Thursday, January 1, 2015

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஒரே ஆண்டில் 550 முறை அத்துமீறிய பாகிஸ்தான்!

Thursday, January 01, 2015
ஜம்மு::இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் ஒப்பந்தத்தை மீறி, எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 550 முறை பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறி செயல்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அடிக்கடி  நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்திய ராணுவ முகாமுக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள்  உயிரிழந்தனர். ஊடுருவிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலும் அதிகரித்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை கட்டுப்பாட்டு  பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலால் எல்லை  பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமத்தை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற  அத்துமீறல்களை நிறுத்திக் கொள்ளுமாறு இந்தியா தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் கண்டுகொள்வதில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள புலன்வாலா பகுதியில் நேற்று முன்தினம்  இரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். சம்பா மாவட்ட பகுதியில் நேற்று காலை பாகிஸ்தான்  ராணுவம், இந்திய நிலைகளை குறி வைத்து தாக்கியது. அப்போது ரோந்து சென்ற பாதுகாப்பு படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வீரருக்கு காயம்  ஏற்பட்டது. தொடர்ந்து அத்துமீறி வரும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நேற்று பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 4 பேர்  உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்தியாவின் அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் ராணுவத்தினரால் எதிர்கொள்ள முடியவில்லை. பாதுகாப்பு  படையினரை நோக்கி அவர்கள் வெள்ளை கொடியை அசைத்தனர். இதையடுத்து சண்டை நிறுத்தி கொள்ளப்பட்டது.

கடந்த 2003ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் ஒப்பந்தத்தை மீறி, எல்லை கட்டுப்பாட்டு  பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அந்நாட்டு ராணுவம் 550 முறை அத்துமீறி உள்ளது  குறிப்பிடத்தக்கது. -

No comments:

Post a Comment