Wednesday, July 29, 2015
நாட்டை பிரிவினையின் பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் கைகோர்த்துள்ளன. அதேபோல் தமிழ் பேசும் மக்களை எமக்கு எதிராக திருப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் அச்சப்படும் எந்த நடவடிக்கையையும் நாம் முன்னெடுக்க மாட்டோம் என உறுதியளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஆட்சியமைத்து ஆறுமாத காலத்துக்குள் நாட்டுக்கு பொருந்தக்கூடிய புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் வெளியிடப்பட்டது. கொழும்பு ௦5 இல் அமைந்துள்ள ஹென்றி பெட்ரிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்கள்,கலைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
எம்மால் இன்று வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்க்கும் போது அன்று நாம் வெளியிட்ட மஹிந்த சிந்தனையே நினைவிற்கு வருகின்றது. நாட்டின் இன்றைய நிலைமை அன்று இருக்கவில்லை. இன்று மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். ஆனால் அன்று எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை. இராணுவ பாதுகாப்பு, பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தி யில் நாம் செயற்படவேண்டி இருந்தது. அன்று எம்மால் வவுனியாவைத் தாண்டி பயணிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. வடக்கு எப்படி இருக்கும் என்பது எமக்கு தெரியவில்லை. இன்று வடக்கில் வாழும் எமது விவசாயிகள் வெங்காயம் விதைப்பதைப்போல் அன்று புலிகளினால் மிதிவெடிகள் விதைக்கப்பட்டிருந்தன.
அதேபோல் அன்று கொழும்பின் நிலைமை மிக மோசமாக இருந்தது. குப்பையால் நிறைந்திருந்த கொழும்பையே அன்று நாம் பார்த்தோம். கொழும்பு மட்டுமல்ல நாட்டில் அனைத்து பகுதிகளும் மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தன. அவற்றில் இருந்து நாட்டை மீட்டெடுத்தது நாம்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் நாட்டை மாற்றியமைத்தோம். அமைதியான நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடிந்தது.
மோசமான நிலையில் நாடு
ஆனால் மீண்டும் நாட்டின் நிலைமை மாறிவருகின்றது. மீண்டும் சாதாரண மக் கள் கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் மஹிந்தவுக்கு மீண்டும் ஏன் இடம் வழங்கப்பட்டதென ரணில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் நான் ஆட்சியில் இருந்து வெளியேறிய போதும் மக்கள் என்னை மீண்டும் அழைக்கின்றனர். இலட்சக் கணக்கிலான மக்கள் எனது வீடுதேடிவந்து தலைமைத்துவதை ஏற்க வற்புறுத்துகின்றனர். அவர்கள் அனைவரும் விடுக்கும் கோரிக்கையை நல்ல தலைவன் புறக்கணிக்க முடியாது. அதே போல் இன்று வடக்கில் இராணுவம் வெளியேற்றப்பட்டுள்ளமை, வடக்கில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வேறு மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வடக்குக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் அமைதியான நாட்டை உருவாக்கிக் கொடுக்கவே மக்கள் என்னை அழைக்கின்றனர்.
எமது அரசாங்கத்தில் 15 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தோம். விவசாயிகளுக்கு உர மானியங்களை பெற்றுக் கொடுத்தோம். பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண் டோம். பெருந்தோட்ட துறையின் அபிவிருத்திக்கு நாம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் அவை அனைத்தும் இன்று அடிமட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த ஆறுமாத ஆட்சியில் இந்த நாடு 25ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. அந்த உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டதன் காரணத்தினால் தான் மக்கள் மீண்டும் என்னை நாடி வந்துள்ளனர்.
மீண்டும் போராடத் தயார்
நாம் கடந்த காலத்தில் நல்ல படிப்பினையினை கற்றுள்ளோம். பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவு நாம் பொறுத்துக்கொண்டுள்ளோம். நாட்டுக்காக நாம் போராடவேண்டி இருந்த நிலையிலும், யுத்தம் ஒன்றை செய்ய வேண்டிய நிலையிலும் நாம் அவற்றை செய்தோம். அதேபோல் மீண்டும் இந்த நாட்டுக்காக போராடவேண்டிய நிலைமை ஏற்படும் சந்தர்ப்பத்தில், நாட்டுக்காக யுத்தம் ஒன்றை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய சந்தர்ப்பத்தில் அதை நாம் மேற்கொள்ள தயாராக உள்ளோம். நாம் மீண்டும் புதிதாக சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதகாலம் மக்கள் சிந்திக்க வேண்டிய காலமாக இருந்தது. இப்போது நாம் புதிதாக செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் இந்த ஆறுமாத காலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் நாம் முன்னெடுக்க வேண்டும். கொழும்பை சுத்தமான நகரமாக மாற்றும் அதே நேரம் ஏனைய மாவட்டங்களையும் சுத்தமான நகரமாக மாற்றி இலங்கையை தூய்மையான நாடக மாற்ற வேண்டும்.
மீண்டும் நிவாரணம்
இந்த ஆறுமாத காலத்தில் நிலைமை இப்படியென்றால் 6௦ மாத காலத்தில் நாட்டின் நிலைமை எப்படியிருக்கும். நாடு முற்றாக அழிந்துவிடும். நாம் மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப தயாராக உள்ளோம். நாட்டை நவீனப்படுத்தும் பயணத்தில் இளைஞரை ஒன்றிணைத்து கொண்டுசெல்ல வேண்டும். பொருளாதா ரத்தை பலப்படுத்த வேண்டும். மக்கள் உணரக்கூடிய நிவாரணங்களை கொண்டுவருவோம். அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுப்போம். போசாக்கான உணவு, சுகாதார வசதிகளை மேலும் பலப்படுத்துவோம். அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சலுகைகளை பெற்றுக்கொடுப்போம்.
ஒரு அணியாக கட்சி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயில் இரண்டு அணி இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரு அணி மட்டுமே உள்ளது. அந்த அணியும் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் அணியாகவே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தான் பல அணிகள் இன்று உருவாகியுள்ளன. இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக கைகோர்த்துள்ளன. அதேபோல் வேறு பல கட்சிகளும் கைகோர்த்துள்ளன. அன்று சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பட்ட ஜாதிக ஹெல உறுமயவும் அவர்களுடன் தான் கைகோர்த்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்திருப்பீர்கள். அது என்ன சொல்கின்றது.
அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப சுய நிர்ணய கொள்கைக்கு இடம் கொடுக்க முடியுமா? வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைத்து தனிநாடாக மாற்றுவதும், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு முன்னால் எம்மை நிறுத்த முயற்சிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒட்டுமொத்த பிரிவினை சக்திகளும் இன்று ஒரு அணியில் கைகோர்த்து நாட்டின் நல்லாட்சி, ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். ஆகவே இவர்கள் நினைப்பது நாட்டை நல்லாட்சியின் பாதையில் கொண்டுசெல்லவோ, நாட்டில் நல்லாட்சியை உருவாக்கவோ அல்ல. இந்த நாட்டை பிரிவினையின் பாதையில் கொண்டு செல்லவே இவர் கள் முயற்சிகின்றனர்.
சிறுபான்மை இனத்துக்கு தடையாக இருக்க மாட்டோம்
எமது ஆட்சியில் நாம் சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் அவர்களது கலாசாரத்தையும் பாதுகாத்தோம். கடந்த கால போராட்டத்தில் இடிக்கப்பட்ட இந்து ஆல யங்கள், கத்தோலிக்க தேவாலயங்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களை நாம் புனர்நிர்மாணம் செய்து கொடு த்தோம். ஆனால் கடந்த குறுகிய காலத்தில் தமிழ், முஸ் லிம் மக்கள் மத்தியில் எம்மைப்பற்றிய தவறான எண்ணத்தை வரவழைத்து எமக்கு எதிரான வகையில் சில சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளன என்று சொன்னாலும் அது தவறில்லை. அது இந்த தேர்தலில் நிரூபணமாகியது. ஆகவே இவர்களது சூழ்ச்சியை தமிழ் மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எந்த மதத்துக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எந்த வகையிலும் நாம் தடையாக இருக்க மாட்டோம். அனைவரையும் பாதுகாக்கும் ஆட்சியை முன்னெடுப்போம்.
ஆறுமாத காலத்தில் புதிய அரசியலமைப்பு
அதேபோல் நாட்டின் சுயாதீன தன்மையை பாதுகாக்கும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப் போம். பலமான சட்ட, நீதி முறைமையினை நாம் உறுதிப்படுத்துவோம். அதேபோல் சர்வதேச உறவுமுறையை பலப்படுத்தும் வகையில் எமது வெளிநாட்டு கொள்கைகளை அமைத்துக்கொள்வோம். அத்தோடு நாம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வரும் கொள்கையையும் பொறுப்பேற்று புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவோம். அதேபோல் பாராளு மன்றத்தை பலமான சபையாக மாற்றி அடுத்த
ஆறுமாத காலத்தில் நாட்டுக்கு பொருந்தக் கூடிய புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவோம். மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய பலமும் உறுப்பினர்களும் எம்மிடம் இருக்கின்றனர். மீண்டும் இந்த நாட்டை சிறப்பான பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடியும். இந்த நாட்டை கோபத்தாலும் வைராக்கியத்தாலும் முன்னெ டுத்து செல்ல முடியாது. ஒற்றுமையான ஒன்றுபட்ட சமூகத்தின் மூலமாகத்தான் நாட்டை முன்னெடுக்க முடியும். ஆகவே மீண்டும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம் எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment