Monday, June 29, 2015

ஜூலை 1இல் துரோகிகளுக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ!

Monday, June 29, 2015
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்றியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்தவின் விசுவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதன் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டுவரும் சுசில் பிரேமஜயந்தவை தமது பக்கம் வளைத்துப் போட்டுள்ளனர். மஹிந்தவை ஆதரிக்கும் முடிவை அவர் இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
 
இதனால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, சு.கவின் உயர்மட்ட பிரமுகர்களுடன் தொடர் பேச்சு நடத்திவருவதாகவும், சுசில் பிரேமஜயந்தவின் பொறுப்புகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயகவிடம் ஒப்படைக்க உத்தேசித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது. அத்துடன், சு.கவிலுள்ள மேலும் சிலர் மஹிந்த பக்கம் சாயும் நிலையில் இருப்பதால் அவர்களுக்கு கடிவாளம் போடுவது பற்றியும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார். பொதுத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்‌ஷ அணிக்கும், மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையில் பனிப்போர் நடந்துவந்தது. நாடாளுமன்ற கலைப்புக்குப் பின்னர் அந்தப் போர் உக்கிரமடைந்துள்ளது. மஹிந்தவை பிரதமராக்கவேண்டும் என சு.கவிலுள்ள அவரது விசுவாசிகள் வலியுறுத்திவருகின்றனர். இதற்குப் பச்சைக்கொடி காட்ட ஜனாதிபதி மறுத்துவருவதால் மஹிந்த தலைமையில் மூன்றாம் கூட்டணி அமைப்பது பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில், ஜூலை முதலாம் திகதி இது விடயம் பற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவுள்ளது. அதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடையுமா? மஹிந்த மூன்றாம் கூட்டணி அமைப்பாரா என்ற வினாவுக்கு இன்றைய தினம் விடை கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது. இதற்கிடையில் இரு தரப்பினருக்குமிடையில் இன்று நடைபெறவுள்ள சந்திப்பின்போது, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு மைத்திரிபால சிறிசேன தரப்பு இணங்கியுள்ளபோதிலும் மஹிந்தவைப் போட்டியிட அனுமதிக்கமுடியாது எனக் கூறியுள்ளது. இதை ஏற்கமறுக்கும் மஹிந்த தரப்பு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவேண்டும் என்றும், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும் தரப்பு வலியுறுத்தி வருகின்றது.
 
இந்நிலையில், இருதரப்பும் ஜூலை முதலாம் திகதி ஏதாவதொரு முடிவுக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேன தரப்பு இணக்கம் தெரிவிக்காவிடின் தனித்துப் போட்டியிடும் முடிவை மஹிந்த ராஜபக்‌ஷ அன்றைய நாளை அறிவிப்பார் என்றும் கூறப்படுகின்றது. எது எப்படியிருந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சுத்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு மஹிந்தவுக்கு ஜனாதிபதி வாய்ப்பளிக்க மாட்டார் என்பதால், மஹிந்த மூன்றாம் கூட்டணி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அவர் தலைமையிலேயே அநுராதபுரத்தில் அவர்சார்பு கூட்டம் நடைபெறவுள்ளது. -

No comments:

Post a Comment