Wednesday, July 29, 2015

ஒரே நேரத்தில் 26 அணுஉலைகள்: சீன அரசு அதிரடி!!

Wednesday, July 29, 2015
பீஜிங்: சீனாவில் தற்போது 26 அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் ஒரே சமயத்தில் இந்த அளவு அணுஉலைகள் அமைக்கும் பணி வேறு எந்த நாட்டிலும் மேற்கொள்ளப்படவில்லை. பல நாடுகளில் மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 வல்லரசு நாடுகள் மட்டும் அணு ஆயுத நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அணு உலைகள் அமைக்க மற்ற நாடுகள் அணு உலைகள் அமைக்க சர்வதேச அணுசக்தி கழகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அனுமதி பெற்று அணுஉலைகளை அமைத்து வருகின்றன. பாகிஸ்தான், வடகொரியா, ஈரான் போன்ற நாடுகள் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஉலைகளை அமைத்து வருகின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை கொண்டுவரும் வகையில் ஈரானுடன் வல்லரசு நாடுகள் கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன.

பொக்ரான் குண்டுவெடிப்புக்கு பிறகு இந்தியா மீது அணு சக்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கு வல்லரசு நாடுகள் தடை விதித்திருந்தன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பின்னர் இந்தியாவில் அணுசக்தி திட்டங்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அணு உலைகளுக்கு ஆஸ்திரேலியா, கஜகஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து யுரேனியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரிய அளவில் உயிரிழப்பு இல்லை என்றாலும் புகுஷிமா நகரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய அபாயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து உலகம் முழுவதும் புதிதாக அணுஉலைகள் அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. சீனாவிலும் பல திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்ட அணுஉலை திட்டங்கள் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளன. லியோனிங் மாகாணத்தில் ஹாங்யான்கே அணுமின் நிலையத்தில் 6 வது யூனிட் அமைக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது சீனாவில் 26 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.  ஒரே சமயத்தில் இந்த அளவு அணு உலைகள் வேறு எந்த நாட்டிலும் அமைக்கப்பட்டது இல்லை. இந்த விவகாரத்தில் சீனா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

No comments:

Post a Comment