Monday, June 29, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மறுக்கப்பட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவார்: விமல் வீரவன்ஸ!

Monday, June 29, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மறுக்கப்பட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ஸ, அவரது கட்சியிலேயே தமது கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.
 
பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதானது, ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்துக்கொள்வதற்காகும். மத்திய வங்கி ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கை ரணிலுக்கு எதிராக இருந்தமையால் கடந்த வெள்ளிக்கிழமை அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது தடுத்தார். 100 நாள்களின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக குறிப்பிட்ட ஐ.தே.க. அரசு அவ்வாறு செய்யாது இழுத்தடித்தது. இந்நிலையில், திடீர் என நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
 
ஆனாலும், நாங்கள் நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை. நாங்கள் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த அரசின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி வந்தோம். இவர்கள் மீண்டும் நாட்டில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். புலிகள் தலைதூக்கும் நிலை உருவாகியுள்ளது. பொய்யால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசை மேலும் தொடரவிட முடியாது. ஜனவரி 8ஆம் திகதி பொதுமக்களுக்குத் தவறியதை அவர்கள் இம்முறை தேர்தலில் சரிபடுத்துவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளது. அவர்கள் தேர்தலுக்கு முன்னர் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளமை தற்போது ஒவ்வொன்றாகத் தெரியவருகின்றது. அண்மையில் நாட்டுக்காக வடக்கில் போராடிய இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
புலி உறுப்பினர்களை சிறையிலிருந்து விடுவிக்க குழு நியமித்து பேச்சு நடத்தப்படுகின்றது. ஆனால், நாட்டுக்காக புலிகளுக்கு எதிராக போராடிய சிப்பாய்களை சிறையில் அடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பயங்கரமான நிலையைத் தடுப்பதற்கு மக்களுக்குக் கிடைத்துள்ள இறுதிவாய்ப்பு, எதிர்வரும் பொதுத் தேர்தலாகும். பயங்கரவாதத்திலிருந்து மீட்ட நாட்டை தொடர்ந்தும் பாதுகாக்க இன, மத பேதமின்றி மக்கள் அனைவரும் மஹிந்தவுடன் இணைந்து அவரை பிரதமராக்க வேண்டும்'' - என்றார். தேசிய சுதந்திர முன்னணி எக்கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது, மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கட்சியிலேயே தமது கட்சி கூட்டணி அமைப்பதாகவும் தான் வழமைபோன்று கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுவேன் என்றும் விமல் தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளோம். எது எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தலில் போட்டியிடுவது உறுதி'' - என்றார். அதுமாத்திரமல்லாது, எமக்கு இது தொடர்பில் 'ஏ', 'பி' திட்டங்கள் உள்ளன. இதில் 'பி' திட்டம் சிறந்தது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளேன் என்று விமல் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment