர்
திரும்பினார். இங்கு வந்த பிறகு அவர் ஹஜ்யாத்திரைக்காக சவுதி சென்றார்.
No comments:
Post a Comment