Thursday, January 01, 2015
சென்னை::சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 53 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
சென்னை மெரீனா கடற்கரைக்கு ஆண்டு தோறும் மக்கள் ஏராளமானோர் கூடி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இதனால் இந்த ஆண்டும் கடற்கரையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். நேற்று இரவு 10 மணி முதல் மெரீனாவுக்கு மக்கள் வரத் தொடங்கினர்.
இதையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சரியாக 12 மணி அளவில் கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து கோஷங்களை முழங்கி புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, இனிப்புகளையும் பறிமாறிக் கொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் மாநகர சாலைகளில் 300 இடங்களைக் கண்டறிந்து அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
வழக்கமாக குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார் நேற்று, புத்தாண்டு என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர். சிலரின் உறவினர்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஜி.என்.டி.ரோடு, பூந்தமல்லி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் நேற்று இரவு விபத்து எதுவும் நடக்கவில்லை.
ஆனால், சிறிய சாலைகளில் மட்டும் 83 இடங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 53 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் ஸ்டான்லி, கே.எம்.சி., ராயப்பேட்டை, ராஜீவ்காந்தி மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment