Saturday, July 18, 2015
ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவார் என நேற்று அநுராதபுரத்தில் வைத்துக் கூறினார் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக செயற்பட அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-
மஹிந்தவுக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் போட்டி இல்லை. கடந்த முறையும் போட்டியாக இருக்கவில்லை. ஆனால், நூற்றுக்கு 85 வீத வாக்குகளை வடக்கு, கிழக்கு புலி ஆதரவாளர்கள் வழங்கினர். மேற்குலக நாடுகளில் பணத்தைப் பதுக்கிவைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைப் பெற்றுத்தான் கடந்த முறை அவர்கள் நியமிக்கப்பட்டனர். மஹிந்த தோற்கவில்லை. சூழ்ச்சியின் பிரதிபலன்தான் இது என்று நாம் தெளிவாகக் கூறவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 9 இலட்சம் வாக்குகள் அன்னம் சின்னத்திற்கு வழங்கப்பட்டன. வெற்றிலை சின்னத்துக்கு இருந்த 3 இலட்சம் வாக்குகளும் கிடைத்தன. மஹிந்தவை நாம் தோற்கடிக்கவில்லை.
ஆனால், தற்போது நடைபெறவுள்ளது பொதுத் தேர்தல். இதில் மாவட்ட மட்டத்தில்தான் எம்.பிக்கள் தெரிவுசெய்யப்படுவர். அநுராதபுரத்தில் 7 ஆசனங்களைக் கைப்பற்றுவோம். இந்த வெற்றியை ஏனைய மாகாணங்களுக்கும் கொண்டுசெல்வோம். ஓகஸ்ட் 17ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீ மகாபோதியின் ஆசிர்வாதம் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்'' - என்றார்.

No comments:
Post a Comment