Tuesday, December 30, 2014

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் : 2 பேர் சிக்கினர்!

Tuesday, December 30, 2014      
ராமேஸ்வரம்::தனுஷ்கோடியில் 2.3 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் சிக்கினர். ராமநாதபுரம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு கியூபிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கைப்பற்றியதாகவும், இருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதே இரவில் ராமேஸ்வரம் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் கடத்தல் தங்கத்தை கைப்பற்றியதாக தகவல் வந்தது.
 
இந்நிலையில் நேற்று மதியம் ராமேஸ்வரம் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் உதவி கமிஷனர்கள் அல்லாபிச்சை, தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலையில் சிறிதும், பெரிதுமாக 8 தங்க கட்டிகளை அதிகாரிகள் நிருபர்களின் பார்வைக்கு வைத்தனர். 2 கிலோ 300 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கத்தை கைப்பற்றியதாகவும், சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
 
பிடிபட்டவர்களின் பெயர்களைக்கூட தெரிவிக்க மறுத்தனர். நேற்று மாலை 6 மணி வரை கூடுதல் தகவல் எதையும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.  இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியை சேர்ந்த முருகவேல், முன்னாள் கடத்தல் புள்ளி டெனிஸ்டன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருவதாக புலனாய்வு துறையினர் தெரிவித்தனர். டெனிஸ்டன் பல்வேறு கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார்.
 
கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. முதலில் கியூபிரிவு போலீசார் ஒரு கிலோ தங்கத்தையும், 2 பேரையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியானது. காலையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் 2 கிலோ 300 கிராம் தங்கத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். கியூபிரிவு போலீசார் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் தங்கமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லை முழு தங்கத்தையும் கஸ்டம்ஸ் அதிகாரிகளே கைப்பற்றினார்களா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

No comments:

Post a Comment