Saturday, August 01, 2015
திருச்சி:இலங்கையில் இருந்து
கடல் வழியாக நாகப்பட்டினத்திற்கு 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் 2 பேர்
கடத்தி வருவதாகவும் பின்னர் அந்த தங்கத்தை திருச்சி வழியாக காரில்
சென்னைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் திருச்சி சுங்கத்துறை
அதிகாரிகளுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடலோர
பகுதிகளிலும் முக்கிய சாலைகளிலும் தீவிர கண்காணிப்பில் திருச்சி
சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே ஈடுபட்டிருந்தனர். அப்போது
புதுக்கோட்டை–திருச்சி சாலையில் மாத்தூர் அருகே உள்ள சுங்கச்சாவடிக்கு
புதுக்கோட்டையில் இருந்து ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்தது.
அந்த
காரை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் காரில்
இருந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள்
முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காருக்குள்
சோதனை செய்த போது அங்கு 8 கிலோ தங்ககட்டிகளை மறைத்து வைத்திருப்பதை கண்டு
பிடித்தனர்.
பின்னர் அந்த தங்ககட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 2 பேரையும் பிடித்து
சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல்
செய்யப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment