Wednesday, July 1, 2015

டெஸ்ட் கிரிக்கெட் பகல்-இரவு ஆட்டம் அறிமுகம்; 138 வருட கால வரலாற்றில் முதல்முறை!!

Wednesday, July 01, 2015
டெஸ்ட் போட்டிகள் 1877ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன. இதுவரை ஆட்டத்தில் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ஆனால், பகல்-இரவாக நடைபெற போகும் முதல் டெஸ்ட் போட்டி இதுவேயாகும். இதுவரை 2168 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
20 ஓவர் ஆட்டத்தின் தாக்கத்தால் 5 நாள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவு ரசிகர்களே டெஸ்ட் போட்டியை பார்க்கிறார்கள்.
 
டெஸ்ட் போட்டியை பாதுகாக்கவும், அதில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டது. அதன்படி பகல்–இரவாக டெஸ்டை நடத்த முடிவு செய்தது.
 
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முதலாக டெஸ்ட் போட்டி பகல்–இரவாக ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மைதானத்தில் நடக்கிறது. நவம்பர் 27–ந்தேதி முதல் டிசம்பர் 1–ந்தேதி வரை இந்த டெஸ்ட் நடக்கிறது.
 
இதில் ஆஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த பகல்–இரவு டெஸ்டில் இளம்சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
நவம்பர்–டிசம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 5–9–ந்தேதி வரை பிரிஸ்பேனிலும், 2–வது டெஸ்ட் (நவம்பர் 13–17–ந்தேதி வரை) பெர்த்திலும் நடக்கிறது. இதன் 3–வது டெஸ்ட் மட்டும் தான் பகல்–இரவாக நடக்கிறது.

No comments:

Post a Comment