Tuesday, January 6, 2015

கிழக்கு தமிழர்களின் தேவைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் புறக்கணித்து அரசியல் நடத்துகின்றார்கள்: அருண் தம்பிமுத்து!

Tuesday, January 06, 2015
இலங்கை::கிழக்கு தமிழர்களின் தேவைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் புறக்கணித்து அரசியல் நடத்துகின்றார்கள் என்ற உண்மையை கிழக்குத் தமிழர்கள் உணர்ந்து தாங்கள் தமது தேவைக்காக தனித்துவமான சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஷ

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:-

என்னால் அச்சிடப்பட்டு உருவாக்;கப்பட்ட ஒன்றரை இலட்சம் பிரதிகளைக்கொண்ட பிரசுரம் எதிர்க்கட்சியினரால் சூறையாடப்பட்டிருக்கின்றது. அந்தப் பிரசுரத்தை தொலைக்காட்சியில் தமிழருக்கும் மாற்று சமூகத்திற்குமிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தும் முயற்சியாக சிலர் வர்ணித்திருக்கின்றார்கள். நான் தமிழர்களின் இன்றைய நிலையை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே நான் இந்த பிரசுரத்தை எனது சொந்த முயற்சியாக வெளியிட்டேன்.

கிழக்குத் தமிழர்களாகிய நாம் எமது நிலையை உணராவிட்டால் எமது எதிர்காலம் மண்ணோடு மண்ணாகிவிடும் என்ற தலையங்கத்துடன் இந்தப் பிரசுரம் வெளியிடப்பட்டது. இந்தப் பிரசுரத்தில் நான் யார், ஏன் அரசியலுக்கு வந்தேன் கிழக்கு மாகாணத்தில் அரசியல் மாற்றங்கள் எப்படி வரவேண்டும் என எனது கருத்தையே முன்வைத்தேன்.

கிழக்குத்தமிழரின் பரிதாப நிலையையும் கிழக்குத் தமிழரின் வீழ்ச்சியை தமக்கு சாதகமாக்கிய முஸ்லிம் தலைமைகளைப் பற்றியும் இதில் எழுதியிருக்கின்றேன். இங்குள்ள யதார்த்த நிலையைப் பற்றி எழுதியிருக்கின்றேன். கிழக்கு மாகாணசபையில், பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற இணக்கப்பாட்டு அரசியல் மற்றும் எதிர்ப்பு அரசியலை ஒரு அட்டவணை மூலம் காட்டியிருக்கின்றேன். கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளைப் பற்றி எழுதியிருக்கின்றேன்.

இன்று காணி, வேலைவாய்ப்பு, மற்றும் பதவி உயர்வு போன்ற விடயங்களில் கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தௌ;ளத்தெளிவாக எழுதியிருக்கின்றேன். கிழக்குத் தமிழரின் குடிப்பரம்பல் எப்படியிருக்கின்றது என்பதை வரைபடம் மூலம் காட்டியிருக்கின்றேன்.

இந்தத் தேர்தலில் எமது மக்கள் எடுக்கப்போகும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் எமது மக்கள் எடுத்த முடிவுகள் எமக்கு சாதகமாக இருக்கவில்லையென எனது தனிப்பட்ட கருத்தை முன்வைத்து எனது கையொப்பத்தையும் வைத்திருக்கின்றேன்.

எமது நாடு சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களாகிய நாம் அறுபத்தெட்டு சதவீதமாக காணப்பட்டோம். ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த 1976ஆம்ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனம் முன்வைக்கப்பட்ட காலத்தில் ஐம்பத்தொரு சதவீதமாக காணப்பட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 1987ஆம்ஆண்டில் நாற்பத்திநான்கு வீதமாக காணப்பட்டோம். 2014ஆம் ஆண்டு முப்பத்துநான்கு சதவீதமாக காணப்படுகிறோம். இது ஆபத்தான நிலையாகும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் நாற்பத்தொரு சதவீதமாக காணப்படுகின்றனர். வேலைவாய்ப்பின்றி எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளிற்கு செல்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் இருக்கவேண்டும். இந்த உரிமையை எவரும் தட்டிப்பறிக்க முடியாது. இவ்விடயத்தை அனைவரும் அறியவேண்டும்.

எமக்காக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையில் இன்று நாங்கள் பார்வையாளர்களாக இருக்கின்றோம். இந்நிலையை மாற்றவேண்டுமானால் நாம் தொடர்ச்சியாக தோல்வியடையும் தலைவர்கள் பக்கம் இருக்கக்கூடாது ஆகவே சிந்தித்து செயற்படவேண்டும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்தவே நான் அப்பிரசுரத்தை உருவாக்கினேன். இப்பிரசுரத்தை தமிழர்கள் பார்த்து எமது நிலையை உணரவேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப்போவதாக தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றார்கள். அவர்கள் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேவையற்ற முறையில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்தார்கள். அதேபோல் இம்முறையும் எந்தவித நிபந்தனையுமில்லாமல் மைத்திரிபாலவிற்கு ஆதரவு அளித்திருக்கின்றார்கள்.

அப்படி அவர்கள் செய்யவேண்டிய தேவைதான் என்ன?  தமிழர்களுக்கு மாற்றுவழி உருவாகவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் சாணக்கியமான அரசியலை முன்னெடுக்கவேண்டுமே தவிர வெறுமனே அவர்களை ஆட்டிப்படைக்கும் எஜமான்கள் சொல்லும் வேலைகளை மட்டு;ம் செய்வதால் தமிழர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்த முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக தமிழர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் செயற்பட்டுவருகின்றனர்.

கிழக்கு மாகாண தமிழர்களின் நிலையை உணராமல் செயற்பட்டுவருகின்றனர்.
கடந்த நான்கு வருடங்களாக நான் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் காணி பொலிஸ் அதிகாரங்களை கிழக்கு மாகாணசபைக்கு கொடுக்க முடியாது கொடுக்கக்கூடாது என்று கூறிவந்திருக்கின்றேன். காரணம் என்னவெனில் தமிழர்கள் ஆளாத ஆள இயலாத கிழக்கு மாகாணசபையில் இந்த அதிகாரங்கள் இருக்குமானால் தமிழர்களின் எதிர்காலம் சின்னாபின்னமாகிவிடும் என்ற அச்சமே ஆகும்.

இதை உணராத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் காணி பொலிஸ் அதிகாரங்கள் கிழக்கு மாகாணசபைக்கு வேண்டுமென்று கூறுகின்றனர். வடக்கு கிழக்கு இணையாத நிலையில் கிழக்குமாகாண மக்கள் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை அனுபவிக்க முடியாது என்ற விடயத்தை உணராமல் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள். கிழக்கு தமிழர்களின் தேவைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் புறக்கணித்து அரசியல் நடத்துகின்றார்கள் என்ற உண்மையை கிழக்குத் தமிழர்கள் உணர்ந்து தாங்கள் தமது தேவைக்காக தனித்துவமான சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.
  
 

No comments:

Post a Comment