Wednesday, July 1, 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா இமாலய வெற்றி!

Wednesday, July 01, 2015
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இதுவரை நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இமாலய வெற்றி பெற்றுள்ளார்.
 
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27 ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனது வேட்பாளராக சி.மகேந்திரனை களம் இறக்கியது. அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே ஆதரவளித்தது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்காமல் பின்வாங்கின. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. இடைத்தேர்தலில் 74.47 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்குப்பதிவு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவை பார்வையிடவும் கண்காணிக்கவும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளும் ஊழியர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
 
நேற்று காலை 8 மணிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம் கபூர். தேர்தல் பார்வையாளர் ஜோதி கலாஷ், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் ஆகியோர் முன்னிலையில் ஸ்ட்ரா்ங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட 420 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வாக்கு எண்ணும் இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 16 தபால் வாக்குகளும் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலைக்கே கிடைத்தது. அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. ஒவ்வொரு ரவுண்டு வாக்குகளும் எண்ணப்பட்டு, அதன் முடிவுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் அறிவித்தார்.
 
17 ரவுண்டிலும் அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா மிக அதிகளவிலான வாக்குகளை பெற்றார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் நூற்றுக்கணக்கான வாக்குகளே கிடைத்தன. இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543 வாக்குகளில் 181404 வாக்குகள் பதிவாகின. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 160416 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனுக்கு 9710 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் ட்ராபிக் ராமசாமி உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
 
சுற்றுவாரியாக கிடைத்த ஒட்டு மொத்த வாக்குகள் விவரம் பின்வருமாறு:
 
1வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு : ஜெயலலிதா - 9546 வாக்குகள் - மகேந்திரன் - 930 வாக்குகள்
2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 20286 வாக்குகள் - மகேந்திரன் - 1637 வாக்குகள்
3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 30017 வாக்குகள் - மகேந்திரன் - 2287 வாக்குகள்
4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 38496 வாக்குகள் - மகேந்திரன் - 2799 வாக்குகள்
5வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா – 48,588 வாக்குகள் - மகேந்திரன் - 3653 வாக்குகள்
6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 57835 வாக்குகள் - மகேந்திரன் - 4287 வாக்குகள்
7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 67437 வாக்குகள் - மகேந்திரன் - 4816 வாக்குகள்
8வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 76842 வாக்குகள் - மகேந்திரன் - 5417 வாக்குகள்
9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 86539வாக்குகள் - மகேந்திரன் - 5932 வாக்குகள்
10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 98503வாக்குகள் - மகேந்திரன் - 6269 வாக்குகள்
11வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 109166வாக்குகள் - மகேந்திரன் - 6731வாக்குகள்
12வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 118043 வாக்குகள் - மகேந்திரன் - 7215 வாக்குகள்
13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 126379 வாக்குகள் - மகேந்திரன் - 7785 வாக்குகள்
14வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 136232 வாக்குகள் - மகேந்திரன் - 8118 வாக்குகள்
15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 145965 வாக்குகள் - மகேந்திரன் - 8875 வாக்குகள்
16வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 155963 வாக்குகள் - மகேந்திரன் - 9420 வாக்குகள்
17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 160416 வாக்குகள் - மகேந்திரன் - 9710 வாக்குகள்
 
சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமிக்கு 4590 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. நோட்டாவுக்கு 2376 வாக்குகள் கிடைத்துள்ளது. கடைசியாக 17வது சுற்றுடன் வாக்கு எண்ணிக்கை 1-30 மணிக்கு முடிவடைந்து முதலமைச்சர் ஜெயலலிதா 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்கு எண்ணிக்கை முகவர்களாக திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், முதல்வர் புரட்சித்தலைவி வாழ்க அம்மா வாழ்க என்று விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரியில் குழுமியிருந்த பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேலிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி. வெங்கடேஷ்பாபு , வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment