Sunday, August 2, 2015

புலிகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த ஆண்டுகளில் அனுபவித்து வந்த எம்பீப் பதவியின் சொகுசுகளையும் வசதி வாய்ப்புகளையும் இழக்க நேரலாம் எனத் தெரிகிறது!!

Sunday, August 02, 2015
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை மூன்று அல்லது நான்கு ஆசனங்களே கிடைக்க வாய்ப்பிருப்பதாக மிரர் பத்திரிகையில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் எழுதியுள்ளார்.
 
ஆயின், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த ஆண்டுகளில் அனுபவித்து வந்த எம்பீப் பதவியின் சொகுசுகளையும் வசதி வாய்ப்புகளையும் இழக்க நேரலாம் எனத் தெரிகிறது.
இவர்கள் எம்பிக்களாக இருந்த காலத்திலும் தமிழ் மக்களுக்கு வாழ்வு முன்னேற்றமோ பிரச்சினைகளுக்குத் தீர்வோ இவர்களால் கிடைத்திருக்கவில்லை என்பதுடன், இனிமேல் எம்பியானாலும் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதால் தமிழ் மக்கள் இழப்பெதையும் உணரப் போவதில்லை.
 
ஆனால், எம்பியாக இருந்தவர்கள் அந்த வாழ்க்கை அலங்காரங்களை பந்தாக்களை இழக்க நேர்வது துயரந்தான். அந்தப் பதற்றம் அவர்களது தேர்தல் விளம்பரங்களிலும் பேச்சுக்களிலும் தெரிய ஆரம்பித்திருப்பது உண்மை.
 
கடந்த நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக இருந்த ஐந்து பேர் கூட்டமைப்பு சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். மூன்றோ நாலு பேருக்குத்தான் வெற்றிபெற வாய்ப்பு என்றால், நிச்சயம் இரண்டு பேர் எம்பி ஆசனத்திற்குத் திரும்பப் போக முடியாது.
 
இம்முறை புதியவராகக் களத்தில் குதித்திருக்கும் சித்தார்த்தன் வேறு நிச்சயம் வெற்றி பெறுபவரில் ஒருவராக இருப்பார் என்று கருதப்படுகிறார். எனவே கூட்டமைப்பில் இரண்டோ மூன்று பழைய எம்பிக்களுக்கு ‘கல்தா’ நிச்சயம்.
 
யார் அந்த இரண்டோ மூன்று பேர் என்னும் பதற்றத்தை எல்லோருமே காட்டுகிறார்கள். எந்தப் பெருச்சாளிகள் கொடுத்த காசோ தேர்தல் விளம்பரங்களுக்கு கோடி கோடியாக இறைக்கப்படுகிறது.
 
முன்னாள் பாடசாலை அதிபரான சிறீதரன், முன்பு மாணவர்களைப் பிடித்துப் போர்க்களத்திற்கு அனுப்பியது போல, இப்போது பள்ளிக்கூட மாணவர்களைப் பிடித்துத் தனது பிரசுரங்களைக் கொடுத்துப் பிரசாரத்திற்காகத் தெருவில் விடுகிறார்.
 
மாவையாரோ போராளிகளிடம் தனக்கு மகா மகா மரியாதை இருப்பதை, யார் கேட்டாலும் ஓடிவந்து கண்ணீர் மல்கக் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யத் தயாரானவராக இருக்கிறார்.
 
“ஊடகப் போராளி” பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக்கொண்டிருக்கும் பத்திரிகை முதலாளிதான் தோல்வி அடையப் போகிறவர் லிஸ்டில் முதலாம் ஆளாக இருக்கிறார்.
 
எனவே தனது தாய்வீடாம் ஐக்கிய தேசியக் கட்சிதான் தன்னை அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் செய்தி வெளியிட்டு வருகிறார்.
 
தனது தேர்தல் அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று குறிப்பிட்டிருக்கும் ரணில், நேற்று முன்தினம் யாழ்ப்பாணக் கூட்டத்தில் அதைத் திரும்பவும் சொல்லவில்லை என்று புளகாங்கிதப்பட்டுச் செய்தி எழுதியிருக்கிறது அவரது பத்திரிகை.
 
ஐ.தே.க. வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல விடயங்கள் பற்றிப் பேசிய ரணில், அதில் குறிப்பிட்டுள்ள ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதைக் கூட்டத்தில் தெரிவிக்கவில்லை. அதேசமயம், பிரதமருக்கு முன் உரையாற்றிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ரணில் மற்றும் மைத்திரி காலத்தில் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பிறகு ஒருபோதும் தீர்க்க முடியாது என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது”
 
என்று ஐ.தே.க விசுவாசத்தோடு எழுதியுள்ளது அந்தப் பத்திரிகை.
பிறகென்ன, முன்ஜாக்கிரதையாக தனது பழைய ஐ.தே.க உறுப்பினர் அட்டையை எடுத்துப் பொக்கெற்றுக்குள் வைத்துக்கொண்டு விட்டார் பத்திரிகை முதலாளி!

No comments:

Post a Comment