Wednesday, July 29, 2015

கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ராமேசுவரத்தில் குவிந்த மக்கள்!

Wednesday, July 29, 2015
ராமேஸ்வரம் :முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங் கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் திடீரென மயங்கி விழுந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், கலாம் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை கொண்டு செல்லப்பட்டது:
கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அவரது உடல் ராணுவ விமானம் மூலம் இன்று (புதன் கிழமை) மதுரை கொண்டு வரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலைப் பெற்றுக் கொண்டார். அவரது உடலுக்கு ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.
முதல்வர் பங்கேற்பில்லை:
உடல்நிலை காரணமாக தன்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலாததால் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்குகொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை.
எனவே, எனது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் ராமேசுவரம் சென்று இறுதி மரியாதை செலுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், மறைந்த அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்னாரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான 30.7.2015 அன்று அரசு விடுமுறை அளிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பங்கேற்கிறார்:
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இத்தகவலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி செய்துள்ளார்.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நாளை அதிகாலை ராமேசுவரம் வந்தடையும் பிரதமர் அங்கு காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமருடன் சில மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள்" என்றார்.
இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு:
அப்துல் கலாமின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார் கூறும்போது, "கலாமின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் வைக்கப்படுகிறது.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். ராமேசுவரம் பேக்கரும்பு கிராமத்தில் அவரது உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படும்" என்றார்.
கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, "கலாமின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.

No comments:

Post a Comment