Tuesday, June 2, 2015

தேசிய சேமிப்பு வங்கியின் 2800 கோடி ரூபாவுக்கு நடந்தது இதுதான்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, June 02, 2015
தேசிய சேமிப்பு வங்கியில் பெற்றுக் கொண்ட கடன் தொகையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாகச் செய்யப்பட்ட வேலைகளை பாராளுமன்ற கோப் குழுவின் மூலம் விசாரணைகளை நடத்த முடியும் என நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
பெருந்தெருக்கள் அமைச்சில் 2800 கோடி ரூபாவை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்மீது தொடர்ந்தும் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் குறிப்பிட்டிருக்கும் 2800 கோடி ரூபா, நீண்டகால கடன் அடிப்படையில் பெற்ற 5500 கோடி ரூபாவுக்குள் உள்ளடங்காது. தேசிய சேமிப்பு வங்கியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தனியாக குறுகியகால கடன் அடிப்படையில் பெறப்பட்டதே 2800 கோடி ரூபாவாகும்.
 
5500 கோடி ரூபா நீண்டகால கடன் அடிப்படையில் பெற்ற பணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சில இன்னமும் முழுமையாக்கப்படவில்லை. அந்தப் பணமும் முழுமையாக செலவு செய்யப்படவும் இல்லை. இங்குள்ளது ஒரே கடன் அல்ல. இரண்டும் வெவ்வேறு கடன்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
 
பிரதமர் குறிப்பிட்ட 2800 கோடி ரூபா கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கு எனது இறுதி வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதற்கு பாராளுமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது.
 
2015ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இந்தக் கடனை மீளச் செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்த அரசு வேறு வழிகளில் செலவு செய்திருப்பதாலேயே பிரதமர் இப்போது 2800 கோடி ரூபா தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
தேசிய சேமிப்பு வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் திண்டாடுவதால் தானோ பிரதமர் இவ்வாறு பேசுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment